சிறப்பு கட்டுரைகள்

உலகளாவிய சவால்களுக்கு உள்ளூர் தீர்வுகள்

என்.மாதவன்

முழுக்கப் படங்களால் ஆனது ‘மாயப்பானை’ நூல். ஒரு மாயப்பானை இருக்கும். அதன் உள்ளே நுழையும் ஒவ்வொரு விலங்கும் என்னவாக மாறுகிறது என்பதுதான் கதை. பல்லி உள்ளே போய் எலியாகி வெளியேறும். இப்படியே எலி புலியாகி, புலி பூனையாகி, பூனை யானையாகி, யானை குரங்காகி, குரங்கு மனிதனாகும். இத்துடன் கதை முடியாது. மனிதன் உள்ளே போனதும் என்ன ஆவான் என்கிற கோணத்தில் குழந்தைகள் மத்தியில் விவாதித்தோம். ‘சூப்பர் மேன்’, ‘ஸ்பைடர் மேன்’ எனப் பல பதில்கள் வந்தன.

இறுதியாக ஒரு குழந்தை, ‘ரோபோ’ என்றது. அப்படியே முடித்தோம். 2008இல் புத்தகப் பூங்கொத்து திட்டத்தின் மூலம் மாணவர்கள் பங்கேற்போடு களத்தில் ஆய்வு செய்தபோது கிடைத்த அனுபவம் இது. இந்நூலின் ஆசிரியர் ரமாதேவி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இந்த நூலாசிரியர் எவ்வளவுக்கு எவ்வளவு படைப்பூக்கம் மிக்கவரோ அதேபோன்று குழந்தைகளும் படைப்பாற்றல் மிக்கவர்களே. தமது கற்பனைக்கு எல்லைகளை வகுத்துக் கொள்ளாதவர்கள் குழந்தைகள். இவ்வாறான ஆற்றல் அவர்களின் கற்பனை வளத்தை ஊக்குவிப்பதாக அமைகிறது.

நம்ம ஊரு கதைகள்: இதேபோன்று கடந்த 17 ஆண்டுகளில் நடைபெற்று வந்த பல்வேறு ஆக்கப்பூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் குழந்தைகள் படைப்பாளர்களாகும் காலம் கனிந்துள்ளது. தமிழக அரசின் கல்வித்துறை தொடர்ந்து மாணவர் மைய அணுகுமுறையோடு பல்வேறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் பொருட்டு குழந்தைகளைப் படைப்பாளர்களாக்க ‘நம்ம ஊரு கதைகள்’ எனும் கருப்பொருளில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் இருந்து 3,94,442 மாணவர்களின் பங்கேற்போடு 31, 146 கதைகள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன.

நம்ம ஊரு கதைகளாக என்னவெல்லாம் வந்துள்ளன என அமைப்பாளர்களிடம் கலந்துரையாடினோம். உள்ளூர் கோயில்கள், ஏரிகள், மரங்கள், தாம் படிக்கும் பள்ளிக்கூடம் உருவான வரலாறு, பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம், காலநிலை மாற்றம், மழைநீர் சேகரிப்பு, மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பாலின சமத்துவம், கிராமிய விளையாட்டுகள் எனப் பல்வேறு தலைப்புகளில் குழந்தைகளிடம் இருந்து கதைகள் பெறப்பட்டுள்ளன.

உள்ளூர் ‘கிரேட்டா’: ஒரு சிறந்த படைப்பின் வெற்றி வாசகன் அப்படைப்பை முடித்து வைப்பதில்தான் உள்ளது என்பார்கள். மேலும் படைப்புகள் வெளியாவதன் நோக்கமே படைப்பாளி தம்மைப் பாதித்த விஷயங்களின் மீது அடுத்துள்ளவர்களின் கவனத்தையும் ஈர்க்க முற்படுவதுதான். இவ்வாறு வாசகரையும் பாதிக்கும் வண்ணம் உருவாகும் படைப்புகள் அந்த வாசகர்கள் சார்ந்துள்ள புவியியல் பரப்பில் அவர்களைப் பாதிக்கும்.

அதேநேரம் பலரும் கண்டுகொள்ளாதவற்றில் அந்தக் கதை வெளியாகும். அந்த வகையில் படைப்பாளியின் சிந்தனை எவ்வளவுக்கு எவ்வளவு சிறிய அளவிலான, அதே நேரம் கவனிக்கப்பட வேண்டிய பொருண்மைகளில் குவிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இயல்பும் உண்மையும் மிகும். இயல்பான படைப்பாற்றலும், யாருக்கும் அஞ்சாத நேர்மையும் வாய்த்தவர்கள் குழந்தைகள். அப்படிப்பட்டோரின் படைப்புகளை மேலும் மெருகேற்றவேண்டிய தேவை இருக்கலாம்.

இருப்பினும், அவை உண்மையான அக்கறையுடன் எழுதப்பட்டவை என்பதை மறந்து விடக்கூடாது. இந்த உண்மைகளை அண்மையில் திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஜெயப் பிரியா, மாலதி மற்றும் மாணவி விகாஷினி உடனான சந்திப்பு மெய்ப்பித்தது.

திருவண்ணாமலை மலையையொட்டி அமைந்துள்ள சமுத்திரம் கிராமத்தில் கடல் போல் பரந்து விரிந்துள்ள ஏரியின் வரலாற்றை அவ்வளவு உயிரோட்டமாகப் பதிந்திருந்தனர். திருவண்ணாமலை மக்களின் நீர் ஆதாரத்துக்கான ஏரி இது என்கிற புரிதல் இந்தக் குழந்தைகளிடையே இயல்பாக உருவாகி இருக்கிறது.

தமிழகக் கிராமங்களின் உண்மை சவால்களைப் படம் பிடித்துத் தீர்வு காணும் படைப்பாளர் படை உருவெடுத்துள்ளது. இதனை மேலும் பாராட்டி வரவேற்க உள்ளூர் படைப்பாளிகள் கைகொடுக்க முன்வரவேண்டும். அவர்களது படைப்புகளில் உலகளாவிய சவால்களுக்கு உள்ளூர் அளவிலான தீர்வுகளும் கிடைக்கலாம். உள்ளூரிலும் கிரேட்டா துன்பர்க்குகள் உருவாகும் காலம் கனிந்துள்ளது.

- கட்டுரையாளர்: அரசு பள்ளி தலைமையாசிரியர், சிறப்பு அழைப்பாளர் தேசிய செயற்குழு AIPSN; thulirmadhavan@gmail.com

SCROLL FOR NEXT