காரைக்கால்: குடியரசு முன்னாள் தலைவர் ராஜேந்திர பிரசாத் குறித்து, காரைக்காலைச் சேர்ந்த பள்ளி மாணவி எஸ்.தானியா டெல்லி நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றி காரைக்காலுக்கும், புதுச்சேரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பிரைடு (Parliamentary Research and Training Institute for Democracies) அமைப்பு சார்பில் மத்திய கல்வித் துறையுடன் இணைந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இளை யோருக்கு தெரிவிக்கும் விதமாக தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்து நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து நேரடியாக விளக்கம் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 2 பயின்று வரும், காரைக்கால் மாவட்டம் கருக்களாச்சேரியை சேர்ந்த சங்கரின் மகள் தானியா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டு, கடந்த 3-ம் தேதி டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில், குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று ராஜேந்திர பிரசாத் குறித்தும், அவரது பெருமைகள், தேசத்துக்கு அவர் ஆற்றிய சேவைகள் உள்ளிட்டவை குறித்தும் இரண்டரை நிமிடங்கள் தமிழில் உரையாற்றினார்.
இதுகுறித்து மாணவி எஸ்.தானியா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். கடந்த 2020-21-ம் கல்வியாண்டில், எந்தெந்த மாணவர்கள் என்ன மாதிரியான சாதனைகள் செய்துள்ளனர், பிற துறைகளில் என்ன தனித்திறன்கள் பெற்றுள்ளனர் என்பது குறித்து மத்திய கல்வித்துறை மூலம் நான் படித்து வரும் கேந்திரிய வித்யாலாயாவில் கேட்கப்பட்டிருந்தது. பெண்களுக்கான கிரிக்கெட், ஓவியத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருந்தேன். மேலும் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தேன். அதனடிப்படையில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.
இதுபோல தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து நான் உட்பட மொத்தம் 27 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டோம். புதுச்சேரி, தமிழகத்துக்கும் சேர்த்து நான் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். இவர்களில் 13 பேர் ராஜேந்திர பிரசாத் குறித்து உரையாற்றவும், மற்றவர்கள் நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்கவும் அழைக்கப்பட்டனர்.
எங்களை கவுரவிக்கவும், நாடாளுமன்றத்தில் உள்ள இடங்களை பார்க்கவும்தான் தேர்வு செய்யப்பட்டோம். பின்னர் ராஜேந்திர பிரசாத் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசுவதற்கான வாய்ப்பளிப்பது குறித்து முடிவு செய்தனர்.இதையடுத்து நடந்த கூகுள் மீட் நிகழ்வில் நாங்கள் பேசவுள்ள கருத்துகள் குறித்து கேட்டறிந்து அதனடிப்படையில் நான் உட்பட 13 பேர் பேசுவதற்காக தேர்வு செய்யப்பட்டோம்.
கடந்த 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் தமிழ் மொழியிலும், ஒரு மாணவர் கன்னடத்திலும், மற்றவர்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் குறித்து பேசினோம். 27 பேர் தேர்வு செய்யப்பட்டதில் ஒருவர் பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற நிகழ்ச்சியில் நான் பேசியது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது என்றார்.