அறிவியல் கண்டுபிடிப்புகளில் பல தற்செய லாக நிகழ்ந்தவை. இதுபோன்ற தற்செயல் கண்டுபிடிப்புகள் Serendipitous Discoveries என்றழைக்கப்படுகின்றன. வேதியியல் துறையில் நிகழ்ந்த எதிர்பாரா கண்டுபிடிப்புகளில் ஒன்று ஊதா வண்ணம். புகழ்பெற்ற வேதியியல் அறிஞர் ஆகஸ்ட் வில்ஹெல்ம் வான் ஹாப்மேன் லண்டன் ராயல் வேதியியல் கல்லூரியில் பணிபுரிந்த காலம் அது. இவரது வழிகாட்டுதலில் மாணவர் வில்லியம் ஹென்றி பெர்க்கின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். சின்கோனா (Cinchona) மரப் பட்டையில் இருந்து எடுக்கப்பட்ட க்வினீன் (qunine) மலேரியா நோய்க்கு மருந்தாக அப்போது பயன்பட்டது.
நன்மை பயக்கும் செயற்கை: சின்கோனா மரத்திலிருந்து இயற்கையான முறையில் க்வினீன் மிகக் குறைவாகவே பெறப்பட்டது. மருந்தின் விலையும், மருந்துக்கான தேவையும் அதிகமாக இருந்தது. எனவே, வேதியியல் ஆய்வுக்கூடத்தில் க்வினீன் தயாரிக்கும் முயற்சியில் ஹாப்மேன் கூடுதல் அக்கறைக் காட்டினார்.
தன் உதவியாளரான பெர்க்கினிடம் இந்தப் பணியை ஒப்படைத்திருந்தார். செயற்கை முறையில் பெருமளவில் க்வினீன் தயாரிக்க முடிந்தால் விலையும் குறையும், அதிக நோயாளர்களையும் காப்பாற்ற முடியும். இதற்கு அனலைன்(Aniline), டொல்யுஐடீன் (toluidine) ஆகிய கரிம வேதிப்பொருட்களை பெர்க்கின் எடுத்தார். அவை மலிவாகக் கருதப்படும், ஏராளமாகக் கிடைக்கக்கூடிய நிலக்கரி தாரில் (Coal tar) இருந்து பெறப்படுபவை.
1856 ஆண்டின் ஈஸ்டர் விடுமுறையின்போது தனது வீட்டிலும் எளிமையான வேதியியல் சோதனைக்கூடம் அமைத்து, அதில் ஆராய்ச்சியை பெர்க்கின் தொடர்ந்தார். அனலைன், டொல்யுஐடீன் வேதிப் பொருட்களுடன் பொட்டாசியம் டைகுரோமேட், கந்தக அமிலத்தைக் கலந்தார். பொட்டாசியம் டைகுரோமேட் ஆற்றல்மிக்க ஆக்சிஜனேற்றி. வேதிவினை முடிந்து நிறமற்ற க்வினீன் கிடைக்கக் காத்திருந்த பெர்க்கினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கறுப்பு வண்ணத்தில் களிமண் போன்ற பொருள்தான் கிடைத்தது.
ஏமாற்றமடைந்த பெர்க்கின் சோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளை ஆல்கஹால் கொண்டு கழுவ முற்பட்டார். என்ன ஆச்சரியம்! கறுப்பு வண்ண களிமண் மாதிரியான அந்தப் பொருள், ஒளி பொருந்திய ஊதா வண்ணக் கரைசலாக மாறியது. இந்த எதிர்பாராத திருப்பம்தான் பெர்க்கினின் வாழ்க்கையை மாற்றியது.
மேற்கொண்டு அந்த ஊதா வண்ணப் பொருளை ஆராய்ந்ததில் அதைத் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் வண்ணமாகப் பயன்படுத்தலாம் என பெர்க்கின் கண்டறிந்தார். குறிப்பாகப் பட்டுத் துணிகளில் அந்தச் சாயம் மிக நன்றாக ஒட்டிக் கொண்டது. அதுவரை தாவரங்களில் இருந்து பெறப்பட்ட சாயம் கொண்டே துணிகளுக்கு வண்ணமேற்றப்பட்டது. அவற்றின் விலை அதிகம், சீக்கிரம் வெளிறியும் போயின.
புதிதாய் பூத்த மலர்: தனது கண்டுபிடிப்பு விலை மலிவாகவும், நீடித்து நிலைக்கும் சாயமாகவும் இருப்பதால், வணிகரீதியாக நல்ல பலன் தரும் என்பதை பெர்க்கின் கண்டுபிடித்தார். க்வினீன் தயாரிப்பை ஓரம் கட்டிவிட்டு, ஊதா வண்ணப் பொருளைத் தயாரிப்பதில் முழுமூச்சாக இறங்கினார். தொடக்கத் தில் தான் கண்டுபிடித்த சாயப்பொருளுக்கு அனலைன் ஊதா என்று பெயரிட்டு பின்னர் ‘மாவே’ (mauve) என்றழைத்தார் (பிரெஞ்சு மொழியில் மாவே எனும் பெயர் கொண்ட மலர் உள்ளது).
வணிகரீதியாக ‘மாவே’வுக்கு அதிகம் தேவை இருப்பதால் படிப்பை நிறுத்திவிட்டார். தந்தை, அண்ணன் இருவரின் உதவியுடன் தொழிலில் முழுநேரம் இறங்கினார். சாய வணிகம் கொடிகட்டிப் பறந்தது. ஐரோப்பாவில் மற்ற ஆராய்ச்சியாளர்கள் கவனம் இதன் பக்கம் திரும்பியது. முதன்முறையாகச் செயற்கை சாய வண்ணங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கும் முறை தலைதூக்கியது. இயற்கையில் இல்லாத வண்ணங்களையும் செயற்கையாகத் தயாரிக்க முடிந்தது. வணிகரீதியாகப் பெரும் வரவேற்பும் இருந்ததால் இதன் மூலம் பெர்க்கின் பெரும் பணக்காரரானார்.
அவர் தொடங்கிவைத்த இந்த வேதி வினை (Dye Chemistry) மிகப்பெரிய அளவில் செயற்கை சாய வண்ணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக அடிகோலியது. அதன் தொடர்ச்சியாகப் புதுமையான கரிமவகை பொருட்களைத் (modern organic chemicals) தயாரிக்கவும் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (pharmaceutical industries) உருவாகவும் அடித்தளமாக அமைந்தது. தற்செயலாக நடந்த ஒரு நிகழ்ச்சி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்தியது.
- கட்டுரையாளர்: அறிவியல் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாக அறங்காவலர்;தொடர்புக்கு: vu2csm@gmail.com