சிறப்பு கட்டுரைகள்

பிளஸ் 1, பிளஸ் 2 கணினி அறிவியல் தமிழ்வழி பாடப்புத்தகங்களில் பக்கத்துக்கு பக்கம் பிழைகள்: ஆசிரியர்கள், மாணவர்கள் அவதி

செய்திப்பிரிவு

திருச்சி: பிளஸ் 1, பிளஸ் 2 கணினி அறிவியல் தமிழ்வழிப் பாடப் புத்தகங்களில் பிழைகள் இருப்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடு பாடங்கள் உள்ளன. இதற்கென தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் 2019-ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதன் திருத்தியபதிப்பு 2020-ம் ஆண்டில் வெளியிடப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்வழி பாடத்திட்டத்தில் கணினி அறிவியல், கணினி பயன்பாடு பாடப் புத்தகங்களில் பக்கத்துக்கு பக்கம் எழுத்துப் பிழைகளும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட வார்த்தைகளிலும் அதிக அளவில் தவறுகளும், பிழைகளும் உள்ளதால் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களும், அதைப் படிக்கும் மாணவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பெரும்பாலும் ஆங்கில வழியில் தான் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் தமிழ் வழியில் தான் கற்பிக்கப்படுகிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதுநிலை கணினி அறிவியல் ஆசிரியர்கள் கூறியது:

கணினி அறிவை பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும் என்றநோக்கத்தில் தான் கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-ம் ஆண்டில் இந்த பாடங்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக புத்தகங்களை தமிழ்நாடு அரசுபாடநூல் நிறுவனம் வெளியிட்டது.

இதில் ஆங்கில வழிப் பாடப்பிரிவுக்கான புத்தகங்களை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து தமிழ் வழிப் பாடப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அப்புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் பிழைகள் உள்ளன. பெரும்பாலான ஆங்கில வார்த்தைகள் கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதில் அதிக அளவில் தவறுகள் உள்ளன.

தமிழ்வழி பாடப் புத்தகங்களில் சொற்பிழைகளுடன், வார்த்தைகள் கோர்வையில்லாமலும் உள்ளதால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கும், மாணவர்கள் படிப்பதற்கும் மிகவும் சிரமமாகவும் உள்ளது.

புத்தகங்களில் பல இடங்களை படிக்கும் போது அது தமிழ்மொழி போலவே இல்லை.

பாடப்புத்தகளில் பிழையே இருக்கக் கூடாது. மீறி ஓன்றிரண்டு பிழைகள் இருந்தால் அதை சரி செய்யலாம். ஆனால், புத்தகம் முழுவதுமே பிழைகளாக இருந்தால் எப்படி பாடம் நடத்துவது? எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய இருபாடங்களுக்கான தமிழ் வழிப் பாடத் திட்ட புத்தகங்களை முழுமையாகவே திருத்தம் செய்து, புதிதாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT