தற்காலத்தில் ஆசிரியப் பணி சவால்கள் நிறைந்தது. சவால்களின் கடினத்தன்மை கூடும்போது ஆசிரியர்களாகிய நாமும் புதுப்பித்துக்கொள்வது அவசியமாகிறது. காலத்துக்கு ஏற்றவாறு நம்மை உயர்த்திக் கொள்வது எப்படி? பாடப்பொருளும் கற்பித்தல் முறையும் மாணவர்களைக் கவரும்போதுதான் அவை முழுப் பலனைத் தருகின்றன.
இல்லாவிட்டால் நம் உழைப்பு வீணாகிவிடும். வீணாகும் உழைப்பு சலிப்பூட்டி, கடனே எனப் பாடம் நடத்த வைக்கும். எனவே, மாணவர்களை ஆசிரியர்கள் சரிவரப் புரிந்துகொள்வது பாடப்பொருளைவிடக் கற்பித்தல் முறையைவிட முக்கியத்துவம் பெறுகிறது.
மரம் ஏறும் அறிவு: வகுப்பில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு கிடைப்பது முக்கியம். விடை தெரியாவிட்டாலும், தவறாகப் பதில் சொன்னாலும் ஆசிரியர் கேலி செய்யமாட்டார். பிறருடன் நம்மை ஒப்பிட மாட்டார் என்கிற நம்பிக்கை மாணவர்களுக்கு ஏற்படும்படி ஆசிரியர் செயல்பட வேண்டும். பயம் இருக்கும் இடத்தில் கற்றல் நிகழாது. மரம் ஏறுவதும் மாலை கட்டுவதும் அறிவுதான். அறிவில் உயர்வு தாழ்வு இல்லை. மாணவர்களுக்குத் தெரிந்த ஒன்று, நமக்குத் தெரியாது என உணரும்போது ஒரு பணிவு வரும்.
நான் சொல்வது புரிகிறதா? இல்லை வேறு விளக்கம் வேண்டுமா? அடுத்த முறை என் நடவடிக்கைகளில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றெல்லாம் திறந்த மனதோடு கேட்பதும், மாணவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப நாம் நடந்துகொள்வதும் அவசியம். அவர்களிடம் கருத்துக் கேட்கிறோம் என்றால், நாம் அவர்களை மதிக்கிறோம் எனப் பொருள். மாணவர்களின் ஆலோசனைகளின்படி ஆசிரியர்கள் நடந்துகொள்வது மாணவர்களின் சுயமதிப்பைப் பெரிதும் உயர்த்தும்.
ஆசிரியரிடம் மாற்றம்: நம் ஆசிரியர்கள் நமக்குக் கற்பித்த முறையென்பது இந்தக் கால மாணவர்களுக்குப் பொருந்தாது. நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் வளர்த்துக்கொள்வது அவசியம். ஒரு பாடக்கருத்தைப் புரிந்துகொள்ள நான்கோ ஐந்தோ வழிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுள் உங்களுக்கு விருப்பமானது எது, அந்த வழியில் இப்பாடத்தை நடத்தலாமா என மாணவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். இது அவர்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை உணர்த்தும்.
பாடம் நடத்தப் புது வழி: தமிழகப் பள்ளிக்கூடங்கள் சிலவற்றில் அண்மையில் ஓர் ஆய்வு நடத்தினோம். அதில், ஆசிரியர் பாடம் நடத்துவதற்கு முன்பே 30 முதல் 40 சதவீத மாணவர்கள் பாடத்தைப் படித்து வருகிறார்கள் என்பதைக் கண்டறிந்தோம். வாசிக்கத் தெரியாதவர்களும் பாடத்தின் உள்ளடக்கம் என்னவென்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இப்போது நம் வழக்கமான கற்பித்தல் முறை எடுபடாமல் போகிறது அல்லவா. ஆனால், இங்கு ஒரு புதுக் கதவு திறக்கிறது.
வாசித்து வந்தவர்கள் அந்தப் பாடத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா, உங்களுக்குப் புரியாத பகுதிகள் ஏதேனும் உண்டா என மாணவர்களிடம் கேட்டால், ஒருசிலராவது சொல்ல முன்வருவார்கள். பிறரிடம் விட்டுப்போன கருத்துகள் ஏதேனும் உண்டா எனத் தேடச் சொல்லலாம்.
இந்நேரம் முன்னரே படித்து வந்தவர்கள் புரியாத பகுதிக்கான விளக்கம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்கலாம். எந்தெந்த வினாக்களுக்கு உங்களாலேயே பதில் கண்டுபிடிக்க முடியும் எனக் கேட்டு மெல்லமெல்ல சுயக் கற்றலை ஊக்குவிக்கலாம். இதனால் குழந்தைகளைக் கவனிக்க நேரம் கிடைக்கும். வகுப்பறையில் பாடத்தோடு தொடர்புடைய சுவையான பல கருத்துகளைப் பற்றிப் பேசலாம். குழந்தைகளின் தன்னம்பிக்கை பெருகும்.
உண்மையான மதிப்பீடு: சமைக்கும்போது சரியான அளவில் கூட்டுப்பொருள்களைச் சேர்த்தோமா என அவ்வப்போது பரிசோதிப்போம். அதுபோல் நாம் கூறிய கதை, தேர்ந்தெடுத்த செயல்பாடு மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை அப்போதைக்கு அப்போதே தெரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு நல்ல வழி குழந்தைகளின் எதிர்வினைகளை, உடல்மொழியை உன்னிப்பாகக் கவனிப்பது. நாளைக்கும் கதை சொல்வீர்களா என மாணவர்கள் கேட்பது, கூறிய கதையை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது, நம் வகுப்புக்காகக் காத்திருப்பது, பாடவேளை முடிந்துவிட்டதே என ஏங்குவது, நாம் சொல்லாமலே சில செயல்பாடுகளைச் செய்துவருவது, அனைவரும் வீட்டுப்பாடத்தைச் செய்துவருவது எனப் பல குறியீடுகள் நாம் அன்பாசிரியராகச் செயலாற்றி வருகிறோம் என்பதற்கான அத்தாட்சி. இந்தச் சமிக்ஞைகள் நம் மகிழ்ச்சியைப் பெருக்கும். உற்சாகத்தைக் கூட்டும். அந்த உற்சாகம் மாணவர்களையும் தொற்றிக்கொள்ளும். மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தலுக்கு வழிவகுக்கும்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; rajendran@qrius.in