மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் அணுகுமுறைகளான கற்பித்தல் யுக்தி இந்த கல்வி ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கற்பித்தல் துணைக் கருவிகள் இல்லாமல் இந்த வகுப்பறையை நடத்துவது இயலாது.
"வகுப்புக்குரிய கற்பித்தல் நிலைக்கு மாற்றாக மாணவர் நிலைக்கு ஏற்ற கற்பித்தல், செயல்முறைகளின் அடிப்படையிலான கற்றல் கற்பித்தல், செயல்முறைகளின் அடிப்படையில் மதிப்பீடுகள், மொழி,கணக்கு ஆகியவற்றோடு சூழ்நிலையியலை ஒருங்கிணைத்து கற்பித்தல், தனி திறன்களின் வெளிப்பாட்டு மேடையாக இசை அரங்கமாக, கதைக்களமாக, விளையாட்டுக் கூடமாக ஓவியக்கூடமாக என உருமாற்றம் பெறும் உயிரோட்டமான வகுப்பறை தான் எண்ணும் எழுத்தும் வகுப்பறையின் சிறப்பு கூறுகள் ஆகும்".
ஒன்று முதல் மூன்று வகுப்பு மாணவர்களை முறையே அரும்பு நிலை, மொட்டுநிலை, மலர் நிலை என வகைப்படுத்தி நீலம், மஞ்சள், பச்சை வண்ணங்களில் வகைப்படுத்தியுள்ளனர்.
வலுவாகும் வகுப்பறை
ஆசிரியர்கள் தயாரித்து பயன்படுத்தும் துணைக் கருவிகளோடு மாநில அரசும் எண்ணும் எழுத்தும் வகுப்பறையை மேலும் வலு உள்ளதாக மாற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கற்றல் கற்பித்தல் துணைக் கருவி பெட்டிகளை வழங்கி உள்ளது.
இப்பெட்டிகளை தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (டான்சி) தயாரித்து வழங்கி உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கு என மொத்தம் 15 வகையான துணைக் கருவிகள் பெட்டியில் உள்ளது.
பாடத்தின் மையக்கருத்தை, நிகழ்வு நடக்கும் சூழ்நிலையை படங்களாக வெளிப்படுத்தும் விதத்தில் ஏ3 அளவில் தமிழ் பாடத்திற்கு 16 படங்களும்,(picture chart), ஆங்கிலப் பாடத்திற்கு 19 படங்களும் லேமினேஷன் செய்யப்பட்டு வழங்கி உள்ளது சிறப்பு.
தமிழ் பாடத்திற்கு ஏ4 அளவில் லெட்டர் சார்ட் 20, வார்த்தை அட்டைகள் 130, தமிழ் எழுத்துக்கள் குறியீடுகள் கொண்ட 66 எழுத்து அட்டைகள் உள்ளன. இந்த எழுத்து அட்டைகள், குறியீடுகளைக் கொண்டு தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் எளிதாக கற்பிக்க முடியும்.
அரும்பு, மொட்டு, மலர்...என மூன்று நிலை மாணவர் களுக்கும் பிரித்து பயன்படுத்தும் வகையில் மூன்று வண்ணங்களில் வகைப்படுத்தி துணைக் கருவிகளைக் கொடுத்துள்ளனர்.
ஆங்கில பாடத்திற்கு மூன்று வகுப்புகளுக்கும் தனித்தனியாக மொத்தம் பட அட்டைகள்( Flash card) 100, வார்த்தை அட்டைகள்(Word card) 436 வழங்கப்பட்டுள்ளன.
அட்டைகளை சொருகி பயன்படுத்தும் விதத்தில் மூன்று வண்ணங்களில் சுவரில் தொங்கவிடக் கூடிய வகையில் மரத்திலான போர்டு வழங்கப்பட்டுள்ளது.
கணிதம் கற்பிக்க தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு சிலஆண்டுகளுக்கு முன்பே கணிததுணைக்கருவி பெட்டி தனியாக வழங்கப்பட்டுள்ள நிலையில், எண்ணும் எழுத்தும் வகுப்புக்கு கணித துணைக் கருவிகள் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணித பாடத்திற்கு 2டி, 3டி வடிவங்கள் மரக்கட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது. பட அட்டையில் இப்பாடத்திற்கு 198 உள்ளது. இட மதிப்பு கற்பிக்க, எண்ணிக்கை கற்றுத்தர பாசிகளும் வழங்கியுள்ளனர்.
இணையதளக் குழு
எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள இணையதளக் குழுவில் பல்வேறு ஆசிரியர்கள் தாங்கள் கற்றல் கற்பித்தல் யுக்திகள் துணைக் கருவிகள் தயாரித்தலை பதிவேற்றம் செய்கிறார்கள். இதன்மூலமாகவும் நாம் தயாரித்து பயன்படுத்தலாம்.
கட்டுரையாளர், ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம், திண்டுக்கல்.