"சொல்லுங்கள் நான் மறந்துவிடுகிறேன் ,
சொல்லிக்கொடுங்கள்
நான் என் நினைவில் வைத்திருக்கக்கூடும் ,
ஈடுபடுத்துங்கள் நான் கற்றுக்கொள்கிறேன்".
கற்றலின் சிறப்பை உணர்த்திய வரிகள். மகிழ்ச்சியான கற்றல் பயண அனுபவமாக...கற்றலின் பரிமாணங்கள் எங்களுடைய மாண வர்களின் அன்றாட நிகழ்வுகள். கனவு ஆசிரி யர்கள் எங்கள் பள்ளியின் அச்சாணிகள்.
தன்னம்பிக்கை: நான் தமிழ் ஆசிரியர், உணவுத் திருவிழா, விதைத் திருவிழா, இசைக்கருவிகள் கண்காட்சி மற்றும் களிமண் நாள் போன்ற நிகழ்வுகள் கற்றலின் நீட்சி. கற்றல் என்பது இங்கு ஒரு சுகமான அனுபவமாக உணரப்படுகிறது. அதுவே சுகமான பயணமாக ஆகும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி. "நான் தமிழாசிரியர்" என்ற நிகழ்வில் என் மாணவரின் மனதில் தன்னம்பிக்கை விதை விதைக்கப்பட்டிருந்தது.
வரும் ஆண்டுகளில் மாணவர்கள் நல்ல ஆசிரியராக வருவதற்கான தைரியம் துளிர்த்தது போன்ற ஒரு உணர்வு. நம்முடைடைய கனவு ஆசிரியர்களாக, அவர்கள் பாடம் நடத்திய நேர்த்தி புதிய கற்றல் அனுபவம்.
எங்களுடைய உணவுத் திருவிழா பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பின் கற்றல் பரிமாணம். தனது ஆசிரியர்களுக்கு அறுசுவை உணவளித்து, தன்பசி பொறுத்து, எஞ்சியுள்ள உணவை நேயத்துடன் சக மாணவர்களுடன் பாதிப் பசியை மட்டும் போக்கிக்கொண்டது ஆகச் சிறந்த கற்றல்தானே. வாழ்க்கை கல்விதனை கற்றுக் கொண்டான் என் மாணவன். அருகிலிருந்து ரசிக்கும் ஆகச்சிறந்த ஆசிரியர்கள்.
உணர்வுப்பூர்வமான அனுபவம்: இசைக்கருவிகளின் கண்காட்சி, ஈடுபடுத்திக் கற்றலின் உன்னதம். கற்றுக் கொடுத்தலைவிட கற்றலை உணர்வுப்பூர்வமான அனுபவமாக மாற்றிய கோமாளிகள் என் ஆசிரியர்கள்.
அங்கே நடந்த விநாடி வினாவில் பதில்கள் ஒளிக்கீற்றாய் உடனே கற்றல் வேறுபாடின்றி நிகழ்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தோம். எம் பள்ளியின் களிமண் நாள் நிகழ்வுகளாக குயவன் ஒரு நாள் ஆசானாக ஆகியிருந்த அதிசயம். குயவன் பானை செய்த நேர்த்தி தொட்டுக் கற்றலின் சுகத்தை உணர்த்தியது.
கற்றல் என்பது பட்டமல்ல. ஆனால் பெற்ற அனுபவம், களிமண் எங்கள் குழந்தைகளோடு பேசியதாக உணர்ந்தோம். கற்றல் புத்தகங்களின் பக்கங்களின் மட்டுமல்ல. மண்பாண்டம் மற்றும் பண்டைய மரபுகளிலும் இருப்பது உண்மை.
விதைத் திருவிழாவா? என்ன விந்தை? விதைப்பந்து விளையாட்டாக நடந்தது. விதைக்கதை விவாதங்கள் அரங்கேறியது. உணவு வகைகள் உடன்சேர்ந்து உட்கார்ந்து கொண்டது. அப்புறமென்ன ஒரே கொண்டாட்டம்தான்.
கற்றலின் அச்சாணியாக மாணவன், ஆசிரியர் மற்றும் பெற்றோர்- கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றிக் கொடி. தொடர்ந்து பறக்கும் . - ப.முருகதாசன், கட்டுரையாளர் முதல்வர்,எஸ்.ஆர்.வி.சீனீயர் செகன்டரிபப்ளிக் பள்ளி. திருச்சி.