பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி வகுப்பில் அறிவியல் பிரிவில் இணைந்து பயில்வதில் எழுதப்படாத தடை உள்ளது. அதற்குக் காரணமாகக் கூறப்படும் வாதம் பார்வைத்திறன் குறைபாடு உடையோர் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள இயலாது என்பதாகும். உண்மையில், பார்வைத் திறன் குறைபாடுள்ள மாணவர்களும் பார்வையுள்ள மாணவர்களைப் போலவே அறிவாற்றல் திறன்களைக் கொண்டுள்ளனர்.
ஆனால், நடைமுறையில் ஒன்று முதல் 10ஆம் வகுப்புவரை உள்ள பல அறிவியல் செயல்பாடுகள் பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி வாயிலாக அளிக்க இயலுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. அறிவியல் ஆய்வுகளின் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் பார்வைத்திறனை அடிப்படையாகக் கொண்டு இருப்பதால் குறைந்த பார்வைத்திறன் கொண்ட மாணவர்களுக்குக்கூட இவ்வாறான அறிவியல் கற்றல் முறை மறைமுகமாக மறுக்கப்படுகிறது.
அறிவியல் எனும் உரிமை: மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016ன்படி அனைத்து வகையான மாற்றுத்திறனாளி மாணவர்களும் கற்கும் வகையில் தேவையான வசதிகளைச் செய்து, அவர்களுக்குச் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்க வேண்டிய கடமை அரசுக்கும் சமூகத்துக்கும் உள்ளது. பார்வைக் குறைபாடு உடையோரும் தங்கள் உடன் பயில்வோர்போல அதே மாதிரியான அறிவியல் பாடத்திட்டத்தினைப் பயில வேண்டியுள்ளது.
ஆனால், அவர்களுக்கேற்ற கல்விச்சூழல் இல்லாததால் அறிவியல் ஆய்வுகளின் செய்முறைகளை மனப்பாடம் செய்து ஒப்புவித்தலே நிகழ்கிறது. இது அவர்களின் அறிவியல் சிந்தனை, அதன் அடிப்படை புரிதலை எந்த விதத்திலும் வளர்ப்பதில்லை. அறிவியல் கற்பது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவியல் கற்றல் அனைத்து வகையான கற்றல் திறன்களுக்கும் திறவுகோல் ஆகும்.
பார்வைத்திறன் கொண்டு அறியப்படும் அறிவியல் ஆய்வுகளின் அனுபவத்தைப் பிற புலன் உறுப்புகளின் வாயிலாக உணரும்போது பார்வையற்றோரும் அறிவியல் ஆய்வுகளில் பங்கேற்க இயலும். பார்வை குறைபாடு உடையவர்களின் மூளையில் மற்ற புலன் திறன்களின் மூலம் வலுவான கற்றல் நிகழ்கிறது என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.
அறிவியல் வகுப்பில், கைகளாலும் விரல்களாலும் தொட்டு உணர முடியாத, கேட்கவோ, முகரவோ, எளிதில் புரிந்துகொள்ளவோ முடியாத சூழலின் அம்சங்களை ஒரு பார்வையற்ற நபருக்கு அறிமுகப்படுத்த, அதற்கேற்ற முயற்சிகள் ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொட்டுணர்ந்து கற்க..
அறிவியல் ஆய்வகச் செயல்பாடுகள் மற்றும் ஆய்வுக் கருவிகளில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள் பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களும் அறிவியல் உலகத்தை அணுகமுடிவதாக மாற்ற இயலும்.
1. இதன் முதல் படி, பார்வையற்ற மாணவர்களை அவர்களின் வகுப்புத் தோழர்களுடன் ஆய்வகச் செயல்பாடுகளில் பங்கேற்கச் செய்யலாம். இதனால் மற்ற மாணவர்களுக்குச் சமமான ஆய்வக அனுபவங்களை இவர்களும் பெற இயலும்.
2. ஆய்வகச் செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் எடை அளக்கும் சாதனத்தில் உள்ள அளவீடு காட்டும் பகுதி, குடுவைகள், வடி குழாய், அளவை குழல் போன்றவற்றில் உள்ள அளவீடுகளைப் படிப்பதற்குப் பார்வைத்திறன் தேவைப்படுகிறது. அளவீட்டைக் குறிக்கும் கோடுகள், எண்களைத் தொட்டு உணர்வதன் மூலம் அறியக் கூடிய வகையில் உயர்த்தப்பட்ட கோடுகள், பிரெய்லி எண்களை அவற்றில் இணைத்து வடிவமைக்கலாம்.
3. ஆசிரியரின் நேரடி மேற்பார்வையில் பார்வையற்ற மாணவர்கள் ஆய்வுக்குத் தேவையான உபகரணங்களை அமைப்பதில் ஈடுபடுத்துவது நல்விளைவு களைத் தரும்.
4. புன்சன் அடுப்பு பயன்படுத்துவதில் சில அறிவுறுத்தல் மாற்றங்களைப் பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கலாம். புன்சன் அடுப்பின் வாயு வெளியேறும் பகுதியினை (nob) தொடுதல் மூலமாக உணர அங்கு நீண்ட எரிவாயு லைட்டர் கொண்டு பற்ற வைக்கக் கற்றுக் கொடுக்கலாம்.
அடுப்பு எரியும்போதும் அணைந்த பிறகும் ஏற்படும் வாசனை மூலமாக ஆய்வகச் செயல்பாடுகளை மாணவர்களுக்கு விளக்க இயலும்.
5.ஆய்வக உபகரணங்கள், அலமாரிகள், மேசைகள், அமிலக்காரக் குடுவைகள் அனைத்திலும் பிரெய்லி கொண்டு அவற்றின் பெயர்களைக் குறித்து வைப்பது அவசியம்.
6. சந்தையில் எளிதில் கிடைக்கும் ஒலிவடிவ எடை அளவுகோல், ஒலிவடிவ வெப்பநிலைமானி போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அறிவியல் ஆய்வுத் தரவுகளைச் சேகரிக்க இயலும்.
7. வெப்பநிலை, நிறம், எடை, ஒளி முதலியவற்றில் மாற்றம் அறியும் ஆய்வுச் செயல்பாடுகளில் உணரிகளைக் (sensors) கொண்டு பிற புலன் உறுப்புகளின் மூலமாக அறியச் செய்யலாம்.
கருவிகள், உபகரணங்கள் ஆகியவற்றில் மாற்றம், ஆய்வு செயல்பாடுகளில் மாற்றம் என எல்லாவற்றையும்விட அவசியமானது பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும் அறிவியல் ஆய்வுகளைக் கற்க இயலும் என்கிற விசாலமான பார்வையும் அவர்களுக்கும் கற்பிக்க வேண்டும் என்கிற மனமாற்றமுமே ஆகும்.
- கட்டுரையாளர்: முனைவர், உதவி பேராசிரியர், பார்வை மாற்றுத்திறனாளி மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம், சென்னை; revbest15@gmail.com