பள்ளிகளில் வாசிப்பு வாரம் கொண்டாடப் படும் என பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. வாசிப்பு இயக்கம் மூலம் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துப் புத்தகங் களையும் மாணவர்கள் வாசிக்கும் விதத்தில் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும் என்பது வாசிப்பின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துவதாக இருக்கிறது.
பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளுக்குத் தயாராக மாணவர்கள் பயன்படுத்தும் இடம் பள்ளி நூலகம். பள்ளி நூலகத்தைப் பயன்படுத்தித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருக்கிறார்கள். பாட வேளை, மதிய உணவுக்கு பிறகான நேரத்தை நூலகத்தில் செலவழித்து வாழ்வில் அறிவை சேமித்துக் கொண்டோர் பலர். அதிலும் அங்கு தேச தலைவர்களின் சரிதைகளைத் தேடித்தேடிப் படித்து உன்னதமான ஆளுமைகளாக வளர்ந்தவர்கள் ஆயிரம் ஆயிரம்.
எழுதத் தூண்டும் கலைபள்ளி நூலகத்தில் செய்தித்தாள்கள், படக்கதை புத்தகங்கள், அறிவியல் நூல்கள் எனப் பலவிதமான புத்தகங்கள் இருக்கும். இவற்றுடன் சேர்த்து, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் “ஊஞ்சல்”, “தேன் சிட்டு” இதழ்கள் கடந்த சில வருடங்களாக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. அத்தோடு வாசிப்பு இயக்க நூல்களும் பள்ளிகளுக்கு ஏராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. வாசிப்பை நேசிப்போம் என்கிற அளவில் இந்த நூல்கள் சிறார் எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டும், மாணவர்களே எழுதிய கதைகள், படைப்புகளைக் கொண்டும் வெளிவருகின்றன. மாணவர்களிடம் வாசிப்பைத் தூண்டும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு, வயதுக்கு ஏற்ப படிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்படுவது கூடுதல் சிறப்பு.
எழுத்துகளை, சொற்களை, வாக்கியங்களை வாசிக்கத் தொடங்கும் மாணவர்கள் மெல்ல சரளமாக வாசிக்கவும் அதில் உள்ள கருத்துகளை உள்வாங்கவும் தொடங்குகிறார்கள். அதைவிடவும் படிக்கப் படிக்க அவர்களே எழுதத் தொடங்குகிறார்கள். இதுதான் வாசிப்பின் வெற்றி. அந்த வெற்றியை ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் வசப்படுத்த ஒரே வழி தொடர் வாசிப்புதான். அதற்காகத்தான் வாசிப்பு வாரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாணவர் புத்தகக் காட்சி இந்தத் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களைப் பட்டை தீட்ட எழுத்தாளர்களைப் பள்ளிகளுக்கே வரவழைத்து வாசிப்பை அழகாக்கலாம். சாதனையாளர்களை, துறை சார்ந்த நிபுணர்களை வரவழைத்து வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கச் சொல்லலாம். அவர்கள் முன்னிலையில் தமது வாசிப்புத் திறனைச் சிறப்பாக வெளிப்படுத்தும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் பள்ளிகளிலேயே வருடம் ஒரு முறை மாணவர்கள் எழுதிய படைப்புகளைக் கொண்டு புத்தகக் காட்சி நடத்தலாம். பெற்றோரும் உள்ளூர் மக்களும் காணும் வகையில் இந்தப் புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்வது தாமும் எழுத்தாளர் என்கிற எண்ணத்தை உருவாக்கி மாணவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும்.
பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போதே அருகில் உள்ள நூலகத்தில் அம்மாணவர்களை ஆசிரியர்கள் இலவசமாக உறுப்பினர் ஆக்கிவிடலாம். மாவட்டம் தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களுக்கு ஆசிரியர்கள் அவசியம் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். பள்ளிகளில் நடக்கும் அத்தனை விழாக்களிலும் நூல்களைப் பரிசாக வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் பெற்றோர் நூலகம் அழைத்துச் செல்லலாம். பெற்றோரும் புத்தகங்களை வாங்கி வந்து வீட்டில் சேமிக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் மாலையில் ஒரு மணி நேரம் குடும்பத்தோடு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதைவிடச் சிறந்த முதலீடு எதுவும் இருக்க முடியாது.
மாணவர்களுக்கு வாசிப்பு வசப்படத் தொடங்கியதும் அவர்களுடைய பேச்சிலும், நடத்தையிலும், பிறரிடத்தில் அவர்கள் பழகும் விதத்திலும் நல்லதொரு மாற்றம் வெளிப்படத் தொடங்கும். வாரம் முழுவதும் வாசிப்போம். வாசிப்பை வாழ்வின் வரமாக்குவோம், வெற்றியின் உரமாக்குவோம்.
மா. கோவிந்தசாமி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், தருமபுரி
govindasamypgm@gmail.com