சிறப்பு கட்டுரைகள்

உழவை மீட்போம் உழர்வகளுக்கு உறுதுணையாக நிற்போம்

செய்திப்பிரிவு

‘கல்லூரிக் கல்வி தேடல் பயணம்’ என்ற திட்டத்தை எங்கள் பள்ளி முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு எங்கள் பள்ளியில் படிக்கும் 48 பிளஸ் 2 மாணவர்களை அழைத்துக் கொண்டு 4 ஆசிரியர்கள் நவம்பர் 30 அன்று புறப்பட்டோம்.

கல்லூரியின் நெல் வயல்களை பார்த்ததும் மாணவர்களின் மனதில் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. அவர்களுக்குள் உரையாடல் ஆரம்பமானது. கற்றால் இங்குதான் மேற்படிப்பைக் கற்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது.

கல்லூரியின் அக்கிரானமி துறைபேராசிரியர் டாக்டர் T. ரமேஷ் எங்களை இன்முகத்துடன் வரவேற்றுB.Sc Hons குறித்து விரிவான உரையாடலை நிகழ்த்தினார். பிளஸ்2 முடித்ததும் அக்ரி படிப்பதற்கு மாணவர்கள் எவ்வளவு கட் ஆப்மதிப்பெண் வாங்க வேண்டும், ஒருமாணவர் கணிதத்தில் 98, இயற்பியலில் 97, வேதியியலில் 95, உயிரியலில் 100 மதிப்பெண்ணைப் பெற்றிருந்தால் இவற்றின் கூட்டுத்தொகை 390 அதை இரண்டால் வகுத்தால் கிடைப்பதுதான் (195 / 200) ஆப் மதிப்பெண் என்று விளக்கினார். மேலும் இப்படிப்பில் சேர கட்டாயமாக எழுத வேண்டிய ஐசிஏஆர் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட மேலதிக தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டது.

செய்தித்தாள் வாசிப்பின் பலன்: அக்ரி படிப்பை படித்தால் அரசு கல்லூரியில்தான் படிக்க வேண்டும். ஏனென்றால் அங்குதான் இப்படிப்புக்குத் தேவையான வசதிகள் நிறைவாக உள்ளது என்றும் கூறியவர். அதனைத் தொடர்ந்து செய்தித்தாள் படிக்கும் வழக்கம் உள்ளவர்கள் 21 வயதில் வேலைக்குச் சென்று விடுவதாகவும், படிக்காதவர்கள் 30 வயதில் கூட வேலை இல்லாமல் இருப்பதாகவும் கூறி செய்தித்தாள் வாசிப்பின் முக்கியத்துவத்தை இங்கு பதிவு செய்தார்.

வேளாண்மை கல்லூரியில் படித்து வெற்றி கண்ட ஆளுமைகளின் பட்டியலை அவர் வாசித்தபோது மெய் சிலிர்த்தது. கோயமுத்தூரில் உள்ள அரசு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அதாவது திருச்சி, மதுரை, கில்லி, குளம், வாழவச்சனூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு கல்லூரியில் 100 இடங்கள் இருப்பதாகவும் 15 சதவீதம் ICAR என்ற நுழைவுத் தேர்வு வழியாகவும், மீதமுள்ள இடங்களை கட் ஆப் மூலமாகவும் நிரப்புவதாக கூறினார். அக்ரி ஹான்ஸ், ஹார்ட்டிகல்ச்சர், செரி கல்ச்சர், பி.டெக்., அக்ரி, பி.எஸ்சி., ஹான்ஸ் அக்ரிகல்ச்சர் மேனேஜ்மென்ட் என்று அதன் பட்டைய படிப்புகளையும் தெளிவாக விளக்கினார்.

பேரா முதல் அதிகாரி வரை: தமது உரையின் நிறைவாக வேளாண் கல்லூரியில் படித்தால் தம் வாழ்க்கையில் இதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதையும் மறவாது குறிப்பிட்டார். அவற்றில் மிகமுக்கியமாக, யூபிஎஸ்சி அதிகாரி, விவசாய அலுவலர், விவசாய கல்லூரியில் ஆசிரியர் ஆவதற்கும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கவும், டிஎன்பிஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயார்ப்படுத்திக் கொள்ளவும் பி.எஸ்சி., அக்ரி சிறந்த படிப்பாக அமையும் என்பதை மாணவர்களுக்கு புரிய வைத்தார். இது மட்டுமல்லாமல் தொழில்முனைவோராக ஒரு மாணவர் மாறுவதற்கான சாத்தியம் மிக்க கல்வியாக இதனைப் பார்க்கலாம் என்று பதிவிட்டார்.

கல்லூரி வளாகத்தில் கண்டு மகிழ்ந்தவை: இந்த கல்வி தேடல் பயணத்தின் மூலம் மாணவர்கள், காற்று வீசும் திசையையும் வேகத்தையும் அறியும் அணிமோ மீட்டரையும், வெப்பத்தை அளவிடும் தெர்மாமீட்டரையும், மண்புழு மூலம் உரம் தயாரித்தலையும்,

தேனீ வளர்ப்பு முறையையும், பட்டுப்புழு வளர்ப்பு முறையையும், ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறையையும் நேரில் கண்டு மகிழ்ந்தார்கள். நான்கு சுவர்கள் கொண்ட வகுப்பறையில் படிப்பதை விட நேரில் பார்த்து அனுபவப்பூர்வமாக உணர்ந்து கற்பதை மாணவர்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்தோம்.

- கட்டுரையாளர்: ஆசிரியர், விலங்கியல் துறை, எஸ்.ஆர்.வி. மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, சமயபுரம்.

SCROLL FOR NEXT