சிறப்பு கட்டுரைகள்

வாழ்வாதாரத்திற்காக இடம் பெயரும் பெற்றோர்கள்: அரசு பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிப்பது ஏன்?

டி.செல்வகுமார்

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலைக் குறைக்க பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் பெற்றோர் இடம் பெயர்வது, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், தவறான பழக்க வழக்கம் போன்ற காரணங்களால் இடைநிற்றல் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

அரசு பள்ளிகளில் அங்கொன்றும் இங் கொன்றுமாக இருந்த இடைநிற்றல், கரோனா பெருந்தொற்று காலத்திலும், அதன்பிறகும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மாணவனோ அல்லது மாணவியோ சில நாட்கள் பள்ளிக்கு வராவிட்டால் அவர்கள் வீட்டுக்கு சென்று ஆசிரியர்கள் தேடுகின்றனர். உள்ளூரில் இருந்தால் சமாதானப்படுத்தியும், கல்வியின் மகத்துவம், அரசு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அழைத்து வந்துவிடுகின்றனர். ஆனால், மாணவர்கள் வெளியூர் சென்றுவிட்டால் தேடிப் பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்றளவும் போதிய விழிப்புணர்வு, ஒத்துழைப்பு இல்லாததால் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.குண சேகரன் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர்கள் பலர் வாழ்வா தாரத்திற்காக திருப்பூர், கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களுடன் குழந்தைகளும் சென்றுவிட்டதால் அரசு பள்ளிகளில் இடைநிற்றல் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

குழந்தை திருமணம்: ஒருமுறை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத5 மாணவர்கள் வரவில்லை. ஏன் என்று விசாரித்த போது ஒரு மாணவன் கூறுகையில், “எனது பெற்றோர் இரவு முழுவதும் சண்டை போட்டதால் நான் தூங்கவில்லை" என்று தெரிவித்தான். மற்ற மாணவர்களும் வெவ்வேறு காரணங்களைக் கூறினார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் பல அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கரோனா காலத்தில் பத்திரிகை அடிக்க தேவையில்லை, திருமண மண்டபம், சமையல் போன்றசெலவுகள் இல்லை என்பதால் சொந்தத்திற்குள்ளேயே பல மாணவிகளுக்கு திருமணமாகி விட்டது. மாணவிகள் இடைநிற்றலுக்கு இதுவே பிரதான காரணமாகும். மாணவர்களைப் பொருத்த வரை திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். கையில் பணத்தை வைத்திருந்து செலவு செய்வதும், வீட்டுக்கும் கொஞ்சம் பணம் அனுப்புவதும் அவர்களுக்கு பிடித்த விஷயமாகிவிட்டது.

போதைக்கு அடிமை: இதனால் படித்து வேலைக்கு போய் சம்பாதிக்க பல ஆண்டுகள் ஆகும், அதற்கு இப்போதே வேலையில் இருப்பது நல்லதுதான் என்று நினைக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வயதில் மூத்தவர்களுடன் பழகி மது, கஞ்சா போன்ற போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வெளியூர் வேலைக்குச் செல்வதை பெற்றோர்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. நாங்கள் அந்த மாணவர்களை எந்த கம்பெனியில் போய் தேட முடியும். பெற்றோருக்கு வருமானம் வருவதால் மாண வரின் கல்வி பற்றி அக்கறை இல்லை. அழுத்தம் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப்பதும் கிடையாது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அவ்வளவாக இடைநிற்றல் இல்லை. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்தான் இடைநிற்றல் அதிகரிக்கிறது. இதைத் தடுக்க பள்ளிக் கல்வித்துறை உரிய திட்டத்தை கொண்டு வந்தால் இடைநிற்றலை குறைக்க முடியும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர். கற்றலில் இடைவெளியைக் குறைக்க எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி போன்ற பல திட்டங்களை அமல்படுத்தி வரும் பள்ளிக் கல்வித்துறை, இடைநிற்றலை குறைக்கவும் மாற்றுத் திட்டத்தை வகுப்பது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

SCROLL FOR NEXT