அப்துல் கலாமை விண்வெளி விஞ்ஞானியாக, ஏவுகணை நாயகராக நீங்கள் அறிந்திருக்கலாம். 1980 ஜுலை 18 ஆம் தேதி, செயற்கைக்கோளை விண்வெளிக்கு ஏந்திச்செல்லும் எஸ்.எல்.வி-3 என்ற இந்தியாவின் முதல் ஏவூர்தியை (ராக்கெட்) வெற்றிகரமாக விண்ணில் ஏவியதால் பொதுவெளியில் அறியப்பட்டவர் அப்துல் கலாம். பின்னர், கலாம் தலைமையில் 1989 மே 22-ல் வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அக்னி. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தார் கலாம். இளைஞர்களின் கனவு நாயகராக உருவெடுத்தார்.
ஹோவர்கிராஃப்ட்: உலகமே வியந்த ஏவூர்தி மற்றும் ஏவுகணை திட்டங்களில் வெற்றிபெற்ற கலாமின் தொடக்க கால ஆராய்ச்சி எது தெரியுமா? நிலத்திலும், நீரிலும், பனியிலும் செல்லும் ஹோவர்கிராஃப்ட் (Hovercraft). இந்த வாகனத்தில் வளிமண்டலக்காற்றை விட சற்று கூடுதல் அழுத்தத்தில் காற்று கீழ் நோக்கி வீசப்படுவதால், நிலம் அல்லது நீரின் பரப்பிலிருந்து வாகனம் சில செண்டிமீட்டர்கள் மேலெழும்பி மிதக்கும். இதை மிதவை ஊர்தி என அழைக்கலாம். ஊர்தியின் பின்புறத்தில் உள்ள விசிறிகளை இயக்குவதன் மூலம் வாகனத்தை முன்னோக்கியோ, பின்னோக்கியோ இயக்கலாம். வானில் சீறிப்பாயும் ஏவுகணையை உருவாக்குவதற்கு முன்பு தரையிலிருந்து சில செண்டிமீட்டர்கள் மட்டுமே உயர்ந்து பறக்கும் ஹோவர்கிராஃப்டை உருவாக்கினார் கலாம். கனவில் வாழ்ந்து கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், விண்வெளிப் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், விண்வெளியைத் தொடும் கனவின் முதல் படியாக ஹோவர்கிராஃப்ட் ஆராய்ச்சியில் இறங்கினார் கலாம்.
எளிய ஆரம்பம்: பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) ஆய்வகங்களில் ஒன்றான விமானவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Aeronautical Development Establishment) விஞ்ஞானியாக பணியைத் தொடங்கினார் கலாம். அந்த ஆய்வகம் தொடங்கப்பட்ட 1959 ஆண்டு வாக்கில் அங்கே ஆராய்ச்சிப் பணிச்சுமை மிகக்குறைவு. அந்த சூழ்நிலையில், வேலை குறைவு என்று பொழுதுபோக்கில் மூழ்காமல் தனக்கான பணியை தானே உருவாக்கிக் கொண்டார் கலாம். அப்படி அவர் தேர்ந்தெடுத்த ஆராய்ச்சி திட்டம்தான் ஹோவர்கிராஃப்ட். ஆகாய விமானத்தை போல மிக சிக்கலான தொழில்நுட்பமாக இல்லாமலிருந்தாலும், இந்தியாவில் அதுவரை உருவாக்கப்பட்டிராத ஹோவர்கிராஃப்ட் ஒரு பெரும் தொழில்நுட்ப சவால்தான். இந்த வாகனத்தின் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களை தேடினார் கலாம். ஆனால், அக்காலகட்டத்தில் இந்தியாவில் இத்துறை நிபுணர்கள் யாருமில்லை. மிதிவண்டியை பராமரிப்பு செய்து
கொண்டிருந்த ரைட் சகோதரர்களால் விமானத்தை உருவாக்க முடிந்தால், பொறியாளரான தம்மால் ஹோவர்கிராஃப்டை உருவாக்க முடியும் என நம்பினார் கலாம். மனம் தளராமல், ஹோவர்கிராஃப்ட் குறித்த பல புத்தகங்களை, ஆராய்ச்சி கட்டுரைகளை தேடிப்பிடித்து வாசிக்கத் தொடங்கினார். அதில் கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தி ஹோவர்கிராஃப்டின் அடிப்படை வடிவமைப்பை உருவாக்கினார்.
