சிறப்பு கட்டுரைகள்

தன்னம்பிக்கையுடன் செயல்பட புத்தகங்கள்தான் வழிநடத்தும்: மாணவர்களின் மனநிலையில் வியக்கத்தக்க மாற்றம்

டி.செல்வகுமார்

சென்னை: செல்போன்தான் உலகம் என வாழும் இளைஞர்களை குறிப்பாக மாணவர்களின் மனநிலை முன் எப்போதும் இல்லாத மாதிரி இருக்கிறது. அவர்களைக் கையாள்வது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் சவாலாகத்தான் இருக்கிறது என்கின்றனர் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.

அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: திருச்சி மாவட்டம், இ.வெள்ளனூர் நவபாரத் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் அருணா ஹரி: அந்தக் காலத்தில் வீடுகளில் சில குழந்தைகள் இருந்தனர். ஆனால், இப்போது பெரும்பாலான வீடுகளில் ஓரேயொரு குழந்தை தான்இருக்கிறது. அதனால் பெற்றோரும் அந்த ஒரு குழந்தைக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கித் தருகிறார்கள். அதனால் தாம் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்ற மனோபாவம் குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. இந்நிலையில், ஏதாவது தோல்வி வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை.

சீக்கிரமாக கற்றுக் கொள்ள வேண்டும். பிடித்ததை செய்து பார்க்க வேண்டும் என்ற துடிப்பு, சாதிக்க வேண்டும் என்ற Fireஇருப்பதால் துணிச்சலாக அணுகுகிறார்கள். அதேநேரத்தில் அவர்களை சரியாக வழிகாட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் இல்லாவிட்டால் திசை மாறிப் போகும் அபாயம் உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே நல்ல புத்தகங்களைப் படிக்க செய்துவிட்டால் பக்குவமடைந்து மேற்கண்ட பழக்க வழக்கங்களுக்கு ஆட்படமாட்டார்கள். வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட புத்தகங்கள் வழிநடத்தும். மனதுக்கு ஆறுதல் தரும். பிரச்சினை தீர்க்கவும் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் என்கிறார் அருணா ஹரி.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காலி மேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் கலாவல்லி அருள்: 2000-ம் ஆண்டுக்கு முன்பு குழந்தைகளிடம் பெற்றோர் அல்லதுஆசிரியர்கள் எதைச் சொல்கிறார்களோ அதை மட்டுமே யோசித்தனர், அதை அப்படியே செய்யவும் செய்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. அந்த காலத்தில் குழந்தைக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டினார்கள். இப்போது செல்போனில் கார்ட்டூன் படங்களைக் காட்டி ஊட்டுகிறார்கள். அதனால் குழந்தைகளின் மனநிலை பெரிதும் மாறிவிட்டது. அதற்கு பெற்றோர், ஆசிரியர், சுற்றுப்புறச் சூழலே காரணம். முன்பு வீடு, பள்ளிக்கூடம் என்றிருந்தனர். இப்போது செல்போனில் உலகத்தை பார்க்கின்றனர்.

ஏராளமானவற்றைத் தெரிந்து கொள்வதுடன் சந்தேகம் வந்தால்யாரிடம் கேட்பது என்று தடுமாறுகின்றனர். அதனால் சிறிய குழந்தையில் இருந்தே தேவையற்ற பயம், பதற்றம் தொற்றிக் கொள்கிறது. குழந்தைகளிடம் மாற்றம் தேவைதான். அதற்காக இஷ்டப்படி நடந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. எனவே, ஒழுக்கத்திற்கான தரவுகோலை உருவாக்க வேண்டியது அவசியம் என்கிறார் கலாவல்லி அருள். மதுரை மாவட்டம், நாகமலை பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காமாட்சி ஷியாம்சுந்தர்: பதின்ம பருவம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத இனிமையான பருவமாகும். வளரிளம் பருவத்தினை சரிவர மேம்படுத்தினால் மாணவன் அல்லது மாணவியின் எதிர்கால வாழ்வைப் பற்றிய கவலை தேவையில்லை.

பதின்ம பருவத்தில் மாணவர்களுக்கு தேவைப்படுவது தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தும் பெற்றோர்களும், பாராட்டி தன்னம்பிக்கை யூட்டும் ஆசிரியர்களும்தான். இக்காலக்கட்டத்தில் மாணவர்களைக் கையாளும் ஆசிரியர்களின் நிலை அந்தோ பரிதாபம்தான். வளர் இளம் பருவ மாணவர்களைக் கையாளும் ஆசிரியர்களுக்கு மனப்பக்குவமும், அனுபவ முதிர்ச்சியும் நிச்சயம் வேண்டும். மாணவனை மாமனிதனாக்குகின்ற பொறுப்பு ஆசிரியருக்கு மட்டுமல்ல. பெற்றோ ருக்கும் நிச்சயம் உண்டு. இன்றைய மாணவர்கள் கண்ணாடியைப் போன்றவர்கள், புன்னகையுடன் அணுகினால் மீ்ண்டும் அதனையே பிரதிபலிப்பார்கள், சிறகடித்துபறக்க எண்ணும் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சிகளான மாணவர்களை இறுக்கமான கரங்களினால் மூடிமறைத்திடாமல், வானுயர பறக்க வைப்பது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கரங்களில்தான் உள்ளது. இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT