உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் என்றார் வான்புகழ் வள்ளுவர். உழவுத் தொழில் உயிர்த் தொழில். ஆனால், இன்று சோறூட்டும் தொழிலைச் சேறு ஒட்டும் தொழிலென ஒதுக்கி வைத்து வருகின்றனர். நமக்கு எந்தத் தொழில் தெரிகிறதோ இல்லையோ பயிர்த்தொழில் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என எண்ணி ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையை விவசாயம் செய்ய அனுமதிப்பதில்லை. முழுமையாக விவசாயம் நடைபெறும் பகுதிகளில் குடும்பமாய் விவசாயம் பார்க்கிறார்கள். இதனால் குழந்தை களும் கற்றுக் கொள்கிறார்கள்.
அதுவே ராமநாதபுரம் போன்ற மானாவாரி விவசாயம் செய்யும் பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விவசாயம் பார்க்க அனுமதிப்பதில்லை. அவர்களின் விவசாயத்தை மழை பெய்து அழிக்கிறது. அல்லது பெய்யாமல் அழிக்கிறது. இந்தக் கஷ்டம் தம் பிள்ளைகளுக்கு வேண்டாம் என நினைக்கிறார்கள். விளைவு 40 வயதிற்குக் குறைவானவர்களை வயலில் பார்க்க முடிவதில்லை. பெரியவர்களை மட்டுமே பார்க்க முடிகிறது.
இளம் பசுமைக் காவலர்கள்
பயிர்த்தொழில் என்பது கவனமாய்ச் செய்ய வேண்டியது. ஆர்வமாய்ச் செய்ய வேண்டியது. இளம் வயதிலேயே பிள்ளைகளுக்குப் பயிர்த்தொழிலைக் கற்றுக் கொடுத்து விட்டால் அவர்களின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்பும். விவசாயம் என்றால் நெல் போன்ற உணவு தானியங்களைப் பயிரிடுவது மட்டுமல்ல.
காய்கறிகள், கீரைகள், பூச்செடிகளை வளர்ப்பதுவும் அடங்கும். நான் தலைமையாசிரியராகப் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மிகச் சிறியது. குறைந்த மாணவர்களே படிக்கின்றனர். ஆனாலும் சிறிய அளவில் பள்ளித் தோட்டத்தை அவர்களே சிறப்பாகப் பராமரித்து விளைச்சலை எடுத்து மகிழ்கிறார்கள்.
அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அவர்களை "பசுமைக் காவலர்கள்" என அழைக்கிறோம். இவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களையும் தோட்டத்தையும் பராமரிக்கிறார்கள். வாரம் ஒரு நாள் பசுமை சீருடை அணிந்து வருகிறார்கள்.
சிறிய அளவிலான பள்ளித் தோட்டத்தில் தக்காளி, கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், பூசணிக்காய், கீரை போன்றவற்றைப் பயிரிட்டுப் பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் கவனித்து வளர்ந்து விட்டது, பூத்து விட்டது, பிஞ்சு வந்துவிட்டது, காய் பெரிதாகி விட்டது என அவர்கள் கூற கேட்பதில் ஆசிரியராக நமக்கும் மகிழ்ச்சியே.
பரிசும் ருசியும்
எங்கள் பள்ளியைப் பொறுத்தவரைப் பள்ளித் தோட்டத்தில் விதைப் போடும் நாளில் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் வீட்டில் வளர்க்கவும் விதைகள் வழங்குகிறோம். அதனை வீட்டுத் தோட்டத்தில் விதைத்து, வளர்த்து மகசூலைக் கொண்டு வந்து காட்டுபவர்களுக்கு ஊக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
அதேபோன்று பள்ளித் தோட்டத்தில் விளையும் காய்கறிகளைச் சமைத்து மதிய உணவோடு வழங்குகிறோம். அவர்களே விளைவித்தது என்பதால் மிகவும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். உழைப்பின் சுவையை அவர்களுக்கு உணர்த்த முடிகிறது. பள்ளிக்கு யார் வந்தாலும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று காட்டுகின்றனர். பாராட்டும் பெறுகின்றனர். அப்போது அவர்கள் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சியைக் காண கண்கோடி வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டாய் விவசாயத்தைக் கற்றுக் கொடுக்கும்போது அவர்கள் அதனை விருப்பமாய்ச் செய்கிறார்கள். இப்படி விரும்பி விவசாயம் செய்யும் மாணவர்கள் நிச்சயம் அவர்கள் வீட்டிலும் காய்கறிகளைப் பயிரிடுவார்கள். பாடத்தோடு பயிர்த் தொழிலையும் கற்பிப்போம். அவர்கள் வாழ்க்கைப் படத்தையும் இயற்கையோடு இயற்கையாக கற்றுக் கொள்வார்கள்.
- கட்டுரையாளர்: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்; தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நரசிங்கக்கூட்டம், கடலாடி ஒன்றியம், ராமநாதபுரம்; valluvan335@gmail.com