மூடி திறப்பவை கண்கள், திறந்தே இருப்பவை காதுகள், மறைந்தே இருப்பது மனம், தெளிய வைப்பது மூளை, நால்வராம் இவைகளே கற்றலின் வழிகாட்டி. மண்ணில் தூவப்படும் நெல் விதையும், குழந்தைகள் மனதில் தூவப்படும் கல்வி எனும் விதையும் சமுதாயத்தின் உயிர் நாடிகள். விளைந்த பின் இவ்விரண்டும் களம் நோக்கி செல்லும். நெற்களம், சமூக களம் இவ்விரண்டும் பூவுலகின் கண்கள். கல்வியின் ஆணிவேர் என்பது பள்ளிக்கூட மும், வகுப்பறையும். வேருக்கு நீரூற்றி, உர மூட்டுபவர்கள் தான் ஆசிரியர்கள். ஆசிரியர்களை கடந்து செல்லாத சமுதாயம் சிறந்ததாக இருந்த சரித்திரம் இல்லை. பார்த்தும், நோக்கியும், கேட்டும், உணர்ந்தும், புரிந்தும், படித்தும் கற்றுக்கொண்டவைகளை பயன்படுத்தத் தொடங்கும் போதுதான் நமக்குரிய அங்கீகாரத்தை பெறுகிறோம்.
வாழ்வின் தொடக்கம்: நம் திறமைகள் அங்கீகரிக்கப்படும்போதுதான் வாழ்வு தொடங்கும். ஆம், வாழ்வின் தொடக்கம் என்பதே அங்கீகாரம்தான். நமது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்போதும், புதுமையாக இருக்கும்போதும், சமூகத்தில் இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் போதும், பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் போதும் மட்டுமே அது தனக்குரிய அங்கீகாரத்தை பெறுகிறது. நமக்குரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, நிறைய போராட வேண்டியுள்ளது. போராட்டம்தான் வாழ்வை தீர்மானிக்கிறது. ஒவ்வொருவருக் குள்ளும் இருக்கும் போராளிதான் அவர்களை உருவாக்கும் சிற்பி.
இருமடங்கு பலன்: அங்கீகாரத்திற்கான அடிப்படை ''செயல்பாடே" என்பதை அனைவரும் உணர வேண்டும். உங்களின் ஒவ்வொரு செயல்பாடும் உங்களுடைய தாகவும், உங்களுக்காகவும் இருக்க வேண்டும். நீங்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் அது விளையாட்டாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும், ஆர்வத்துடனும், விருப்பத்துடனும், நேர்மையுடனும், நேரத்துடனும், அறிவார்த்தமாகவும் செய்யும்போது அதற்கான பலன்கள் இருமடங்காக இருக்கும். நாம் நமது செயல்களை ஒவ்வொரு நிலையிலும் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுபோல் ஒவ்வொருவரும் வெற்றியாளாராய் வருவதற்கு உண்மை, நேர்மை, நல்ல சிந்தனை, அர்ப்பணிப்பு, துணிவு, பணிவு என்ற ஆறு வகையான கருவிகள் அவசியம். இதில் வரும் பணிவு மட்டும் நமக்கு கருவியாக அல்ல, கேடயமாகவே பயன்படுகிறது. இவற்றையெல்லாம் நாம் நமது நண்பர்களை போல் பாவித்து செயல்படும்போது வாழ்வில் வெற்றியையும் , முன்னேற்றத்தையும் எளிதாக அடையலாம்.
நம் ஒவ்வொருவரையும் நமது நிழலானது முன்னும் பின்னும் தொடர்வதை கவனித்தால் உண்மை புரியும். சில நேரங்களில் நமது நிழலானது நம்மை விட நீண்டும், சில நேரங்களில் நம்மை விட குட்டையாகவும் தெரியும். அதுபோல நம்முடைய செயல்பாடுகள் மட்டுமே நம்முடனும், நமக்கு பிறகும் இயங்கும் நிழல் போல் ‘‘தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.'' என்கிறது வள்ளுவம். நமது நிழலாக இருக்கக்கூடிய செயல்பாடுகள் சரியாகவும், சிறப்பாகவும் இருக்கும்போது மட்டுமே அது நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச்சொல்லும். உலகமே மிக பெரிய பள்ளிக்கூடம்.பிறக்கும் ஒவ்வொருவரும் மாணவனே படைப்பாளிகள் இங்கு நிலைக்கின்றனர். படிப்பாளிகள் இங்கு வாழ்கின்றனர். படிக்க மறந்தவர்கள் மறைகின்றனர்.
படிப்போம்! படைப்போம்!! பார் உயர உயர்வோம்.
S – Sincerity
H- Honesty
A- Attitude
D- Dedication
O- Obedient
W- Win
கட்டுரையாளர்: கல்வியாளர், மயிலாடுதுறை