சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம், மேலபுலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.பேரானந்தம் தனது விடா முயற்சியால் நீட் தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் சேர்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிபாக்கத்தைச் சேர்ந்தவர் பேரானந்தம். அப்பா மணிகண்டன், விவசாயி. அம்மா பரமேசுவரி, இல்லத்தரசி. தம்பி கார்த்திகேயன் 12-ம் வகுப்புபடிக்கிறார். பேரானந்தம் படிப்பு - 1முதல் 5-ம் வகுப்பு வரை பணப்பாக்கம் சரஸ்வதி மெட்ரிகுலேசன் பள்ளி,6 முதல் 10-ம் வகுப்பு வரை பெரும்புலிபாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, 11 மற்றும் 12-ம் வகுப்பு ராணிப்பேட்டை மாவட்டம், மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளி. இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி 430 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். அதனால் உலகப் பிரசித்தி பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
ஆசிரியர்களின் ஊக்கம்: தனது தொடர் முயற்சி குறித்து பேரானந்தம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். எனது சிறிய வயதில்ஐஏஎஸ் ஆக வேண்டு்ம் என்றுவிரும்பினேன். பிறகு வேளாண் பல்கலையில் படிக்க ஆசைப்பட்டேன். 11-ம் வகுப்பு வரும் வரை வாழ்வில் என்னவாக வேண்டும் என்று தீர்க்கமான முடிவு இல்லை. மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்த பிறகு அங்குள்ள ஆசிரியர்கள் குறிப்பாக தலைமை ஆசிரியை பரமேசுவரி, உதவித் தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன், இயற்பியல் ஆசிரியை பவானி ஆகியோர் கொடுத்த ஊக்கம், உற்சாகம் காரணமாக முதலில் நீட் தேர்வு எழுதியபோது 125 மதிப்பெண்கள் பெற்றேன். மதிப்பெண் குறைவாக இருந்ததால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதனால் நாமக்கல்மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து விடா முயற்சி செய்தேன். அதன்பலனாக இந்த தடவை 430 மதிப்பெண்கள் பெற்றேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது.
உள் இடஒதுக்கீட்டு: தமிழக அரசு வழங்கியுள்ள 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு தர வரிசைப் பட்டியிலின்படி, மாநிலஅளவில் 11-வது இடத்தையும், ராணிப்பேட்டை மாவட்ட அளவில்முதலிடத்தையும் பெற்றுள்ளேன் என்றார் பேரானந்தம். பள்ளித் தலைமை ஆசிரியை தி.பரமேசுவரி கூறியதாவது: ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்று பேரானந்தத்திற்கு ஊக்கம் அளித்தோம். எங்கள் பள்ளியில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக எனது தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான வினாக்களை தயாரித்து வாரந்தோறும் பயிற்சி அளித்ததால் பேரனானந்தம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர்கள் 8 அல்லது 9-ம் வகுப்பு படிக்கும்போதே வாழ்வில் என்னவாக வேண்டும் என்று திட்ட வட்டமாக முடிவெடுப்பது நல்லது.அப்போதிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அறிவியல் பாடங்களை படித்து வந்தால் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும். மற்ற மாணவர்களுக்கு பேரானந்தம் முன் உதாரணமாக திகழ்கிறார் என்று தெரிவித்தார்.
2 பேர் தேர்ச்சி: பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரும், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியருமான அ.கமலக்கண்ணன் கூறும்போது, “எனது பாடங்களில் சுமார் 3,322 வினாக்கள் தயாரித்து, 18 மாதிரி நீட் தேர்வுகள் நடத்தினேன். வாரந்தோறும் தேர்வு நடத்தியது பலன் அளித்துள்ளது. இந்தாண்டு எங்கள் பள்ளியில் இருந்து 6 பேர் நீட் தேர்வு எழுதியதில் 2 பேர் தேர்ச்சி பெற்றனர்" என்றார். இயற்பியல் ஆசிரியை டி.பவானி கூறுகையில், “சிபிஎஸ்இ புத்தகங்களைக் கொண்டு பயிற்சி அளித்தேன். 10 ஆண்டுகள் நடைபெற்ற நீட் வினாக்களில் இருந்து தொடர் பயிற்சி கொடுத்தேன். இயற்பியல் பாடத்தில் சமன்பாடுகளுக்கான தீர்வு காண ஒரு மணி நேரமும் ஆகும். 10 நிமிடங்களிலேகூட தீர்வு காண முடியும். அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தினால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். மாணவர்கள் மாற்றி யோசிப்பது அவசியம்" என்று தெரிவித்தார். தமிழக அரசின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பேரானந்தம் போன்ற கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்காக திகழ்கிறது என்றால் மிகையாகாது.