செஸ் விளையாட்டில் தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிக்கொடி கட்டிப் பறக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர் மனுவேல் ஆரோன், நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் போன்ற மிகச் சிறந்த செஸ் முன்னோடிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுபோக குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருடன் கேடட் சாம்பியன் பட்டம் பெற்ற ஷர்வாணிகா வரை உலகைத் திரும்பிப் பார்க்கவைக்கும் தமிழ்நாடு செஸ் வீரர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் செஸ் போட்டியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு செஸ் போட்டிகளை மாணவர்கள் மத்தியில் நடத்த ஊக்கப்படுத்தி வருவது மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறது. மாணவர்களின் அறிவுத்திறன், சிந்தனையை மேம்படுத்தும் விளையாட்டாக அனைவராலும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் நடைபெறும் செஸ் சாம்பியன் பட்டப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெற்றிபெறுவது இந்தப் போட்டியின் மீது மென்மேலும் ஆர்வத்தையும் அக்கறையையும் அனைவரிடமும் உண்டாக்கி இருக்கிறது. இந்த விளையாட்டில் சாதிக்கும் வீரர்கள் அடுத்தடுத்த வீரர்களுக்கு உந்துசக்தியாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.
- மு. ராகினி, 7ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சின்னப்பள்ளத்தூர், செங்கனூர், பென்னாகரம், தருமபுரி.