சிறப்பு கட்டுரைகள்

கதை சொல்லுங்க

செய்திப்பிரிவு

கதைகள் கேட்டு வளர்ந்த மராட்டிய வீரர் சிவாஜி மாவீரன் ஆனார். பஞ்ச தந்திர கதை கேட்ட அறிவற்ற இளவரசர்கள் புத்திசாலி ஆனார்கள். அரிச்சந்திர கதை கேட்ட காந்தியடிகள் வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசினார். இப்போது என்ன செய்கிறோம்? தாத்தா பாட்டிகளுக்கு பதிலாக யார் கதை சொல்கிறார்கள்? கதைகள் சொல்ல அம்மா, அப்பாவிற்கு நேரம் இருக்கிறதா? அல்லது சொல்லும் எண்ணமாவது இருக்கிறதா?

அழும் குழந்தையை சமாதானப் படுத்த அலைபேசியை கொடுத்து விடுகிறோம். ஆங்கிரி பேர்டும், வீடியோ கேமும் பார்த்து வளரும் குழந்தை எப்படி அன்பைக் கற்றுக் கொள்ளும்? தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, ஆசிரியர் கதை சொல்லும்போது கிடைக்கின்ற உணர்வை அலைபேசி செயலியால் தர முடியாது.

மடியில் அமர்ந்து, தோளை உரசிஓராயிரம் கேள்விகள் தொடுத்து கதை கேட்கும் ஆனந்தம் மின்னணு சாதனத்தில் கிடைக்காது. கதையானது கோபக்கார, சேட்டை செய்யும் குழந்தைகளைக்கூட திசை திருப்பும். நேர்மை, உண்மை, அன்பு, கருணை, இரக்கம், நல்லது, கெட்டது, பிறர் பொருளை விரும்பாமை போன்றவற்றை கதைகள் மூலம் எளிதில் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

வீட்டில் அனைவரிடமும் கதைகேட்டு வளரும் சிறார்கள் எல்லோரி டமும் தயக்கமின்றி கலகலப்பாய் பேசும் இயல்பை பெறுகின்றனர். கதைகள் கற்பனைத் திறனை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்பாற்றலையும் தூண்டுகிறது. படைப்பாற்றல் மிக்கவர்களின் கவனம் திசை திரும்புவது இல்லை. கதைகள் மகிழ்ச்சியை ஊட்டுவதுடன் அறிவையும், சிந்தனைத் திறனையும் வளர்க்கின்றன. விதவிதமான கற்பனைகள் விஞ்ஞான வளர்ச்சிக்கும் வழிகோலுகின்றன. கதைகள் மனவளத்தை பேணும். கதைகள் கேட்டு வளர்பவர்கள் புத்தகம் வாசிப்பவர்களாக மாறுகிறார்கள்.

எந்த குழந்தையும் தானாக புத்தகம் படிக்க ஆரம்பிக்காது. முதலில் வீட்டில் புத்தகப் பழக்கம் சூழல் இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் புத்தகம் படித்தால் குழந்தையும் தூண்டப்படும். எழுத்துகள் அறிமுகம் ஆகும் போதே புத்தகங்களில் உள்ள எழுத்துகளை அடையாளம் காண்பிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.

தானாக படிக்கத் தெரியாத குழந்தைகளுக்கு கண்ணை கவரும் படங்களுடன் இருக்கும் புத்தகத்தை வாசித்துக் காண்பிக்கலாம். பள்ளியில் மழலையர் வகுப்புகளுக்கு மட்டுமல்லாமல் 5-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் தினமும் ஒரு கதையாவது கட்டாயம் ஆசிரியர் சொல்ல வேண்டும்.

வீரமும், அறமும், வாழ்வும் கதைகளில் வெளிப்படும். கதை இயற்கை பற்றியும் இயம்பும். வரலாற்று செய்திகளும் பதிந்தும் இருக்கும். கதைகள் சொற்களஞ்சியங்களாக விளங்குகின்றன. வட்டார வழக்குகள், வழக்கொழிந்து போன சொற்கள்கூட பொதிந்து இருக்கும்.

ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கதை கடத்தப்படும்போது வாழ்வியலையும் சேர்த்துகடத்துகிறது. வாழ்வின் துன்பவியலை கடந்து சென்ற அனுபவம்கூட கதைகளின் இருக்கும். தோற்றுப்போனவன் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

கதைகள் ஆற்றலின் ஊற்று, வாழ்ந்ததை, வாழ்வதை, வாழப் போவதை எடுத்துரைக்கும் பலவிதமான கதைகள் நம்மிடையே உண்டு. கதைகள் புத்தகங்களை நோக்கி நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் குழந்தைகள் உலகம் மிகவும் அழகானது. வண்ணமயமானது. அதைக் கதைகளால் மேலும் மெருகூட்டுங்கள். நல்லொழுக்கத்தை கதைகள் வாயிலாகத்தான் குழந்தைகளின் மனதில் பதியவைக்க வேண்டும். எனவே, மறவாமல் திகட்ட திகட்ட தினமும் நம் குழந்தைகளுக்கு கதை சொல்வோம். - கட்டுரையாளர் எழுத்தாளர், நவபாரத் வித்யாலயா பள்ளி முதல்வர், இ.வெள்ளனூர், திருச்சி.

SCROLL FOR NEXT