சிறப்பு கட்டுரைகள்

கண்ணொளி காப்போம் திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு: விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை

டி.செல்வகுமார்

சென்னை: அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வதற்கான “கண்ணொளி காப்போம்” திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் பார்வைத்திறனை பரிசோதித்து அறிவதற்காக “கண்ணொளி காப்போம்” திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு ஒருமுறை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு கண் பரிசோதனை நடத்தப்படுகிறது.

முன்பெல்லாம் பள்ளிகளுக்குசுகாதாரத் துறையில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து மாணவ, மாணவியருக்கு கண் பரிசோதனை செய்தனர். பார்வைத்திறன் குறைந்த மாணவர்களுக்கு கண்ணாடி அணிவதற்கு பரிந்துரை செய்யப்படும். அதன்படி, சுகாதாரத் துறை சார்பில் பார்வைத்திறன் குறையுள்ள மாணவர்களுக்கு கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.

இப்போது, அந்தந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகளே மாணவர்களின் பார்வைத்திறன் குறைபாட்டை அறிந்து சொல்கின்றனர். அதற்காக சுகாதாரத் துறை மூலம், அணி அணியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. செல்போன் செயலி மூலம் இப்பரிசோதனையை ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.

தூரத்தில் உள்ள எழுத்துகள் தெரிகிறதா, வண்ணங்கள் சரியாக தெரிகிறதா, கண்ணின் மையத்தின் கரும்புள்ளிகள் இருக்கிறதா, கண்ணாடி அணிந்திருக்கிறாயா, இல்லையா என்பன போன்ற 10 கேள்விகள் கேட்கப்பட்டு பார்வைத்திறன் குறைபாட்டை அறிகின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்பரிசோதனை முடிவுகள் பள்ளிக் கல்வித்துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு அனுப்பப்படுகிறது. அதனடிப்படையில் பள்ளியின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகு, சுகாதாரத் துறை மூலம் மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படுகிறது.

அவ்வாறு வழங்கப்பட்ட கண்ணாடியில் ஒரு பக்கத்தில் கண்ணாடியே இல்லை என்று மாணவர் ஒருவரின் தந்தை வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த வீடியோ பதிவிட்ட நபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அவரது குழந்தை படிக்கும் பள்ளியைக் கண்டறிந்து அதன் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளுக்கு இந்த கல்வி ஆண்டில் இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பார்வைத் திறனை ஆசிரியர்கள் அதற்கான செயலி மூலம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அறிந்து தகவல் தெரிவிக்கின்றனர்.

அதனடிப்படையில் ஆங்காங்கே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படும் மாணவர்களுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்படுகிறது.

அப்போது ஒவ்வொரு மாணவரையும் கண்ணாடி அணியச் செய்து அதனை சரிபார்த்த பிறகே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால் கண்ணாடியில் ஒருபகுதியில் கண்ணாடி இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் அறிக்கை கேட்டுள்ளோம்” என்றனர்.

இதுதொடர்பாக பெற்றோர் கூறுகையில், “தற்போது குழந்தைகள் அதிகமாக செல்போன் பயன்படுத்துகின்றனர். அதனால், ஆசிரியர்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு முறைக்குப் பதிலாக இரண்டு தடவை கண் பரிசோதனை செய்தால் நன்றாக இருக்கும்.

அதுபோல ஆண்டுக்கு ஒருமுறை பெரியளவில் நடத்தப்படும் மருத்துவ முகாமை இன்னும் சிறப்பாக நடத்த பள்ளிக்கல்வித் துறை, சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோருகின்றனர்.

குழந்தைகளிடம் பார்வைத்திறன் குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் “கண்ணொளி காப்போம்” திட்டத்தை தொலைநோக்கு பார்வையுடனும், கூடுதல் கவனத்துடனும் அரசு செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

SCROLL FOR NEXT