சிறப்பு கட்டுரைகள்

மாணவனுள் ஒளிந்துள்ள இயற்கை விவசாயி

செய்திப்பிரிவு

பள்ளிக்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்த 7-ம் வகுப்பு மாணவனுள் ஒளிந்துள்ள இயற்கை விவசாயியை பற்றிய சுவையான அனுபவத்தை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி. எங்களது பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவன் வி.நாகராரஜ், தான் பள்ளிக்கு வராததை வகுப்பு ஆசிரியருக்கு அலைபேசியின் மூலம் தெரியப்படுத்தும் போது, “மேடம், நான் பள்ளிக்கு வராததைப் பற்றி எனது பெற்றோருக்கு போன் செய்தீர்களா?" என்று கேட்டுள்ளான். “எனக்கு இன்று கால் வலியாக உள்ளது. இதுபற்றி எனது பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டாம்” என்று வேறொரு அலைபேசி எண் வழியாக தெரிவித்து இருக்கிறான்.

உடனே பள்ளியிலிருந்து பெற்றோருக்கு தகவலை தெரியப்படுத்திவிட்டு, மறுநாளே தலைமை ஆசிரியரை வந்து சந்திக்கும்படி தெரிவிக்கப்பட்டது. என்னை அந்த மாணவன் சந்தித்தபோது, தனது குடும்பம் பற்றியும், கரோனா காலத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள அவனது புதுப்பட்டி கிராமத்திற்கு அருகே அப்பள கம்பெனிக்குச் சென்று வேலை பார்த்த அனுபவத்தையும் பகிர்ந்தான். அவன்விவசாயம் பற்றி பகிர்ந்திடும் போது ஆச்சரியமடைந்தேன். 12 வயது மாணவனுக்கு விவசாயம் பற்றி இவ்வளவு விஷயம் தெரியுமா?! என்று வியப்புற்றேன். நெல்லை விளைவிக்க முயற்சித்து அது தோல்வியில் முடிந்தது பற்றி கூறி சற்று வேதனைப்பட்டான்.

அவனது வயலைப் பார்வையிட புதுப்பட்டி கிராமத்திற்கு மாணவனுடன் சென்றேன். அந்த தோட்டத்தில் இருந்த முல்லைச் செடி, மிளகாய், கத்தரிக்காய், முள்ளங்கி, வாழை, அவரைக்காய், மொச்சைக்காய், கொத்தவரங்காய் செடி ஆகிய அனைத்தையும் என்னிடம் காண்பிக்கும் பொழுது அவனது முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியை தெரிவிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அளவு கடந்த மகிழ்ச்சியுடன் என்னிடம், “நான் வளர்ந்து பெரியவன் ஆனவுடன் இதுபோல நிறைய தோட்டம் வைத்திருப்பேன், மேடம்” என்று பெருமிதத்துடன் கூறினான்.

ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இதுபோன்ற தனித் திறமையும் ஈடுபாடும் இருப்பதைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி, வழி நடத்துவது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை மட்டுமல்ல; பெற்றோரின் கடமையும் கூட! எத்தனையோ விதமான மேற்படிப்பு இருக்கும் பொழுது உணவுத் தேவையை நிறைவு செய்யும் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இந்த மாணவன் எனது மனதில் நீங்காத இடம் பெற்று விட்டான். அவனது இலக்கு வெற்றி பெற பாராட்டிவிட்டு மீண்டும் நாங்கள் பள்ளியை வந்தடையும் போது கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. அந்த மாணவனின் மனநிலையும் மாறி, பள்ளிக்கு இனி தொடர்ந்து வருவதாக உறுதியளித்தான். "ஆசிரியரிடம் கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் அன்பு இருந்தால் மாணவனை சிகரம் தொட வைக்கலாம்" - கட்டுரையாளர், தலைமை ஆசிரியர், பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி, நாகமலை, மதுரை

SCROLL FOR NEXT