சிறப்பு கட்டுரைகள்

மறதியும் ஆற்றலே

செய்திப்பிரிவு

படித்தவைகள் நினைவில் நிற்பது என்பது மிகப் பெரிய பொக்கிஷம். நினைவாற்றல் என்பது மாணவர்களுக்கு புதையல் என்றே சொல்லலாம். புதையல் கிடைத்த ஒருவர் எவ்வளவு மகிழ்வாரோ அப்படி நல்ல நினைவாற்றல் பெற்றிருக்கும் மாணவர்கள், படித்து அதிக மதிப்பெண் பெற்று உயர்வது திண்ணம். ஆனால், இது எத்தனை பேருக்கு பேருக்கு கிடைக்கிறது. அவ்வாறு கிடைக்காதவர்கள் பல்வேறு பயிற்சிகளையும், சத்தான உணவு மற்றும் மூலிகைகளையும் சாப்பிடுகிறார்கள்.

அதேநேரத்தில் ஒருவரின் மறதியை குற்றமாக சொல்லும்போது அதைக் கேட்டு அவர் இயலாமல் சோர்ந்து போவதும், கேலி பேச்சால் மனம் உடைந்து போவதும் பலரிடம் நாம் பார்க்கும் காட்சிதான். ஆனால், மறதிக்கு நாம் எந்த பயிற்சியையும் மேற்கொள்ள தேவையில்லை. அது தானாக நிகழும். அதைத்தான் மாற்றி யோசி என்ற வாக்கியத்தை பயன்படுத்தி மறதிக்காரர்களின் சிந்தனையைத் தூண்டுவோரும் உண்டு.

இறைவன் தந்த வரம்: நினைவாற்றல் இறைவன் கொடுத்த பரிசு என்றால், மறதி இறைவன் தந்த வரம் என்றே சொல்ல வேண்டும். நினைவும், மறதியும் சமமான மதிப்புடையவையே. நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. நினைவாற்றல் எத்தனை உயர்ந்ததோ, மறதியும் அப்படியே. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க வேண்டிய சூழ்நிலைகள், செயல்கள், நினைவுகள், வலிகள், வேதனைகள், துயரங்கள் என பட்டியல் நீள்கிறது. அவற்றையெல்லாம் காலத்தின் நிழலில் நாம் மறந்து வருகிறோம்.

இப்படி மறதியினால் நன்மையும், தீமையும் உண்டு. மறதி படைப்பாளிகளை உருவாக்குகிறது. நினைவாற்றல் படிப்பாளிகளை உருவாக்குகிறது. முந்தைய படைப்புகள் நினைவைவிட்டு அகலாதபோது புதிய படைப்புகள் உருவாவது கேள்விக் குறியே. படித்தவற்றை பயன்படுத்தும்போது அது நமது அறிவாகவும், ஆற்றலாகவும் மாறுகின்றது. அதுதான் படைப்பாகவும் உருவெடுக்கிறது.

சிலர் கிடைத்தவற்றை மட்டும் அல்லாமல், மேலும் தேடித் தேடிப் போய் படிப்பார்கள். அவர்கள் வாழ்நாளைவிட படித்த புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தொடர்ந்து படித்துக் கொண்டேயிருப்பதால் மட்டும் முழுபயன் கிடைப்பது இல்லை. படித்துவிட்டு, படித்தவற்றை பயன்படுத்த தொடங்குங்கள். அப்போது புதிய புதிய படைப்புகள் உருவாகும்.

படைப்புகள் நீண்ட நாட்கள் நினைவில் நிற்காமல் மறந்து போகுமானால் மீண்டும் புதிய படைப்பு உருவாகும். நேற்று எழுதி யது மறந்து போகும்போது இன்று புதியதாக ஒன்றை எழுத முடிகிறது. இதனை அனுபவப்பூர்வமாக பலரும் உணர்ந்து வருகிறார்கள்.

வெற்றிடத்தில் புதிய படைப்பு: மனதில் இருப்பது பேனா“மை” மூலம் வெளி யேறும் போது அவ்விடம் வெற்றிடம் ஆகிறது. அங்கே புதிய கருத்துக்களும், சிந்தனைகளும் உருவாகின்றன. அதனால் மறதியும் நினைவு போன்ற ஆற்றல்தான். மறப்பதால் புதியன பிறப்பதும், படைப்பும் நிகழும் போது அது சக்திவாய்ந்த ஆற்றலாகத்தான் மாறும்.

நாள்தோறும் தேவையற்ற நிகழ்வுகளை மறந்துவிட வேண்டும். அப்போதுதான் இரவு நல்ல தூக்கம் வரும். உறங்கி கண்விழிக்கும்போது புதிய மனிதனாக பிறக்கலாம்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதும், பிறருடைய தவறுகளை, தீமைகளை மறப்பதும் மன்னிப்பதும் தேவ குணம் என்பது முன்னோர்களின் வாக்கு. ஆதலால் மறதியும் நல்லதே. மறத்தலே மாண்பு. முதலில் நாம் நம் வலிகளிலிருந்து விடுபட மறதியே சிறந்த மருந்து. இதுதான் மறதியின் மறுபக்கம்.

மாணவர்கள் தேவையற்ற சிந்தனைகளையும், செயல்களையும் மறந்து தேவைகளையும், குறிக் கோள்களையும் நினைவில் நிறுத்தி மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால்தான் குறிக்கோளை அடைய முடியும். தேவையற்றவைகளை மறக்கும் போதுதான் நமக்கான தேவைகளை அடைய வழிபிறக்கும். ஒன்றை மறப்பதன் மூலம் மற்றொன்றை அடையமுடியும் என்றால் மறதியும் மதிப்புமிக்கதே. ஆக நினைவும், மறதியும் சமமானவையாக இருப்பதை உணருங்கள். ஆம், நம் ஆற்றலுக்காக மறதியும் தேவை. - கட்டுரையாளர் கல்வியாளர், மயிலாடுதுறை

SCROLL FOR NEXT