சிறப்பு கட்டுரைகள்

இரண்டு மலைகளை இணைத்து 104 அடி உயரத்தில் தொட்டி பாலம்! - ஆசியாவிலே மிகப்பெரியது

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு மலைகளை இணைத்து 104 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது தொட்டி பாலம்.

காமராஜர் எப்போதும் வித்தியாசமாக ஒரு பிரச்சினையை அணுகுபவர் என்பதற்கு தொட்டி பாலம் ஒரு எடுத்துக்காட்டு. யாராவது தண்ணீரை ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு கொண்டு போவதை கற்பனை செய்து பார்த்திருப்போமா!

மலையில் இருந்து தண்ணீர் கீழே தானே செல்லும். அதை எப்படி இன்னொரு மலைக்கு கொண்டு செல்வது என்றுதானே நினைப்போம்.

மகேந்திரபுரி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரை, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கொண்டு சென்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தரிசு நிலம் பாசன வசதி பெறும் என்று காமராஜர் எண்ணினார்.

இந்த யோசனையை தனது பொறியாளர்களிடம் தெரிவித்தார். பொறியாளர்களோ, இது என்ன முட்டாள்தனமான யோசனையாய் இருக்கிறது என்று எண்ணி மறுத்தனர்.

சிக்கலில் இருந்து விடை கண்டுபிடிப்பவர்தான் காமராஜர். அவர் தனது பொறியாளர்களிடம் "முடியாது என்று சொல்வதற்கு நாம் இங்கு கூடவில்லை. எப்படி முடியும் என்று தெரிந்துகொள்ளவே இங்கு கூடியுள்ளோம்" என்றார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தின் விளைவுதான் தொட்டி பாலம். மகேந்திரபுரியில் உற்பத்தியாகும் பரளியாற்று தண்ணீர் மாத்தூர் வந்தடைகிறது. பின் இந்த கால்வாய் மூலம் கூடுவல் பாறை மலையில் கால்வாயாகவே தேங்காய்பட்டினம் செல்கிறது. அங்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம், விளவன்காடு பகுதிக்கு பாசன வசதி தருகிறது.

இது, ஆசியாவிலேயே பெரிய தொட்டி பாலமாக விளங்குகிறது. உலகில் பல இடத்தில் இருந்தும் பலர் இந்த பாலத்தை பார்க்க வந்து, பார்த்துவிட்டு பிரமிப்புடன் செல்கின்றனர். சிறந்த சுற்றுலா தலமாகவும் இது திகழ்கிறது. இந்த பாலத்தின் கீழே பாறலியாறு செல்கிறது. கீழே இருந்து 104 அடி உயரத்திற்கு 28 தூண்களும், 7 அடி அகலமும், 7 அடி உயரமும் கொண்ட கான்கிரீட் கால்வாயாக 1,240 அடி தூர நீளமுமாக உள்ளது. யாருக்கும் தோன்றாதது யாருக்கு தோன்றுகிறதோ அவனே தலைவன் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

- அரு.செந்தில்குமார்,‘காமராஜரின் ஆட்சியும், ஆளுமையும்’, புத்தகத்திலிருந்து...

SCROLL FOR NEXT