தமிழக பள்ளிக் கல்வித் துறை நடை முறைப்படுத்திவரும் புதுமைகளில் மிகச் சிறந்த முன்னோடித் திட்டம் கலைத் திருவிழா. அனைத்து மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. பல்வேறு கலை வடிவங்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. தமிழகத்தின் மரபுக் கலை வடிவங்களையும் பண்பாட்டையும் மாணவர்கள் அறிந்துகொள்ள வழிவகுக்கிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கி அரசு, அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகளுக்குக் கலைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் நடப்பாண்டிற்கான கலைத் திருவிழா போட்டிகள் அரசு பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் ஐந்து பிரிவுகளில் ‘பசுமையும் பாரம்பரியமும்’ எனும் மையக்கருத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தலைப்பானது தமிழ்நாட்டின் தொன்மை, மரபு, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றும் விதத்தில் அமைந் துள்ளது பாராட்டுக்குரியது.
சிறப்பு சிறாருக்கு 15 போட்டிகள்: முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புக்கு ஒரு பிரிவாகவும், மூன்று முதல் ஐந்து வகுப்புவரை இரண்டாம் பிரிவாகவும், 6 முதல் 8 வகுப்புவரை மூன்றாம் பிரிவாகவும், 9, 10ஆம் வகுப்புகள் நான்காம் பிரிவாகவும், 11, 12 ஆம் வகுப்புகள் ஐந்தாம் பிரிவாகவும் பிரிக்கப்பட்டு மொத்தம் நூறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகள் பள்ளி அளவில், குறுவட்ட அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் எனப் படிப்படியாக நடைபெற உள்ளது.
ஒரு மாணவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப் போட்டிகளில் பங்கு பெற முடியும். இதில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தை களுக்கு எனத் தனியாக 15 போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் அனைத்து குழந்தைகளையும் உள்ளடங்கிய கலைத் திருவிழாவாக இது மிளிர்கிறது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி அனைத்து வகையான மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும் அனைத்து மாணவர்களும் பங்கேற்று பயன்பெறும் விதமாகவும் பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் கலை பண்பாட்டுக் கொண் டாட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைத் திருவிழா திட்டத்தின் நோக்கமாகும்.
ஆர்வத்தைத் தூண்டும் விழா: கலைத் திருவிழாவின் காரணமாக பல்வேறு பயன்கள் கிடைத்தாலும், முக்கியமாக இடைநிற்றலை இது வெகுவாகக் குறைக்கிறது. பள்ளிக்கு நீண்ட நாள் வராத மாணவர்கள்கூட கலைத் திருவிழா தொடங்கியவுடன் பள்ளியை நோக்கித் திரும்புவது, மாணவர்கள் பள்ளிக்கு வர ஆர்வம் காட்டுவது ஆண்டுதோறும் நடக்கக்கூடிய ஓர் அதிசய வெற்றியாகும்.
மாணவர்களின் கலைத்திறன் வெளிப்படுகிறது. படைப்பாற்றலை மெருகேற்றுகிறது. மென்மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் வாய்ப்பு கிடைக் கிறது. தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. சமூக ஒருங்கிணைப்பை உருவாக்குகிறது.
மாணவர்கள் ஒருவருக்கொருவர் பழக, கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. மாணவர்கள் தங்கள் பண்பாட்டைப் புரிந்து கொள்வது மட்டுமல்லாது, பிற பண்பாடு களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. கலை களில் ஈடுபடுவது அவர்களின் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது.
‘கலையரசன்’, ‘கலையரசி’ ஆகிய பட்டங் கள் மாணவர்களை ஊக்குவிக்கின்றன. வெற்றி யாளர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதால், பல்துறை அறிவு பெருகுகிறது. மாணவர்களுக்குத் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. தானாக முடிவெடுக்கும் திறன் வளர்கிறது.
ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் சரியான திறமையைக் கண்டறிந்து பொருத்தமான போட்டிகளில் பங்கேற்க வைப்பதன் மூலம் முழு ஆளுமை மிக்க ஒரு குழந்தையை உருவாக்க இயலும். இதன் காரணமாக சமூகம் மேம்பாடு அடையும். வருங்கால இந்தியா வளம் மிக்க நாடாக அமையும். எனவே, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் அனைவரையும் கலைத் திருவிழாவில் பங்கேற்க வைப்பது ஒவ்வொரு ஆசிரி யரின் கடமையாகும். மாணவர்களை ஊக்குவிப்போம்; கலைத் திருவிழா வைக் கொண்டாடுவோம்.
- கட்டுரையாளர்: மு. தென்னவன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மதுரை; thennavanvenba@gmail.com