சிறப்பு கட்டுரைகள்

அரசு பள்ளி மாணவர்களின் உடல், மன நலம் பேண 48 கேள்விகள்: பள்ளிக் கல்வித் துறை முன்னெடுப்புக்கு வரவேற்பு

டி.செல்வகுமார்

சென்னை: அரசு பள்ளி மாணவ, மாணவியரின் உடல் மற்றும் மன நலம் தொடர்பாக மாணவர்களிடம் 48 கேள்விகள் மூலம் பதில் பெற்று அவற்றை ஆவணப்படுத்தும் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மன நலனில் அவர்களின் பெற்றோர் அதிக அக்கறை காட்டினாலும் உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனையோ அல்லது சிகிச்சையோ பெற்றுக் கொள்வதில்லை என்ற குறைபாடு உள்ளது. இந்த குறையைப் போக்கும் வகையில் அரசு பள்ளியில் 1-வது முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரின் உடல் மற்றும் மன நலம் குறித்து அறிந்து கொள்வதில் பள்ளிக் கல்வித்துறை இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதற்காக பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் எமிஸ் செயலியில் "ஹெல்த் அண்ட் வெல்பீயிங்" என்ற ஃபோல்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அதில் நுழைந்து ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக கண் தொடர்பாக 10 கேள்விகளையும், பொதுவான உடல் மற்றும் மன நலன் குறித்து 30-க்கும் மேற்பட்ட கேள்விகளையும் கேட்டு பதிலைப் பதிவு செய்து சமர்ப்பிக்கின்றனர். கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்ற முறையில் பதில் பெறப்படுகிறது.

உச்சி முதல் பாதம் வரை: மாணவர்களின் உயரம் - எடைக்கேற்ற உடல் ஆரோக்கியம், வைட்டமின் குறைபாடு, காசநோய், வலிப்பு, திக்குவாய் பாதிப்பு, வகுப்பறையில் கவனச் சிதறல், மது அருந்தும் பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம், அதிமாக ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாடும் பழக்கம், பேசாமல் இருப்பது, குறைவாகப் பேசுவது, பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருப்பது, சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், மிகவும் குள்ளமாக, மிகவும் எடை குறைவாக இருப்பது, தோலில் புண் அல்லது கொப்பளம், நடந்து செல்லும்போது, படியில் ஏறும் போது, ஓடும்போது சிரமம், முதுகு வளைவு, பற்சொத்தை, காது வலி, மூச்சு திணறல், மூக்கு சப்பையாக வளைந்து இருப்பது, கண்களில் புரை உள்ளிட்ட பார்வைக் குறைபாடுகள், மாணவிகளின் மாதவிடாய் பிரச்சினை என 48 கேள்விகள் வரை கேட்கப்பட்டு பதில் பெறப்படுகிறது.

மாணவியரின் மாதவிடாய் தொடர்பான கேள்விகளுக்கு பதில் கேட்டுப் பெறும் பொறுப்பு ஆசிரியைகளிடம் மட்டும் வழங்கியிருப்பது சரியான அணுகுமுறையாகும். அதேநேரத்தில், இந்தப் பதிவை பல ஆசிரியர்கள் கடமைக்கு செய்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. சில ஆசிரியர்கள் இப்பதிவுக்கு கூடுதலாக மெனக்கெடுவதும் தெரியவந்துள்ளது. அதுபோன்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கான வாட்ஸ் அப் குரூப்பில் உடல் நலம் குறித்த கேள்விகளை அனுப்பி, பெற்றோரிடம் உரிய விடையைப் பெற்று பதிவு செய்கின்றனர்.

அதனால் குழந்தைகளின் உடல் மற்றும் மன நலம் குறித்து சரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. உண்மைத் தகவல்களைப் பதிவு செய்யாமல் குத்துமதிப்பாக ஆம் அல்லது இல்லை என ஏதாவது ஒன்றைப் பதிவு செய்யும் ஆசிரியர்களை கண்காணிக்க உரிய ஏற்பாடு இல்லாமல் இருப்பது இப்பணியில் குறையாகப் பார்க்கப்படுகிறது என்கின்றனர் கல்வியாளர்கள். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “இந்த பணியை முழுக்க முழுக்க ஆசிரியர்களே செய்வதால் கற்பித்தல் பணி பாதிக்கிறது. தேவைப்பட்டால் அந்தந்த வகுப்பாசிரியரின் உதவியைக் கேட்டுப் பெறலாம். வெறுமனே ஆம் அல்லது இல்லை என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சிறப்பு முகாம்கள் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் செய்தால் நலமாக இருக்கும்" என்றனர். மாணவர்களின் உடல் மற்றும் மன நலம் பேண தமிழக பள்ளிக்கல்வித் துறை எடுத்திருக்கும் இம்முயற்சி வரவேற்புக்குரியது.

SCROLL FOR NEXT