சிறப்பு கட்டுரைகள்

ஆளுமைத்திறன் வளர்க்கும் புதிய ஆத்திசூடி | பாரதியார் பிறந்த நாள் 140

இரா.முரளி

நன்றாகப் பேசுவது, நாகரிகமாக நடை உடை பாவனைகள், முடிவு எடுக்கும் திறன், நேர மேலாண்மைத் திறன், புத்தி சாதுர்யம் போன்ற குணங்களை வளர்ப்பதே ஆளுமைத் திறன் வளர்ச்சி என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. இவற்றை வளர்த்துக் கொள்ள சிறப்புப் பயிற்சிகளும் பள்ளி, கல்லூரிகளில் வழங் கப்பட்டு வருகின்றன.

என்னதான் பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், அவை நீடித்து நிற்பதில்லை. நீங்கள் திறமையான பேச்சாளராக இருக்கலாம் அல்லது நல்ல மதிப்பெண் பெறுபவராகக் கூட இருக்கலாம். அழகானவராகவும் இருக்கக் கூடும். ஆனால், இவையெல்லாம் நல்ல ஆளுமையின் உண்மைத் தன்மைகளல்ல.

நல்ல ஆளுமை என்பதுதான் என்ன? - அதிகத் திறன்களைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி தேவைப்படுவது வாழ்க்கையைப் பற் றிய புரிதல். எவர் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொண்டாரோ அவர் கொடுக்கும் வழிகாட்டல்தான் சரியான திசையில் நம்மை கூட்டிச்செல்லும். அவை அறிவாகத் திணிக்கப்படாமல், மனதின் உணர்வாக ஊட்டப்படும். அப்படிப்பட்ட வெகு சிலரில் ஒரு முக்கியமான தீர்க்கதரிசிதான் பாரதியார். அவர் மனித வாழ்வின் எல்லா பரிமாணங்கள் பற்றியும் ஆழமாக உணர்ந்திருந்தார் என்பதற்கு அவரின் வாழ்வும், கவிதைகளும் சாட்சி.

அவர் ஆளுமையின் அடிப்படையாகக் காண்பது என்ன தெரியுமா? அற உணர்வைத்தான்! எது அறம்என்பதை அறிவதே சரியான அறிவு. அதைப் பெற மனதில் உறுதி வேண்டும். நல்லவையே நினைக்க வேண்டும். இவையே வாக்கினில் இனிமையைக் கொடுக்க வல்லவை என்கின்றார். பேச்சாற்றல், தொடர்பு ஆற்றல் போன்றவற்றுக்கான பயிற்சி எல்லாம் தற்காலிகமான பலன்களையே கொடுக்கும்.

பாரதி இதனால்தான் உண்மை நின்றிடவேண்டும் என்றார். உண்மை என்பது பல ரூபங்களில் மறைந்திருக்கும். உண்மையை அறிந்தவர் எளிதாக பிரச்சினைகளைக் கையாள முடியும். அவர்கள் வாக்கினில் தெளிவு உண்டாகும் என்கிறார் பாரதி. பயம் கொள்ளலாகாது பாப்பா பாடலாகட்டும், பாதகரைக் கண்டால் மோதி மிதித்து விடுவதாகட்டும், அவர் ஆளுமையை சாந்தமான தன்மையோடு வளர்ப்பதை ஆதரித்தவர் அல்லர். அவர் வீரியமான ஆளுமை வளர்ச்சியையே போற்றினார்.

விரும்பி உண், ரெளத்திரம் பழகு: பல பாடல்களில் பாரதி ஆளுமை மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை ஆணித்தரமாக சொல்லியிருந்தாலும் அவரின் புதிய ஆத்திசூடி இதற்கான சிறப்பு கையேடு ஆகும். அச்சம் தவிர் என்று தொடங்கும் இந்த புதிய ஆத்திசூடி வலியுறுத்துவதில் சிலவற்றைப் படித்தாலே உணர்வுகளில் அவை கலக்கும். மன உறுதியோடு உடல் உறுதியையும் தொடர்ந்து பாரதி வலியுறுத்துகிறார். அதற்கு ஊண் மிக விரும்பு என்று உணவை விருப்பத்துடன் உண்ணச் சொல்லுவார்.

ஒரு புறம் உடலினை உறுதி செய் எனும் பாரதி மறுபுறம் மரணத்துக்கு அஞ்சாதே என்றும் ஆர்ப்பரிக்கின்றார். தன்னை மரணம் நெருங்கிய தருணத்திலும் "காலா வாடா உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என்று மரண பயத்தை வென்று காட்டினார். இறப்பைக் கூட கண்டு பயப்படாத ஞானத் தெளிவு அவர் ஆளுமையின் சிறப்பு. அப்படிப்பட்ட ஆளுமையைப் பெற, தாழ்ந்து அடிமையாக வாழாமல் தீயோரின் கொடுமைகளை எதிர்க்கும் ரௌத்திரம் பழக வேண்டும் என்கிறார்.

புதியன செய் என்றும் அதே போல் நேர்பட பேசு என்பன போன்று பல பண்புகளை முன்வைக்கும் பாரதி இவற்றையெல்லாம் ஒருவர் பெற வேண்டுமெனில் அவர் தன்னை முழுமையாக அறியவேண்டும் என்றும் தன்னுள்ளும் கடவுள் இருக்கிறார் என்பதை அறிவதே அடிப்படை என்கின்றார்.

பாரதியின் புதிய ஆத்திசூடியின் ஒவ்வொரு வரியும் பரந்த மனமும், அச்சமற்ற குணமும், சுயமரியாதையைக் காக்கும் திறனும், நீதியை அறியும் பகுத்தறிவும், யாவரையும் மதித்து வாழும் பண்பும் ஆளுமை வளர்ச்சியின் அடித்தளம் என்பதைத் தெறிப்புடன் விளக்குகின்றன. ஒரு மாணவர் இதை சிலமுறை ஊன்றிப் படித்தால், ஆளுமைத் திறனுக்கு எந்தத் தனிப் பயிற்சியும் தேவைப்படாது. - கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற பேராசிரியர், தத்துவத் துறை, மதுரை.

SCROLL FOR NEXT