1954, ஏப்.13-ம் தேதி காமராஜர் முதல்வராக பதவியேற்கும் தமிழ்ப் புத்தாண்டு தினம். பதவியேற்பதற்காக சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை வீதி வீட்டிலிருந்து வெளியே வந்து எம்.டி.டி. 2727 என்ற காரில் ஏறினார்.
அவருக்கு முன்னே சென்னை போலீஸ் வண்டி சைரன் ஒலியை பலமாக எழுப்பிச் சென்றது. இதைப் பார்த்த காமராஜர் உடனே காரை நிறுத்தச் சொன்னார். முன் வண்டியில் இருந்த காவல்துறை அதிகாரியை அழைத்து எதற்காக அந்த சைரனை ஒலிக்க விடுகிறார்கள் என்று கேட்டார்.
அதற்க காவல்துறை அதிகாரி "இது முதல்வர் செல்லும்போது போக்குவரத்தை சீர் செய்வதற்காக எழுப்பப்படும் ஒலி. இதுவரை இருந்த அனைத்து முதல்வர்கள் சென்றபோது இந்த நடைமுறை வழக்கம்தான். அப்போதுதான் உங்களால் விரைவாகச் செல்ல முடியும்" என்றார்.
உடனே காமராஜர் அவரிடம், “இதோ பாருங்க. இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயம் எல்லாம் இருந்திருக்கலாம். எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், சத்தம் போடாமல் போங்க" என்று கூறிவிட்டு காரில் ஏறினார். அதற்குப் பின் காமராஜர் முதல்வராக இருந்தவரை எப்போதும் சைரன் ஒலிக்கவிட்டதே இல்லை.
காமராஜர் அமைச்சரவையில் அனைவரும் வியக்கும் அம்சம் என்றால், பி.பரமேஸ்வரனை பட்டியலினம் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக நியமனம் செய்ததுதான். அன்றைய காலகட்டத்தில் கோயில்களில் பட்டியலினத்தவர் நுழைவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது.
கண்டிப்புக்காட்டி அதை திருத்த முயல்வதைவிட, புத்திசாலித்தனமாக தீர்க்க முடிவு செய்தார் காமராஜர். அறநிலையத் துறை அமைச்சர் ஒருவருக்கு பூரண கும்ப மரியாதை தர வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமை. அதனால் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அறநிலையத் துறை அமைச்சராக்கி, கோயிலில் மரியாதையுடன் நுழையவைத்து ஒரு மகத்தான புரட்சியைச் செய்தார் காமராஜர்.
எஸ்.கே.முருகன், "பெருந்தலைவர் காமராஜர்" - நூல்.