பாராட்டுதல் என்பது ஓர் அற்புதமான கலை. ஒருவரின் உழைப்பையும் முயற்சியையும் கொண்டாடும் தூய உணர்வு. பாராட்டு பெறும்போது மட்டுமே நாம் உற்சாகம் அடைவதில்லை. பிறரைப் பாராட்டும்போதும், மனநிறைவு ஏற்படுகிறது. குழந்தையின் முதல் நடையைப் பாராட்டும் பெற்றோர் முதல், உலகத்தையே மாற்றிய மாபெரும் தலைவர்களுக்கான பாராட்டுகள் வரை, இது ஒரு சக்தி வாய்ந்த கருவியாக விளங்குகிறது.
“எல்லா நன்மைகளின் வேர்களும், பாராட்டு என்ற மண்ணில் உள்ளன” என்கிறார் தலாய் லாமா.
பாராட்டுதல் எளிய செயலாக இருக்கலாம், ஆயினும் அதனால் ஏற்படும் தாக்கம் மிகவும் பெரியது. நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர் என அனைவரையும் பாராட்டுவதன் மூலம் உறவுகளில் நிலைத்த தோழமை கிடைக்கிறது. நல்லவற்றைப் பாராட்ட என்றுமே தயக்கம் தேவையில்லை.
இலக்கியங்களில்.. சங்க இலக்கியங்களில் ‘பாராட்டுதல்' மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. சிறந்த அரசர்கள், போர் வீரர்கள், நேர்மையான பொதுமக்கள் எனப் பலரை புலவர்கள் புகழ்ந்து பாராட்டும் பாடல்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
பாரியும் பரிசிலர் இரப்பின் வாரேன் என்னான் அவர் வரை யன்னே”... (புறம் 108)
தன்னையே பரிசாகக் கேட்டாலும் தந்துவிடத் தயாராக இருப்பவன்; கேட்ட வருக்குத் தன்னையே பரிசாகத் தந்து மகிழ்பவன் எனப் பாரியைப் புகழ்ந்து பாடினார் கபிலர்.
“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு”.
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார். மேலும், அகநானூறில் நாயகன் நாயகியின் அழகு, நற்குணம், புறநானூற்றில் போரில் வென்ற வீரர்கள், குறுந்தொகையிலும், பரிபாடலிலும் விருந்தோம்பல், மணி மேகலையில் கருணை, துறவு, அறம், கலிங்கத்துப் பரணியில் வீரம் எனத் தமிழ் இலக்கியங்களில் பாராட்டுதல்கள் பலவாறாகப் பரந்து விரிந்துள்ளன.
தலைவர்களில்.. எஸ்.எல்.வி- 3 ராக்கெட் பரிசோதனை தோல்வி அடைந்தபோதும், அந்தப் பொறுப்பை தமது தோள்களில் ஏற்றுக்கொண்டு, குழுவினரை ஊக்கமளித்து, பாராட்டியவர் நாடு போற்றும் விஞ்ஞானியும் குடியரசு முன்னாள் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம்.
மனித உரிமைக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா, வெளியே வந்ததும், மன்னிப்பு கொடுத்து, அவரது எதிரிகளையே பாராட்டினார். தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகப் பதவியேற்று, நோபல் பரிசு பெற்றபோது உலகமே அவரை பாராட்டியது.
வீட்டிலும் பள்ளியிலும்: தோல்வியடையும்போது அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறும் பெற்றோர், குழந்தைகள் அதை வெற்றியாக மாற்றிய பிறகு, வேலைப்பளு, குடும்பப் பிரச்சினைகளால் அவர்களின் சாதனைகளை சில நேரங்களில் கவனிக்காமலும் பாராட்டாமலும் விட்டுவிடக் கூடாது. பாராட்டுகளை வீட்டிலிருந்தே பெற்று வளரும் குழந்தை, புறச்சூழலில் எதையும் எதிர்கொள்ளும் திறன் பெற்றவராகிறார்.
பள்ளியில் மாணவர்களைப் பாராட்ட வேண்டிய சூழல்கள் பல உண்டு. சிறிய முயற்சியிலிருந்து, பெரிய சாதனை வரை மாணவர்களைப் பாராட்டுவது மிக முக்கியம். நேர்மையாக நடத்தல், பிறருக்கு உதவுதல், பொறுமை கடைப்பிடித்தல், அனைவருக்கும் மரியாதை அளித்தல், குழுவில் ஒத்துழைத்தல், தேர்வில் அதிக மதிப்பெண், விளையாட்டு, ஓவியம், எழுதுதல், கலை, இசை, நடனம் எனக் கல்வியிலும், தனித்திறமையிலும் அவர்கள் சாதித்துக் காட்டும்போது நன்று, சிறப்பு, அருமை, அற்புதம், பாராட்டு, வாழ்த்து, அரிய சாதனை என அழகு தமிழில் சுருங்கச் சொன்னாலும் அது அவர்களை ஊக்கப் படுத்தும். இதற்காகச் சிறப்பு விருதுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றைப் பெற்றோர் முன்னிலையில் வழங்கியும் பாராட்டலாம்.
“சிறந்த ஆசிரியரின் வலிமையான கருவி, மாணவரின் முயற்சியையும் முன்னேற்றத் தையும் பாராட்டுவது" எனக் கல்வியாளர் மரியா மாண்டிசோரி கூறியுள்ளார். பாராட்டுதல் உண்மையாக இருக்க வேண்டும். பிறரின் சிறப்புகளைப் பாராட்டுவதன் மூலம், நாம் பிறர் மீது கொண்ட உள்ளன்பும், நமது குணமும் வெளிப்படும். எனவே நாம் அனைவரும், மற்றவர்களை நேர்மையாகப் பாராட்டி, நம் ஒளியின் மூலம் அவர்களது வாழ்க்கையில் ஒளியூட்டச் செய்வோம்.
- கட்டுரையாளர்: க.வளர்மதி, பட்டதாரி ஆங்கில ஆசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ரெகுநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம்; ramnadvalar72@gmail.com