சிறப்பு கட்டுரைகள்

உணவை வீணடித்தலும் சுற்றுச்சூழல் மாசுபாடே!

க.சரவணன்

பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு செல்லும் உணவைக் குழந்தைகள் அதிக அளவில் வீணடிக்கின்றனர் என்பதே பெரும்பாலான பெற்றோர் ஆசிரியர்களிடம் வெளிப்படுத்தும் மனக்குறையாக இருந்து வருகிறது. குழந்தைகளுக்குப் பிடித்த உணவை, அதேநேரம் சத்தான பண்டத்தைக் காரம் குறைவாக, சரியான அளவு உப்பு சேர்த்து, நன்றாக வேகவைத்துச் சமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் பெற்றோர். முக்கியமாக, சரியான அளவில், கெட்டுப்போகாத விதத்தில் கொடுக்க வேண்டும். அதேநேரம் உணவை வீணடிக்காமல் இருக்க வேண்டிய கடமை? மாணவர், பெற்றோர், ஆசிரியரில் தொடங்கி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உள்ளது.

வீணடித்தல் பெருங்குற்றமா? - உணவு வீணாக்கம் என்பது உலகளாவிய பிரச்சினை. அமெரிக்கா, சீனாவை அடுத்து உணவை வீணடிப்பதில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. உணவுப் பாழாக்கம் ஆண்டுக்கு 8-10% உலகளாவிய பசுமை இல்ல வாயுக்கள் (greenhouse gases) வெளியீட்டுக்குக் காரணமாகிறது. இது விமான போக்குவரத்துத் துறை முழுவதும் உண்டாக்கும் வெளியீட்டையும் விட அதிகம் என்றால் நம்ப முடிகிறதா.

அழுகும் உணவுகள் மீதேன் போன்ற வாயுக்களை வெளியிடுகின்றன. இது கார்பன் டைஆக்ஸைடை விட 80 மடங்கு தீவிரமானது. உணவுத் தயாரிப்பின்போது, உணவு மிச்சங்களை வீதிகளில் எரித்தல், சேமிக்காதிருத்தல் போன்றவையும் பசுமை இல்ல வாயுக்களை உண்டாக்குகின்றன. உலகில் 30% உணவுப் பொருட்கள் வீணாகின்றன, அதேநேரம் 9.8% மக்கள் பசியால் பாதிக்கப்படுகிறார்கள்.

2030-ஆம் ஆண்டுக்குள் உணவு இழப்பு, வீணாக்கத்தை பாதியாகக் குறைத்தால், உலகளவில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டினை 4%வரை குறைக்கலாம். அதன் மூலம் 15 கோடியே 30 லட்சம் மக்களைப் பட்டினியிலிருந்து மீட்கலாம். மனிதர்கள் வீணாக்கும் உணவில் நான்கில் ஒரு பங்கை உண்ணக்கூடியது (edible) என்று கருதினாலுமே, ஒவ்வொரு நாளும் உலகமெங்கும் 100 கோடி உணவுப் பொட்டலங்கள் வீணடிக்கப்படுவதாக ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் ‘உணவு வீணாக்குதல் குறியீட்டு அறிக்கை 2024’ சுட்டிக்காட்டுகிறது.

ஆகவே, பள்ளிப்பருவத்திலேயே உணவு வீணாக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் தடுப்பது நல்லது. உணவு வீணாக்கத்தின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் ஆசிரியரும், வீட்டில் பெற்றோரும் குழந்தைகள் உணவைப் பொறுப்புடன் உண்ணும் பழக்கத்தை வளர்த்து எடுக்க வேண்டும்.

உறுதிமொழி ஏற்போம்: பசியுடன் வாழும் மக்கள், சுற்றுச்சூழல் தாக்கம், பொருளாதார வீழ்ச்சி பற்றிய காணொலிகளைக் காண்பித்து உரையாடல்கள் மூலம் உணவின் முக்கியத்துவத்தை உணரச் செய்யலாம். ‘உணவை வீணாக்காதே’ என்கிற தலைப்பில் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தலாம். பள்ளி, கல்லூரிகளில் உள்ள உணவகத்தில் உணவு வீணாகாமல் இருக்கும் வழிகளை மாணவர்களைக் கொண்டு ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம். வீணான உணவு அளவை பதிவுசெய்து வாராந்தரக் கணக்கிடுதல் செய்யலாம்.

பசியுள்ளவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வுகளை நடத்தலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதிகளில் ‘நன்றாக உண்ணுவோம் – உணவை வீணாக்கோம்!’ என்பது போன்ற உறுதிமொழி முகாம்கள் நடத்தலாம். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் உணவு வீணாதல் தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகளை நடத்தலாம். இன்றுவரை, 21 நாடுகளே உணவுப் பாழாக்கம் குறித்த தேசிய அளவிலான நிலையான திட்டங்களை அறிவித்துள்ளன. இந்தியா இது தொடர்பாக நேர்மறை நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

உதாரணமாக, ‘பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான்’, உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை (FME) முறைப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வழியாக அரசு உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி உணவுக் கையாளுதல், பாதுகாப்பு வசதிகளை இந்தியா மேம்படுத்தி வருகிறது. ‘உணவை மதிப்பது என்பது அதைச் சாப்பிடுவதும், வீணாக்காமல் பாதுகாப்பதும் தான்’ என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

- கட்டுரையாளர்: தலைமையாசிரியர், ‘சிவப்புக்கோள் மனிதர்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; saran.hm@gmail.com

SCROLL FOR NEXT