சிறப்பு கட்டுரைகள்

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பயன்கள்: ஆய்வில் இறங்கியுள்ளது பள்ளிக் கல்வித்துறை

செய்திப்பிரிவு

தொடக்கநிலை வகுப்புகள் (1-5) கற்பிக்கும் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முடிந்த நிலையில் அவர்களுக்கான ஐந்தாம் தொகுதி கையேடு வழங்கப்பட்டு வருகிறது.

முதலில் "முன்னறித் தேர்வு" நடத்தி முடிக்கப்பட்ட பின்பு கற்பித்தல்பணியை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மாணவர்களின் "அடைவுத்திறன்" (Achievement) அட்டவணை இடம்பெறுதல் கட்டாயமாக்கப்பட் டுள்ளது.

5-வது கையேடு: மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்கி மொழி மற்றும் கணித பாடங்களில் அடிப்படை திறன்களை பெறும் வகையில் 5-ம் தொகுதி கையேடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தன்னார்வலர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

முன்னறிவுத் தேர்வு, அலகுகள், அடைவுத்திறன் அட்டவணை, கற்பித்தல் நேரம், பயிற்சி நேரம், மதிப்பீடு என்கின்ற படி நிலைகளில் கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக முன்னறித் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மாணவர்களின் கற்றல் விளைவுகளை குறிப்பிட அடைவு திறன் அட்டவணையும் வழங்கப்பட்டு மையத்தில்இடம் பெறுதல் கட்டாயமாக்கப்பட் டுள்ளது.

முன்னறித் தேர்வு; ஒவ்வொரு பாடத்திலும் குழந்தைகளின் கற்றல் நிலையை அறிய முன்னறிவிப்பு தேர்வு நடத்தப்பட வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 1 முதல் 20 வரையிலான வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு மாணவன் தமிழ், கணக்கு பாடங்களில் முதல் 10 வினாக்களுக்கும், ஆங்கில பாடத்தில் முதல் 5 வினாக்களுக்கும் விடையளித்தால் மட்டும் போதும்.

வினாத்தாள் பிரதி எடுத்து வழங்கியோ, கரும்பலகையில் எழுதிப்போட்டோ தேர்வை தன்னார்வலர்கள்சரியாக நடத்த வேண்டும். முன்னறிவுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கண்டறியப்பட்ட இடர்பாடுகளுக்கு தகுந்த கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் பயிற்சி: ஒவ்வொரு மாணவரின் கற்றல் நிலைக்கேற்ப அனைத்து அடிப்படை திறன்களையும் மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். கற்றல் விளைவுகளை அடையாத மாணவர்களுக்கு மீண்டும், மீண்டும் பயிற்சி அளித்து கற்றல் திறனடைய செய்ய வேண்டும் என கையேடு வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு அலகிலும் கற்றல் திறனை அடையும் வரை தன்னார் வலர்கள் தேவையான கால அளவு எடுத்துக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்.

அடைவு திறன் அட்டவணை: ஒவ்வொரு மையத்திலும் மாணவ, மாணவிகள் பெயர் எழுதப்பட்ட அடைவு திறன் அட்டவணை இடம் பெற வேண்டும்.

தமிழ் பாடத்தில் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் அடையாளம் காணுதல், ஒலித்தல், எழுதுதல் ஆகிய திறன்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடத்தில் நான்கு அலகில் 16 திறன்களை (Learning Outcome) முடிக்க வேண்டும். ஒவ்வொரு திறனையும் மாணவர்கள் மதிப்பீடு வாயிலாக முடிக்கும் போது அட்டவணையில் டிக் (ü) குறியீடு இட வேண்டும்.

ஆங்கில பாடத்தில் 6 அலகுகளில் 24 கற்றல் திறன்களை பெற்றிருக்க வேண்டும். கணக்கு பாடத்தில் 1-20 எண்களில் 5 அலகுகளில் 5 கற்றல் விளைவுகளை (L.O) நிறைவு செய்ய வேண்டும். கற்பித்தல் மற்றும் பயிற்சி நேரத்தில் தனிநபர் செயல்பாடு, குழு செயல்பாடு வாயிலாக டிசம்பர் மாதத்துக்குள் இந்த இலக்கை மாணவர்கள் எட்டுவதற்கு தன்னார்வலர்கள் உறுதி எடுக்க வேண்டும். - கட்டுரையாளர்: ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம். ஆத்தூர் ஒன்றியம். திண்டுக்கல் மாவட்டம்

SCROLL FOR NEXT