சிறப்பு கட்டுரைகள்

மாணவர்களிடம் வரவேற்பு பெறும் ‘வாட்டர் பெல்’ திட்டம்

செய்திப்பிரிவு

உடலுக்கு நீர்ச்சத்து இன்றியமையாதது. அதிலும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் அது அவர்களது அறிவாற்றல், கல்வி செயல்திறனை வெகுவாகப் பாதிக்கும். மருத்துவர்களின் இந்த அறிவுரையை ஏற்று கேரள மாநில அரசு பள்ளிகளில் 2019ஆம் ஆண்டில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களும் அடுத்தடுத்து இதனை அமல்படுத்தின. ஒலி எழுப்பி மாணவர்கள் தண்ணீர் பருக நினைவூட்டும் ‘வாட்டர் பெல்’ திட்டம் தமிழ்நாடு அரசு பள்ளிகளிலும் கடந்த ஜூன் இறுதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆரோக்கியத்தின் ஆதாரம்: பொதுவாகவே பள்ளிக்கூடத்துக்குக் கொடுத்து அனுப்பும் தண்ணீரை அப்படியே வீட்டுக்குக் குழந்தைகள் எடுத்து வருகிறார்கள் எனப் பெற்றோர் புலம்புவது உண்டு. ஆசிரியர்களும், குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவது உண்டு. ஆனாலும், இடைவேளை நேரத்தில் தண்ணீர் குடித்தும் குடிக்காமலும் வகுப்புக்கு வருவார்கள் மாணவர்கள்.

இதனால் அரசு பள்ளிகளில் காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணி என மூன்று முறை தனியாக ஒலி எழுப்பி மாணவர்களைத் தண்ணீர் குடிக்க வைக்கலாம் எனத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் தற்போது இந்தத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

மணி அடித்தவுடன் ஒருவிதமான விளை யாட்டு செயல்பாடுபோல் மாணவர்கள் ஆர்வ மாகத் தண்ணீர் குடிப்பதை தற்போது காண முடிகிறது. அதேநேரம் காலை 11 மணிக்கு இடைவேளை நேரம் என்பதாலும் மதியம் 1 மணி உணவு இடைவேளை என்பதாலும் இதில் மட்டும் சிறு மாற்றம் எங்கள் பள்ளியில் செய்து பார்த்தோம். காலை 11 மணிக்குக் கழிவறைக்குச் சென்று வந்த பின்பு 11.15 மணிக்கும் பிற்பகல் உணவு உண்ட பிறகு 1.15 மணிக்கும் பிற்பகல் 3.15 மணிக்கும் என்பது தண்ணீர் குடிக்கத் தோதான நேரமாக எங்களுக்குப்பட்டது.

எப்படி இருப்பினும் ஒரு நாளைக்கு மூன்று முறை பள்ளியில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஏற்படுத்தி இருப்பது மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மனித உடல் 60 முதல் 70 சதவீதம்வரை நீரால் ஆனது. இருப்பினும் உடலிலிருந்து கழிவாக அதிகளவிலான நீர் வெளியேறிவிடுகிறது.

அதைச் சரி செய்ய உடலுக்கு நீர் தொடர்ந்து தேவைப்படுகிறது. பாலினம், குழந்தைகளின் உடல் எடை ஆகியவற்றைப் பொறுத்து நபருக்கு நபர் தண்ணீரின் தேவை மாறுபட்டாலும் பொதுவாக 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் அன்றாடம் வளரிளம் பருவத்தினர் அருந்துவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அவ்வாறு தண்ணீர் பருகும்போதுதான் வளர்சிதை மாற்றம் சீராக உடலில் நிகழும். மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம் முறைப்படுத்தப்படுதல், தசைகளுக்கு ஊட்டச் சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுதல், செல்கள் புதுப்பிப்பு, மூளை செயல்திறன் அதிகரிப்பு போன்ற உடலுக்குள் நிகழக்கூடிய பலவிதமான செயல்பாடுகளுக்கு நீரே ஆதாரம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தாகம் தணிந்தால்.. உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து, சோர்வு, பதற்றம், ஞாபக மறதி, தலைவலி, மனச்சோர்வு போன்ற உடலியல் பிரச்சினைகளும் மனச் சிக்கல்களும் ஏற்படுவதாக மருத்தவ ஆய்வறிக் கைகள் குறிப்பிடுவதால் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் தண்ணீர் குடிப்பது அவசியம்.

குடிநீரை வீட்டிலிருந்து கொடுத்து அனுப் பலாம் என்பதால் பெற்றோர் தங்களுடைய குழந்தையின் தேவைக்கு ஏற்ப பள்ளிக்குத் தண்ணீர் கொடுத்து அனுப்புதல் நலம். பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஆசிரியரும் தொடர்ந்து கவனித்து வந்தால் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் மூளை செயல்திறனால் கல்விக்கும் துணை புரிகிறோம் என்கிற கடமை உணர்வில் வெற்றி பெற முடியும்.

நம் மாணவச் செல்வங்களின் தண்ணீர் தாகத்தைத் தணித்தால் அவர்களது அறிவுப்பசி பன்மடங்கு பெருகும். உடலும் மனமும் புத்துணர்வாக இருக்கும்பட்சத்தில் படிப்பது மகிழ்வான செயல்பாடாக மலரும்.

- மா. கோவிந்தசாமி, கட்டுரையாளர்: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், குழிப்பட்டி, தாசம்பட்டி, பென்னாகரம், தருமபுரி; govindasamypgm@gmail.com

SCROLL FOR NEXT