வகுப்பறை என்றாலே, கரும்பலகையும் அடிகோலும்தான் ஞாபகத்துக்கு வரும். இந்த வழமையை புரட்டிப் போட்டிருக்கிறது இல்லம் தேடி கல்வி. ஆடல், பாடல், கதை, கவிதை, விளையாட்டு, புதிர், நாடகம், வாசிப்பு, சொற்பொழிவு, புதிய கண்டுபிடிப்புகள், குழு விளையாட்டுகள் என குதூகலமாக மாணவர்கள் கல்வி கற்க உதவியுள்ளது இத்திட்டம்.
அடிப்படை கணிதம், வாசிப்பு என மாணவர்களிடம் காணப்பட்ட கற்றல் இடைவேளை குறைபாட்டை இத்திட்டம் நிவர்த்தி செய்து வருகிறது. இல்லம் தேடிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் கேள்விக்கு பதில் சொல்லுவது முதல் செயல்பாடுகள் வரை அனைத்திலும் உற்சாகமாக உள்ளனர். ஆசிரியரிடம் கேட்க தயங்கிய கேள்விகளைக்கூட நம் அக்காவிடம் (தன்னார்வலர்) கேட்கலாம் என தைரியமாக கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்கிறார்கள்.
இத்திட்டம் மூலமாக மிகவும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைக்குக்கூட ஆசிரியர்கள் மற்றும்தன்னார்வலர்கள் உதவியுடன் கற்றல் திறமையை வளர்க்க முடிகிறது. தன்னார்வலர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டு தலுடன் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களது தனித்திறமையை வளர்க்கவும் இயலும்.
இத்திட்டத்தில் கொடுக்கப்படும் வரைபடங்கள் மாணவர்களுக்கு கண்ணைக் கவரும் விதத்திலும் எளிதில் கருத்தை புரிந்து கற்கக்கூடிய வகையிலும் உள்ளன. தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், மாணவர்களை சிறப்பாக உருவாக்க அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
ஒரு ஆசிரியராய் இருக்கும் எனக்கு இத் திட்டத்தின் மூலம் கிடைத்த பயிற்சிகள் எனது வகுப்பறை செயல்பாடுகளிலும் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. நான் 6-ம் வகுப்பு வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறைக்கும், 8-ம் வகுப்பு வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறைக்கும் எனது செயல்பாட்டில் பல வித்தியாசத்தைக் கொண்டு வந்தேன். மாணவர்களின் வயதிற்கு ஏற்ப நம்மை நாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
இரு தரப்பும் பயனடைகிறது: பல்வேறு திறமைகளை தனக்குள் கொண்டு வீட்டில் இருக்கும் ஆசிரிய பட்ட தாரிகளுக்கும் இத்திட்டம் அவர்களது திறமையை வெளிகாட்டும் தளமாக உள்ளது. அடிமட்ட தன்னார்வலர் முதல் மேல்மட்ட தலைமையாசிரியர், பொறுப்பாளர், கண்காணிப்பாளர் என அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்வதே இத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணம். பாடத்தில் பின்தங்கிய மாணவர்களை மாலைநேர தனிப்பயிற்சி வகுப்பிற்கு அனுப்ப கஷ்டப்படும் பெற்றோருக்கு இத்திட்டம் ஒரு வரம். “ஏம்மா, என் பிள்ளை எப்படி படிக்கிறான்?” என சன்னலை திறந்து கேட்கும் தூரத்தில் தன்னார்வலர் இல்லம். மகனின் செயல்பாடுகளை பெற்றோர் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு. இப்படி பெற்றோர் தங்கள் பிள்ளையின் கற்றலை கண் முன் காட்டுகிறது இத்திட்டம்.
மாணவர்கள் வாசிப்புக்கு - நூல் கற்றல், செயல்பாட்டுக்கு - ஆடல் பாடல், அறிவுக்கு - கண்காட்சி கள் என அனைத்து செயல்பாட்டிற்கும் வாய்ப்பு அளித்து மாணவனின் பன்முகத் திறமைக்குத் தீனி கிடைக்கிறது. ஆசிரியர்-மாணவர் என்ற உறவை மாற்றி அக்கா, தம்பி, தங்கை என உடன்பிறவா பிறந்த உறவைக் கூறி கற்றலை எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கியிருப்பது வரம்தான். வகுப்பறையில் நான் ஆசிரியராக இருப்பதற்கும் மாலை நேர வகுப்பில் மாணவனின் உடன்பிறப்பாக இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என எனக்கு தெரியும். இனி எந்த விதமான பெருந்தொற்று வந்தாலும் மாணவர்களின் கற்றலில் தொய்வு ஏற்படாது. இடைநிற்காமல் மாணவனின் கல்வி தொடரும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இல்லங்களைத் தேடி வந்த கல்வி இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டம், கற்றலை இனிமையாக்கிக் கற்பித்தலில் புதுமை படைத்து உள்ளது. - கட்டுரையாளர்: ஆசிரியை, பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி, நாகமலை, மதுரை