சிறப்பு கட்டுரைகள்

படிப்பை தாண்டி உடல், மனநலம் சார்ந்த உரையாடல் தற்கொலையை தடுக்கும்: வழிகாட்டுகிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன்

டி.செல்வகுமார்

சென்னை: வீட்டிலும், பள்ளியிலும் படிப்பைத் தாண்டி உடல், மன நலன் சார்ந்த உரையாடல்தான் மாணவிகள் தற்கொலையை தடுக்கும். போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகள் நன்கு படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட காலம்போய், தங்கள் குழந்தைகள் எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலையில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் கடந்த ஒரு மாதமாக மாணவியர் தற்கொலை, பலர் தற்கொலை முயற்சி என்ற செய்திகள் பெற்றோரை கலக்கமடையச் செய்துள்ளது.

பெற்றோரின் கவலை மாணவ, மாணவியரின் தற்கொலை, அதற்கான முயற்சியைத் தடுக்க மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க அரசும், பல்வேறு அமைப்புகளும் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இருந்தபோதிலும் மாணவிகள் உயிரிழப்பு, தற்கொலை முயற்சி தொடர்வது ஆபத்தான சூழல் நீடிப்பதை உணர்த்துகிறது. இதைத் தடுப்பது தொடர்பாக குழந்தை உரிமை செயற்பாட்டாளர் அ.தேவநேயன் நம்மிடம் பகிர்ந்து கொண்டது "நன்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்களால் தான் குழந்தைகளுக்கு அதிகமாக பாலியல் வன்முறை நடைபெறுகிறது" என ஆய்வு தெரிவிக்கிறது.

ஒற்றுமை குலைந்த பெற்றோரின் பெண் பிள்ளைகளை குறிவைத்து பாலியல் அத்துமீறல் நடக்கிறது. அத்தகைய சூழலில் வேறொருவரின் ஆறுதல் கிடைக்கும்போது அதை விரும்பியும், நம்பியும் பழக ஆரம்பிக்கின்றனர். அதை போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்முறை தொடர்கிறது.

அ.தேவநேயன்

இதுபோன்ற பல சம்பவங்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில் இந்தியாவில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. குற்றவாளிகள் மீது வழக்கு பதியப்படுவதில் தமிழகம் முந்தியிருந்தாலும் இதுவரை 14 சதவீதம் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது பெரும் துயரம்.

இது ஒருபுறம் இருக்க, குழந்தை வளர்ப்பிலிருந்தே இப்பிரச்சினையை களையும் முனைப்பு பொது சமூகத்துக்கு வேண்டும். நல்ல தொடுதல், தவறான தொடுதல் என பெண் குழந்தைளுக்கு சொல்லித் தரும் அதேவேளையில் ஆண் குழந்தைகளுக்கும் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். பள்ளிகளில் வாழ்க்கைத் திறன் மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான கல்வியை கற்றுத் தர வேண்டும்.

பாலின சமத்துவம் பற்றி இருபாலருக்கும் வகுப்புகள் நடத்த வேண்டும். கல்வி நிலையங்கள் சமூக அறிவு, மனம் சார்ந்த கல்வியை சொல்லித் தரும் இடங்களாக மாற வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களின் சமூக, பொருளாதார சூழல் அறிந்து அவர்களுக்கு ஏற்ற ஆலோசகர்களாக மாற வேண்டும். ஆசிரியர் பணி என்பது அறம் சார்ந்த, மூளை சார்ந்த, இதயம் சார்ந்ததாக மாறுவது நலம்.

வீடுகளில் பெற்றோர் - குழந்தைகள் உறவும், பள்ளிகளில் ஆசிரியர் - குழந்தைகள் உறவும் மேம்பட வேண்டும். குழந்தை நேயமும், குழந்தை பாதுகாப்பு அணுகுமுறையும் வேண்டும்.

உடல், மனம் சார்ந்த உரையாடல்

வீட்டிலும், பள்ளியிலும் படிப்பைத் தாண்டி உடல்,மன நலன் சார்ந்த உரையாடல் இருத்தல் அவசியம். அவ்வாறு நடைபெற்றால்தான், தனது மனக் குறையை யாரிடமும் சொல்ல முடியவில்லையே என்ற சூழலில், தற்கொலை முடிவுக்கு செல்லும் உளவியல் சிக்கலில் இருந்து பெண் குழந்தைகளை விடுவிக்க முடியும்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அதிகபட்ச தண்டனையாக இருந்தால் மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் என்றார் தேவநேயன்.

SCROLL FOR NEXT