படித்து வாங்கும் பட்டங்களை அறிவாற்றலோடு குழப்பிக்கொள்ளாதீர். ஒருவர் முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும் முட்டாளாக இருக்க வாய்ப்புள்ளது. - ரிச்சர்ட் ஃபைன்மேன்.
குவாண்டம் எலெக்ட்ரோ டைனமிக்ஸ் துறையை உருவாக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர் ரிச்சர்ட் ஃபைன்மன். அதைவிடவும் அவரை உலகப் புகழடைய வைத்தது அவரது வகுப்பறை. அவருடைய உரைவீச்சுகளால் ஊக்கம் பெற்றுத் தானும் நோபல் பரிசு பெறும் நிலைக்கு உயர்ந்தவர்களின் பட்டியலில் நம் நாட்டின் வெங்கி ராமகிருஷ்ணனும் ஒருவர்.
குழப்பமே புரிதலின் தொடக்கம்: ‘புதியன தேடி அடைவதில் இருக்கும் சுகம்’ (The Pleasure of finding things out) என்கிற புத்தகத்தில் ‘குழப்பமே புரிதலின் தொடக்கம்' என்கிறார், ரிச்சர்ட் ஃபைன்மன். “ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் கடக்கும்போது, அது குறித்து உங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டால் உங்களை நீங்களே பார்த்துச் சிரித்து ரசிக்க வேண்டும்” என்பதாக அவருடைய கற்றல் கோட்பாடு தொடங்குகிறது. வாழ்க்கை முழுவதும் தன்னை ஒரு கற்றல் கோமாளியாகச் சித்தரித்துக்கொண்டவர்.
வறுமையால் பள்ளி செல்ல முடியாமல் இளம் வயதில் தவித்தவர் ரிச்சர்ட் ஃபைன்மன். இதனால், வானொலிப் பெட்டி பழுது பார்க்கத் தெரியும் எனப் பொய் சொல்லி, அதன் மூலம் சுயமாகக் கற்றலில் ஈடுபட்டார். பிற்காலத்தில் தலைசிறந்த பேராசிரியராக உயர்ந்தார்.
அதன் பிறகு ஒருமுறை உரை நிகழ்த்துவதற்காக பிரேசிலுக்கு அழைக்கப்பட்டார். அந்த உரைவீச்சுக்காகவே போர்த்துக்கீசிய மொழியை 25 நாள்களில் கற்றார். அதிலும் வேறொரு ஆசிரியர் மூலமாக அல்ல. வீதிகளில் சென்று மக்களோடு பேசிப் பழகி, தெருப் பாடல்களைக் கேட்டு, அவற்றைப் பழகிக்கொண்டு போர்த்துக்கீசிய மொழியைச் சரளமாகப் பேசப் பழகினார்.
‘ஃபைன்மன் நுட்பம்’ - இவரது கற்றல் கோட்பாடு நான்கு முக்கிய அடுக்குகளைக் கொண்டது. ‘ஃபைன்மன் நுட்பம்’ என இது அழைக்கப்படுகிறது. “இதுதான் நான் புரிந்துகொள்ள விரும்பும் கருத்து” என்பதே முதல் படி. இரண்டாவதாக, எந்த அறிமுகமும் இல்லாத ஒருவருக்கு. அதனை நாம் விளக்க முயல வேண்டும். தெளிவான மொழியில் கடிதமாக எழுதியும் அனுப்பலாம். இந்தச் செயல்முறை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளாததை, உங்களுக்கு எடுத்துக்காட்டிவிடும்.
மூன்றாவதாக, இடைவெளிகளைக் கண்டறிந்த பிறகு அந்தப் பகுதிகளை நிரப்புதல். அதாவது, உங்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்திசெய்ய மூலத்தைத் தேடி மீண்டும் கற்றலில் ஈடுபடுதல். அதன்பின் இரண்டாவது படியை மறுபடியும் முயலுதல். நான்காவதாக, உங்கள் விளக்கம் உங்கள் மொழியில் இடம்பெற வேண்டும். இப்படிப் பாடநூல் அறிவை சுயமாக எடுத்தாளும்போது, அது உங்களின் சுய சிந்தனை அறிவாக மாறிவிடும்.
அதுவரை ‘ஜடம்போல் கற்பவர்’ என்கிற நிலையில் இருந்து முழுமையாக கற்றலில் ஈடுபடும் ஒருவராக உங்களை இது மாற்றுகிறது. இந்த அறிவுத் தேடலில் நீங்கள் உங்கள் ஆசிரியரை மிஞ்சிவிடுவீர்கள். எந்தக் குழந்தையும் முட்டாள் அல்ல என்பதை இந்நூல் உணர்த்துகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் சுய கற்றலின் பாதையைச் சொல்லிக்கொடுப்பதுதான் ஆசிரியரின் பணி. அறிவு என்கிற பெயரில் பாடப் பொருளைத் திணிப்பது அல்ல.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com