பவடிவ வகுப்பறைகள் தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் சமீபத்திய வழிகாட்டுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விவாதப்பொருளாக மாறி இருப்பதும் மகிழ்வானதே. ஏனெனில் மாற்றங்கள் சமூக ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். பவடிவிலான வகுப்பறைகளை அமைத்தல் என்பது அடிப்படையில் கடைசி பெஞ்ச் என்கிற சொல்லாடலை நீக்குவதற்கே.
அரசின் சுற்றறிக்கையில் பவடிவிலான வகுப்பறைகள் என்னென்ன நன்மைகளை விளைவிக்கும் என விவரமாக விளக்கப்பட்டுள்ளது.
அவை எல்லாமே வகுப்பில் அதிகபட்சம் 25 மாணவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். அதேபோல வகுப்பறைகளும் ஆசிரியர்களும் அதற்கு ஏற்றார்போல இருக்கவேண்டும். அதையும் நிறைவேற்றிவிட்டால் வெகுவாகச் சிக்கலைக் குறைக்கலாம்.
மனநிலையா? உள்கட்டமைப்பா? - வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே இருந்தாலும் எல்லாப் பாடவேளைகளுக்கும் ப வடிவில் அமர்ந்து கற்றலில் ஈடுபடுவது சரிவராது. நிறைய உரையாடல்கள் இருக்கும் பாடவேளைகளுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். தொடக்க நிலை வகுப்புகளில் இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. கணிதப் பாடங்களுக்கு, குறிப்பாகக் கரும்பலகை அதிகப் பயன்பாட்டில் இருக்கும்போது இந்த வகுப்பறை அமைப்பு சிக்கலானதாகிவிடும்.
கழுத்து வலி, முதுகுவலி வரக்கூடும். வகுப்பறைகள் சிறியதாக இருக்கும்பட்சத்தில் குழந்தைகள் இருக்கைக்குச் சென்று அமர்வதிலும் சிக்கல் வரும். அடிப்படை பிரச்சினை கடைசி பெஞ்ச். இதனைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என ஆலோசிப்பது அவசியமானது.
கடைசி பெஞ்ச்சில் படித்தவர்கள் நன்றாக வரவில்லையா, பெரிய பதவிக்குப் போகவில்லையா, வியாபாரிகளாக மாறவில்லையா என எதிர்க் கேள்விகளும் வரும். வகுப்பில் மாணவர்களின் மனநிலையை யோசித்தால் அது பெரும் அவஸ்தையான அனுபவமாகவே இருக்கும். கடைசி பெஞ்ச் என்பது எதற்கும் உதவாதவர்கள் என்கிற மனநிலையே பெரும்பாலும் உள்ளது. அதனைப் போக்குவது அவசியம்.
தீர்வுக்கான துளி: வகுப்பறையில் சுழற்சி முறையில் மாணவர்களை அமரவைப்பது அற்புதமான உத்தி. பல நாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. மிகப்பெரிய மாற்றாக அமையும். உயரமாக இருப்பவர்கள்தான் சிக்கலாக இருப்பார்கள்.
பெயர்களின் ஏறு வரிசைக்கு ஏற்றபடி, இறங்கு வரிசைக்கு ஏற்றபடி, யார் முதலில் வருகிறார்களோ அந்த வரிசைக்கு ஏற்றபடி, பிறந்தநாளின் அடிப்படையில் அமர வைக்கலாம். எப்படி அமரவைப்பது என்பதே ஒரு விளையாட்டாக, குழந்தைகளே முடிவு செய்வது போன்ற செயல்பாடாக மாற்றலாம்.
குலுக்கல் முறையிலும் இருக்கைகளைத் தேர்வு செய்யலாம். ஒரே இடத்தில் அமர்வதால் கவனக்குறைவு அதிகரிக்கும். அதற்கு மாற்றாக சுழற்சி முறையில் அமரும்போது சுறுசுறுப்புடன் இருக்க ஒருவகையில் உதவும். எல்லாக் குழந்தைகளுடன் உரையாடும் சந்தர்ப்பமும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும். முதல் பெஞ்ச் சலுகைகளும் குறையும். அனைவருக்குமானதாக வகுப்பறை மாறும்.
மாற்றம் = இடம் மட்டுமல்ல: எல்லாவற்றுக்கும் மேலாக, வெறும் வகுப்பறைகளை மாற்றி அமைப்பதிலோ சுழற்சி முறையில் மாணவர்களை அமர வைப்பதிலோ மட்டுமே மாற்றம் நிகழ்ந்துவிடாது. ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் வேண்டும். செயல்பாடுகளுடன் கூடிய வகுப்பறைகளை அதிகரிக்க வேண்டும், சுதந்திரமான உரையாடல்கள் நிகழும் இடமாக வகுப்பறை மாற வேண்டும். இவற்றுக்குப் போதிய அடிப்படை வசதிகளை அனைத்து பள்ளிகளிலும் செயல்முறைப்படுத்திட வேண்டும்.
வகுப்பறைகளுக்குள் நிச்சயம் நிறைய மாயாஜாலம் செய்ய இயலும். ஆசிரியருக்கு அதற்குப் போதுமான சுதந்திரம் அவசியம். அதேநேரம் பல்வேறு கற்பித்தல் முறைகள், அதன் அவசியங்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதங்கள் குறித்த பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை உள்ளாக்க வேண்டும். இவை நடந்தேறினால் பெரும் மாயங்கள் நிச்சயமாக நிகழும். ‘கடைசி பெஞ்ச்’ தானாக அலையில் அடித்துக்கொண்டு போய்விடும்.
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘பென்சில்களின் அட்டகாசம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்