இல்லம் தேடிக் கல்விக்கு முற்றிலும் மாறுபட்ட கையேடுகள் வழங்கப்பட்டிருப்பதால் வகுப்பறை கற்பித்தலில் துணை ஆசிரியர்களாகவே தன்னார்வலர்கள் செயல்படும் நிலை உருவாகியுள்ளது.
மாநில அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை கற்பிக்கும் தன்னார்வலர்கள் ஒரு பிரிவாகவும், 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும் தன்னார்வலர்கள் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இவர் களுக்கான நான்காம் கட்ட பயிற்சி வகுப்பு மாநிலம் முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது.
தன்னார்வலர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பயிற்சி கையேடு பயிற்சி முறையில் இருந்து இம்முறை வழங்கப்பட்டுள்ள பயிற்சி மற்றும் கையேடு முற்றிலும் மாறுபட்ட சிறப்பு அம்சங்களை கொண்டதாக உள்ளது.
மாறுபட்ட கையேடு
முதலில் பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்திட்டத்தில் இருந்து விலகி தன்னார்வலர்களுக்கென ஒரு கையேடு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பள்ளியில் கற்பிக்கப்படும் பாடத்துடன் தொடர்புடைய வகையில் அதற்கு வலுசேர்க்கும் நோக்கில் தொடர்பும் தொடர்ச்சியும் இருக்கும் வகையில்இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கும் புதிய பாணியில் கையேடு வழங்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். இக்கையேடு அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தொடக்கநிலை வகுப்பு (1-5) கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் தமிழ்,ஆங்கிலம், கணக்கு சூழ்நிலையியல் பாடத்துடன் மாதிரி துணைக் கருவிகள் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு பாடங்களும் 19 அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அலகும் நடத்தி முடிக்கப்பட்ட பின்பு மாணவர்கள் என்னென்ன கற்றல் விளைவுகளை அடைவார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருமையான பாடல்
தமிழ் பாடத்தில்: "அரும்பே அரும்பேஅருகில் வா ஆடி பாடி கற்க வா இல்லம் தேடி மையத்தில் இனிதாய் பாடம் கற்கவா..." என்னும் பாடலுடன் தொடங்குகிறது.
தமிழ் படத்தில் ஆறு அலகுகள் உள்ளன. ஒவ்வொரு அலகிலும் முதலில் எளிமையான, அருமையான பாடல் இடம்பெற்றுள்ளது. இது மாணவர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமைகிறது. அ.... ஔ வரை எழுத்து கற்பிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் ஒவ்வொரு அலகில் முன்பும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செயல்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்த நிலையில் மதிப்பீடு தரப்பட்டுள்ளது. மாணவரின் வகுப்புக்கு ஏற்ப எந்தெந்த செயல்பாடுகள், மதிப்பீட்டை கொடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆங்கில பாடத்திற்கு நான்கு அலகுகள். ஒவ்வொரு பாடத்திற்கும் தலா இரண்டு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. My Things,Things around me, My class room..ஆகிய தலைப்பில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
கணக்கு படத்தில் ஆறு அலகுகள் உள்ளது. வடிவியல், பொருள்களை வகைப்படுத்துதல், எண்கள்ஆகிய தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சூழ்நிலையியல் படத்தில் 3 அலகுகள். தாவரங்கள் எது பாகங்கள், தாவரங்கள் எனது பயன்கள், தாவரங்கள் விதையின் பயணம் ஆகியதலைப்பின் கீழ் பாடம் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் அதிக அளவில்பங்கேற்கும் வகையில் ஒவ்வொருபாடத்திற்கும் அதிக அளவில் செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மதிப்பீடும் செயல்பாடும் மாணவர்களின் வகுப்புக்கு ஏற்ப வகைப்படுத்தி வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. இதனால் மாணவர்கள் சிரமமின்றி கற்றுக் கொள்ள முடியும்.
மகிழ்வுடன் கற்றல்
தன்னார்வலர்களுக்கு துணைக் கருவிகள் அடங்கிய பெட்டி வழங்கலாம் அல்லது இவர்கள் துணைக் கருவிகள் தயாரிக்க போதுமான நிதியை சம்பந்தப்பட்ட பள்ளிகள் வழங்கினால் செயல்பாடுகள் அனைத்தும் வலுவானதாக அமையும். மாணவர்கள் மன மகிழ்வுடன் கற்பார்கள். இல்லம் தேடி கல்வி மையத்திற்கு தவறாமல் வருகையும் இருக்கும்.
இல்லம் தேடித் திட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேடு பள்ளியில் உள்ள பாடத்திட்டத்தோடு இணைந்து கைகோர்ப்பதாக இருப்பதால் வகுப்பறை கற்பித்தலுக்கு தன்னார்வலர்களும் ஒரு துணை ஆசிரியராக செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
- சோ.இராமு
(தன்னார்வலர்களுக்கான கருத்தாளர்)
ஆசிரியர். அரசு தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம், ஆத்தூர் ஒன்றியம்
திண்டுக்கல் மாவட்டம்.