சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் பாடம் நடத்த ஏற்கெனவே வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மேலும் எளிதாகப் பாடம் நடத்துவதற்காக தமிழ் உள்ளிட்ட பாடங்களின் பாடத்திட்டங்கள் வீடியோவாக பதிவு செய்யப்படுகின்றன.
கரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய 1 முதல் 3-ம் வகுப்பு வரை ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தையும், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தையும் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.
இல்லம் தேடி கல்வித் திட்டம் தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மையங்களில் செயல்படுத் தப்படுகிறது. பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்கு வரும் குழந்தைகள் சற்றுஓய்வுக்குப் பிறகு, இல்லம் தேடி கல்வி மையத்திற்கு சென்று மாலை5.15 மணி முதல் 6.15 மணி வரைகல்வி பயில்கின்றனர்.
அவர்களுக்குதன்னார்வலர்கள் பாடம் நடத்து கிறார்கள். அவர்களில் பி.எச்டி., பி.எட் படித்தவர்கள் பலர் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த வர்களாகவே உள்ளனர்.
அதனால் அவர்களுக்கு வழிகாட்டி கையேடு மட்டு்ம் போதாது என்பதால், அவர்கள் எளிமையாகப் புரிந்துகொண்டு குழந்தைகளுக்கு சுவாரஸ்யமாக பாடம் நடத்த வசதியாக தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களின் பாடத்திட்டங்கள் வீடியோவாக பதிவு செய்யப்படுகின்றன.
இதற்காக மதுரை, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாதிரி வகுப்புகள் மூலம் பாடத்திட்டங்கள் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன.
விளையாட்டு வழிக் கற்றல்
கடந்த 3 நாட்களாக சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் ராமா தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் பள்ளி பாடங்கள் விளையாட்டு வழிக் கற்றல் முறையில் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து இல்லம் தேடிக் கல்வித் திட்ட சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: இல்லம் தேடிக் கல்வித் திட்டமையங்களில் பாடம் நடத்தும் தன்னார்வலர்களுக்கு ஏற்கெனவே வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டுள் ளன. அவர்களது கற்பித்தல் பணியை மேலும் எளிதாக்குவதற்காகவும், மாணவர்கள் புரிந்து படிக்கும் ஆற்றலை அதிகரிப்பதற்காகவும் தமிழ்,ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் பாடத்திட்டங்களை வீடியோ பதிவு செய்து வருகிறோம்.
இதற்காக சிறப்பாக செயல்படும் தன்னார்வலர்களைக் கொண்டும் கதை மற்றும் விளை யாட்டு வழியாக எப்படி பாடம் நடத்துவது, மாணவர்களை எப்படி உற்சாகமாக கற்கச் செய்வது என்பன உள்ளிட்ட காட்சிகள் தத்ரூபமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
குதித்து விளையாடுதல்
உதாரணத்திற்கு அறிவியல் பாடத்தில் உள்ள நிலவாழ் தாவரங்கள், நீர்வாழ் தாவரங்கள் பாடத்தை நடத்துவதற்கு மாதிரி வகுப்பறையில் வட்டங்கள் வரையப்பட்டன. விளையாட்டு முறையில் இப்பாடம் நடத்தப்பட்டது. அப்போது நீர்வாழ்தாவரங்களான அல்லி, ஆகாயத் தாமரை போன்றவற்றை சொல்லும்போது மாணவர்கள் குதித்து வட்டத்திற்குள் வந்துவிட வேண்டும்.
நிலவாழ் தாவரங்களான மா, வேம்பு, புங்கம், தேக்கு போன்ற மரங்களின் பெயரைச் சொல்லும்போது வட்டத்தைவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். இதை மாணவர்கள் செய்தபோது வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதுபோல 10-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவு செய்யப்பட் டுள்ளன. பாடத்திற்கு பாடம் வீடியோக் களின் எண்ணிக்கை வேறுபடும்.
இந்த வீடியோக்கள் 100 சத வீதம் பதிவு செய்யப்பட்டதும் தன்னார்வலர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அவர்கள் தங்களது வழிகாட்டி கையேட்டில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் வீடியோக்களை பார்க்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் வட்டாரம், தாலுகா, மாவட்ட அளவிலும் தனியாக லிங்க்அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கிறது.
இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.