சிறப்பு கட்டுரைகள்

குழந்தைகளின் உடல் பருமன் பிரச்சினைக்கு சிறுதானியங்களே சிறந்த தீர்வு

டி.செல்வகுமார்

பசித்துப் புசிப்பது என்ற நிலையில் இருந்து இறங்கி, வேளாவேளைக்கு உண்பது என வழக்கமாக்கி, கிடைப்பதைத் தின்பது என்ற நமது உணவுப்பழக்கம் மாறிவிட்டதால், சத்தானஉணவு என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது.

"பதப்படுத்தி விற்கப்படும் டப்பா உணவுகளே எதிர்காலத்தில் துப்பாக்கிகளைக் காட்டிலும் மிகக்கொடிய கொலைக் கருவியாகத் திகழும்" என்று ஆங்கில நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் 1937-ம் ஆண்டு எழுதிய "தி ரோடு டூ வைகன்பைர்" (The Road to Wigan Pier) என்ற நூலில் குறிப்பிட்டு எழுதினார்.

தற்போது 76 ஆண்டுகளைக் கடந்தநிலையில், அவரின் முன்னோக்குப் பார்வை நமக்கு வியப்பளிக்கிறது. பேக்கிங் செய்யப்பட்ட சிப்ஸ், பர்கர், பீஸா என்று முற்றிலும் மண்ணுக்கும் மரபுக்கும் தொடர்பில்லாத உணவுகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறது நம் இளைய சமுதாயம். பொறித்த, வறுத்தஎண்ணெய் உணவுகளுக்கே வேலையில்லாத நம் மரபில் இன்றைக்கு அவைதாம் முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதிக்கும் மக்களுக்கு சிறுதானியங்களே சிறந்த தீர்வு.

சிறுதானியங்கள் நமது மண்ணின்மகத்தான வரம். எப்படிப்பட்ட வறட்சியையும் தாங்கி வளரக் கூடிய தன்மைகொண்டாக இருப்பதால், அடிக்கடி மழை பொய்த்துப் போகும் வாய்ப்புள்ளபகுதிகளுக்கு கேழ்வரகு, பனிவரகு,தினை, சாமை, வரகு, குதிரைவாலி, அரிசி, கோதுமை உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் இயற்கையின் கொடையாகும்.

இதன் காரணமாகவேநம் ஊர்களில் உள்ள கோயில் கோபுரங்களில் இத்தானியங்களைப் பாதுகாத்து வைத்தனர். இதனை வெறும்ஆன்மீகப் பார்வையில் பார்க்கிறோம். ஆனால், அதில் பொதிந்து கிடக்கும்அறிவியலை பார்த்தால், நம் முன்னோர் எவ்வளவு தொலைநோக்குடன் இருந் தனர் என்பதை அறிய முடியும்.

தற்போது குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என பெரும்பாலானோருக்கு உள்ள பெரும் பிரச்சினை உடல் பருமன். ‘‘இந்தப் பிரச்சினைக்கு சிறுதானியங்கள் சிறந்த தீர்வாகவே இருக்கும்’’ என்கிறார் டாக்டர் கு.கணேசன்.

இதுகுறித்து டாக்டர் மேலும் கூறியதாவது: வெள்ளை அரிசியைவிட சிறுதானியங்களில் மாவுச்சத்து 20 சதவீதம்குறைவாக உள்ளது. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி ருசியாக இருக்கிறது என்று சொல்லி குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதே உடல் பருமனுக்கு காரணம். சிறுதானியங்களில் மாவுச் சத்து குறைவு.

அதேநேரத்தில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் என்பதால் உடல் பருமனாகாது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். சர்க்கரை நோய், மலச்சிக்கல் வராது. செரிமானம் நன்றாக இருக்கும்.

அரிசியோடு ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நுண்சத்துக்களான கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அதிகம்.நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.செரிமானத்தைத் தாமதப்படுத்தும் என்பதால் உடல் பருமனாகாது. இதனால் சிறுதானியங்களே சிறந்த தீர்வு என ஆய்வுகள் கூறுகின்றன.

SCROLL FOR NEXT