சிறப்பு கட்டுரைகள்

சமூக மாற்றத்துக்கான தூதராகும் மாணவர்கள்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் போதை ஒழிப்பு மன்றம் மூலம் மேற்கொள்ளப்படும் புத்தாக்க நடவடிக்கைகள், புதிய அணுகுமுறைகள் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மன்றங்கள் மூலம் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்ந்த ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவை நடத்தப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் வெறும் விழிப்புணர்வுப் பரப்புரையாக மட்டுமில்லாமல், மாணவர்களின் மனத்திலும், நடத்தையிலும், சமூகப் பார்வையிலும் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த புதிய அணுகுமுறைகள் மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும் முக்கிய மாற்றங்கள் குறித்து அதன் நேரடி சாட்சியாக எடுத்துரைக்க விரும்புகிறேன்.

அறிவாற்றல் மாற்றம்: வழக்கமான அறிவுரைகளுக்குப் பதிலாக, விநாடி வினா, பேச்சுப் போட்டிகள், ஆய்வுக் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகள் மாணவர்களைப் போதைப்பொருள் குறித்த ஆழமான தகவல்களைத் தேடத் தூண்டுகின்றன.

இதனால் போதை பழக்கத்தின் அபாயகரமான விளைவுகள் பற்றிய முழுமையான புரிதல் ஏற்படுகிறது. அதிலும், போதைப்பொருள்கள் எவ்வாறு ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் சீர்குலைக்கின்றன என்பதை மாணவர்கள் தாங்களாகவே புள்ளிவிவரங்கள் மூலம் புரிந்துகொள்கிறார்கள்.

மனப்பான்மையில் மாற்றம்: போதை அடிமைத்தனம் என்பது கெட்டப் பழக்கம் மட்டுமல்ல, ஒரு நோய் என்பதையும், அதற்குத் தேவை சிகிச்சை என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இதனால், போதைக்கு அடிமையானவர்களை வெறுக்காமல், அவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனிதாபிமான பார்வை உருவாகிறது.

புதிய நடவடிக்கைகள் மாணவர்களிடம் பயத்தைப் போக்குவதோடு, அவர்களைச் சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாற்றுகின்றன. இதனால் போதைப்பொருள்களின் தீங்கு பற்றி வெளிப்படையாகப் பேசுவதோ, விவாதிப்பதோ தவறு அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். இது குறித்துப் பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் தயக்கமின்றி பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

தன்னம்பிக்கை உயர்வு: குறும்படங்கள், நாடகங்கள், பேரணிகள் மூலம் சமூகப் பிரச்சினை குறித்துப் பேசும்போது, தங்கள் குரலுக்கு மதிப்பு உள்ளது என்பதை உணரவே தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இது எதிர்காலத்திலும் சமூகப் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் எனும் தூண்டுதலை மாணவர்களுக்குள் ஏற்படுத்துகிறது.

மாணவர்களே மாற்றத்தின் தூதுவர்கள் இந்த புதிய உத்திகள் மாணவர்களை சமூக மாற்றத்திற்கான தூதுவர்களாக மாற்றியுள்ளன. போதைப் பொருட்கள் குறித்து மாணவர்கள் பெற்றோருக்குக் கற்பிக்கத் தொடங்குகின்றனர். இது தலைகீழான கற்றல் (Reverse Learning) போன்று, வீடுகளிலும் போதை எதிர்ப்பு குறித்த விவாதங்களைத் தொடங்குகிறது.

நட்பு வட்டத்தில் தாக்கம்: போதை ஒழிப்பு மன்றத்தில் இணைந்த மாணவர்கள், தங்கள் நண்பர்கள் தவறு செய்யும்போது, அவர்களைத் தடுத்து நிறுத்திச் சரியான பாதைக்கு வழிநடத்துகிறார்கள். ஒரு நண்பனின் அறிவுரை இன்னொரு நண்பனுக்கு எளிதாகச் சென்றடைகிறது. மாணவர்கள் நடத்தும் பேரணிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை உள்ளூரில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. இளைய தலைமுறையே இதற்கு எதிராகக் குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது, பொதுமக்களும் விழிப்புணர்வு அடைகின்றனர்.

இறுதியாக, இந்த புத்தாக்க நடவடிக்கைகள் மாணவர்களை வெறும் பாடங்களை கற்கும் மாணவர்களாக இல்லாமல், சமூகத்தின் பிரச்சினைகளை உணர்ந்து, அதற்குத் தீர்வு காணும் ஒரு பொறுப்புள்ள இளம் தலைமுறையாக மாற்றியமைத்துள்ளன. இது வெறும் போதை ஒழிப்பு மட்டுமல்ல, ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நீண்டகால முதலீடாகும்.

- அ.ம.கவின்பாலா, 10ஆம் வகுப்பு மாணவர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.

SCROLL FOR NEXT