பாடங்களைப் படிக்காமல் போட்டிக்குச் செல்வதால் என்ன பயன்? பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி எனப் போட்டிகளுக்குச் சென்றால் மதிப்பெண் நூற்றுக்கு நூறு கிடைத்து விடுமா? அவை சோறு போடுமா என்று கேட்பவர்களும் உண்டு.
“நாடகங்களுக்கு ஒத்திகைப் பார்க்கிறோம் என்று ஒரு வாரமாக இவர்கள் வகுப்பறைக்கே வருவதில்லை. இத்தனை நாள் கஷ்டப் பட்டு நேரம் செலவழித்துப் படித்ததை எல்லாம், இந்நேரம் மறந்திருப் பார்கள். அதைப் பற்றி அவர்கள் கவலையும் கொள்வதில்லை” என்று சொல்பவர்களும் உண்டு.
பள்ளிகளில் இலக்கிய மன்றப் போட்டிளும், பள்ளிக் கல்வித்துறையால் தற்போது விமர்சை யாக நடத்தப்படும் கலைத் திருவிழாப் போட்டிகளும், மன்றப் போட்டிகளும் மாணவர்களுக்கு புது உத்வேகத்தைத் தந்திருக் கின்றன. இதனால் என்னனென்ன நேர்மறை விளைவுகள் ஏற்பட்டிருக் கின்றன என்று கல்வித் துறை உயர் அலுவலர் ஒருவர் பகிர்ந்து கொண்டார்.
கருத்துக்குப் பரிசு: பள்ளியில் சராசரி மாணவனாக இருந்த என்னை மற்ற மாணவர்கள் ஏதேனும் கேலியும் கிண்டலும் செய்வதால்,எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருந்தது. பள்ளியில் கட்டுரைப் போட் டிக்கு மாணவர்களைத் தேர்வு செய்தனர். கையெழுத்தே நன்றாக எழுதாத என்னை, என்னுடன் பயிலும் சக மாணவன் ஒருவன், பெயர் கொடுத்து மாட்டி விட்டான்.
எப்படியும் நாம் தோற்றுப் போய்விடுவோம் என நினைத்திருந்தபோது, எனக்குள் ஒரு தைரியத்தை ஊட்டியது, அப்போது நான் வாசித்த நூல்கள். அவற்றிலிருந்து கருத்துகளை மேற்கோள் காட்டி, கட்டுரை எழுதினேன். போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எனக்குப் பரிசு கிடைத்தது. அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். கையெழுத்து நன்றாக வராமல் போனாலும், அதைப் பற்றி கவலை கொள்ளாமல் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்தேன்.
நான் எழுதிய கருத்து களுக்காகப் பரிசு கிடைத்தது. நான் பெற்ற முதல் பரிசு அதுதான். தொடர்ந்து பேச்சுப் போட்டி களிலும் பங்கேற்றேன். ஒரு தலைப்பைச் சார்ந்து பேசுவேன். நாங்கள் படிக்கும் காலத்தில் ஒரு தலைப்பு சார்ந்து முதலில் ஐந்து நிமிடம் நேர்மறையாகப் பேச வேண்டும். அடுத்த ஐந்து நிமிடம் அதற்கு எதிராகவும் பேச வேண்டும். இது போன்ற போட்டிகளிலும் வெற்றி பெற்றேன்.
எனக்கு உடலும் வலிமை கிடையாது. விளையாட்டுப் போட்டிகளி லும் சக மாணவர்கள் அழைத்துச் சென்றுவிடுவார்கள். அதில் கடைசி இடத்தில்தான் வருவேன். இருந்தாலும் தொடர்ந்து எல்லா வற்றிலும் பங்கேற்று வந்தேன். இப்படிப் பள்ளி அளவில் கலந்து கொண்ட போட்டிகள், நான் இன்று இந்த இடத்தில் நிற்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தன.
வேலைக்குக் கைகொடுக்கும் கலை: பள்ளி அளவிலேயே எனக்கு ஏற்பட்ட நூல் வாசிப்பு பழக்கம் மாவட்டக் கல்வி அலுவலர் களுக்கான முதல்நிலைத் தேர்வில் எனக்கு உதவியது. வெற்றிபெற வழிவகுத்தது. கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட அனுபவம்தான், முதன்மைத் தேர்வில் சிறப்பாக எழுதத் துணையாக மாறியது.
ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி விரிவான கருத்துகளைத் தொகுத்து எழுதவும், விரிந்த சிந்தனையை வளர்க்கவும் கட்டுரைப் போட்டி உதவியது. பேச்சுப் போட்டிகளும், மற்ற போட்டிகளும் நேர்முகத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட உதவின. விளையாட்டுப் போட்டிகளும், மற்ற போட்டிகளும் ஒரு தேர்வில் தோற்றாலும், அதைப் பற்றி கவலை கொள்ளாமல், அதிலிருந்து கற்றுக்கொண்டு அனுபவத்தைப் பெற்று, அடுத்துவரும் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட வைத்து, வெற்றியும் பெற வைத்தது.
இந்தப் போட்டிகள் எல்லாம் உங்களுக்குள் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பாடத் தைத் தாண்டி, உலகைக் கற்க பாட இணைச் செயல்பாடுகள் அவசியம். உங்கள் சிறகுகளை விரியுங்கள். வானம் நமக்காகக் காத்திருக்கிறது. எவர் ஒருவரின் உயரமும் மற்றவரின் உயரத்தைப் பாதிக்காது. உங்கள் சிறகுகளை நம்புங்கள். பறவை தாழ்ந்தாலும், மீண்டும் உயரப் பறக்கும். உயரப் பறப்போம் என்றார்.
வகுப்பறை என்பது மாணவர் களின் ஒட்டுமொத்த திறனையும் வளர்க்கும் இடமாகத் திகழ வேண் டும். அத்தகைய வாய்ப்புகள் இன்று பள்ளிக் கல்வித் துறையால் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படு கிறது. மாணவர்களின் தோள் களைத் தட்டிக் கொடுப்போம். அவர்களுக்குள் முளைத்து விரி யட்டும் தன்னம்பிக்கையின் சிறகுகள்.
- கட்டுரையாளர்: மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, செங்கல்பட்டு மாவட்டம்; தொடர்புக்கு: bharathi.boss.3@gmail.com