உருவானது ஹோவர்கிராஃப்ட்: காகிதத்தில் வரைபடங்களாக இருந்த தனது வடிவமைப்புக்கு உருவம் கொடுக்கும் பணியில் இறங்கினார் கலாம். புதிதாக உருவாக்கிய பாகங்களோடு, ஆய்வுக்கூடத்தில் ஏற்கெனவே இருந்த சில பொருட்களையும் பயன்படுத்தி ஒரு ஹோவர்கிராஃப்டை உருவாக்கினார். நான்கு தொழில்நுட்பப் பணியாளர்களோடு மூன்றாண்டு கால உழைப்பில் 1962-ம் ஆண்டு இந்த ஹோவர் கிராஃப்டை கலாம் உருவாக்கினார். ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட வருகை தந்த அப்போதைய ராணுவ அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன், கலாமின் ஹோவர்கிராஃப்ட் வாகனத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அதில் பயணம் செய்ய ஆசைப்பட்டார். ஹோவர்கிராஃப்டை உருவாக்கிய கலாம் அதை இயக்கும் கலையிலும் தேர்ந்திருந்தார். ஆனால், ராணுவ அமைச்சரின் பாதுகாப்பை கருதி, உடன் வந்திருந்த இந்திய விமானப்படையின் போர் விமானி ஒருவர் தானே ஊர்தியை இயக்க முன்வந்தார். ஆனால், கலாம் தன்னம்பிக்கையுடன் தானே இயக்குவதாக கூறினார். கலாம் ஹோவர்கிராஃப்டை இயக்க அதில் பயணித்த ராணுவ அமைச்சர் அசந்து போனார். 550 கிலோ எடையுடன் 4 செண்டிமீட்டர் உயரத்தில் பறந்த அந்த ஹோவர்கிராஃப்டின் பெயர் ‘நந்தி’
நந்தி - மிதவை ஊர்தி: மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘நந்தி’யில் பறந்தவர் பேராசிரியர். எம்.ஜி.கே. மேனன் (பின்னாளில் இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக இருந்தவர்). கலாமின் ‘நந்தி’யால் கவரப்பட்ட எம்.ஜி.கே. , இன்கோஸ்பார் (Indian Committee for Space Research -INCOSPAR) நிறுவனத்தில் ராக்கெட் பொறியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பை கலாமுக்கு வழங்கினார். விக்ரம் சாராபாய் தலைமையில் நடந்த நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றார் கலாம். இன்கோஸ்பார் தான் பின்னாளில் இஸ்ரோ என்று பெயர் மாற்றமடைந்தது. தரையிலிருந்து சில செண்டிமீட்டர்கள் மட்டுமே மேலெழும்பும் ஹோவர்கிராஃப்ட் தானே என அலட்சியமாக இல்லாமல் சிரத்தையுடன் அப்பணியில் ஈடுபட்டதே பின்னாளில் கலாம், விண்வெளித் துறையிலும் ஏவுகணைத் துறையிலும் உலகம் புகழும் விஞ்ஞானியாக ஜொலிக்க உதவியது. ஆரம்பத்தில் கலாம் ‘நந்தி’யை பறக்கச் செய்தார். பின்னர் ‘நந்தி’ கலாமை பறக்கச் செய்தது எனலாம். கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் இரு கைகளில் பற்றி உள்ளார்ந்த அர்ப்பணிப்புடன் உழைத்தால் உலகத்து உன்னதங்களைத் தொடலாம் என்பது அப்துல் கலாம் நமக்கு உணர்த்தும் வாழ்க்கைப் பாடம். - கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்: விஞ்ஞானி ஆகும் வழிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.