சிறப்பு கட்டுரைகள்

குழந்தைகள் விரும்பும் புத்தகம் எது?

ச.முத்துக்குமாரி

குழந்தைகள் வாசிப்பு தொடர்பாக செயல்படுவதால், அடிக்கடி எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி, "என் குழந்தைக்கு எந்தப் புத்தகத்தை வாசிக்க தரலாம்? பட்டியல் தாருங்கள்". இதோ இன்னும் சில தினங்களில் சென்னை புத்தகக் காட்சித் தொடங்கவிருக்கிறது. மீண்டும் இதே கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

உண்மையில் குழந்தைகள் விரும்பும் புத்தகப் பட்டியல் தர முடியுமா? இணையத்தில் குழந்தைகள் வாசிப்புக்கான புத்தகங்களின் பட்டியல் உள்ளன. அதில் அழ. வள்ளியப்பா முதல் வெளிநாட்டு மொழிபெயர்ப்பு புத்தகங்கள்வரை பல புத்தகங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

காலப் பொருத்தமின்மை: அழ. வள்ளியப்பா தமிழ் சிறார் இலக்கியத்தின் முன்னத்தி ஏர். அவர் எழுதிய சிறார் கதைகள் எளிய மொழியிலானது. அதேநேரம் இத்தகைய புத்தகப் பட்டியல்களை கண்ணை மூடிக்கொண்டு ஏற்காமல் குழந்தைகள் வாசிப்புக்குப் புத்தகங்கள் தரும்போது நாம் சில கூறுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு சிறார் கதையை வாசிக்க நேர்ந்தது. அதில் பழங்குடி மக்கள் காட்டின் எதிரியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று நம் பார்வை மாறியுள்ளது. காடுகளைப் பாதுகாப்பவர்கள் பழங்குடிகள் என்கிற புரிதலுடன் அவர்களை காட்டை விட்டுத் துரத்துவதைக் கண்டிக்கிறோம்.

நம் உணவு, சினிமா, உடை போன்றவை எப்படி காலத்துக்கும், ரசனைக்கும் ஏற்ப மாறுகிறதோ அதே போலத்தான் வாசிக்கும் புத்தகங்களும். வாசிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்த விரும்புவோர், அவர்களின் ரசனை மற்றும் விருப்பத்தை உள்வாங்குவது அவசியம். அதற்கேற்ற புத்தகங்களைக் கையில் கொடுக்கும் போதுதான் வாசிப்பு சுயவிருப்பமாக மாறும். எனவே குழந்தைகளுக்குத் தரும் புத்தகங்களில் காலப்பொருத்தமின்மை இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்களின் விருப்பம்! குழந்தைகளின் வாசிப்பு சார்ந்த களச்செயல்பாட்டாளர் ஒருவருடன் சமீபத்தில் பேசியபோது, "குழந்தைகளைப் புத்தக வாசிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு நமக்குப் பிடித்த புத்தகங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று நினைத்து வாசிக்கத் தருகிறோம். அது முதல் தவறு" என்றார். குழந்தைகளை வாசிக்க வைத்த அனுபவத்தின் வழி இதைச் சரியாகக் கணித்துள்ளார்.

ஒரு புத்தகத்தைப் பெரியவர்கள் கொண்டாடுவதாலேயே குழந்தைகளுக்கும் அது பிடிக்கும் என்கிற கட்டாயமில்லை. விருது பெற்ற புத்தகங்கள், கருத்துச் சொல்லும் புத்தகங்கள், முற்போக்குப் பேசும் புத்தகங்கள் என நமக்குப் பிடித்த புத்தகங்களை வாசிப்பின் ஆரம்ப நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுப்பது ஒரு வகை திணிப்பு. அது குழந்தைகளின் விருப்பத்துக்குரிய ஒன்றாக இல்லாவிட்டால் அப்புத்தகத்தை நிராகரிக்கவே செய்வார்கள். குழந்தைகள் விருப்பமும் நம் விருப்பமும் ஒன்று அல்ல.

தகவல் திணிப்பவை: சிறார் புத்தகத்தை வாசித்த நண்பர் ஒருவர், "இந்தப் புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் எனக்கே புதிதாக இருக்கிறது. இதை அவசியம் குழந்தைகள் வாசிக்கத் தர வேண்டும்" என்றார். ’Learning from conflict’ புத்தகத்தில் கல்வியாளர் கிருஷ்ண குமார், "நமக்குத் தெரிந்த அனைத்தையும் குழந்தைகளுக்குச் சொல்லிவிடும் வழக்கமான அவசரம் பாடப்புத்தகங்களில் தெரிகிறது" எனக் குறிப்பிட்டது இங்கே நினைவுக்கு வருகிறது.

பாடப்புத்தகங்களில் சிந்திக்க இடமில்லாமல் வெறும் தகவல்களைக் கற்பிப்பதை எதிர்க்கும் இந்த நேரத்தில், குழந்தைகள் வாசிப்புக்கான கதைகளில் தகவல்கள் தேவையா என்ற கோணத்திலும் அணுக வேண்டியிருக்கிறது. பெரியவர்களான நமக்கு புதிய தகவல்களைத் தரும் புத்தகங்கள் பிடிக்கலாம். அதுவே முதன்முதலில் வாசிப்புக்குள் வரும் குழந்தைகளுக்குப் பொருந்துமா? ஏற்கெனவே தகவல் திரட்டு போன்ற பாடப் புத்தகங்களைப் படித்து சோர்வடையும் குழந்தைகளுக்கு இது இன்னும் சுமையாகாதா? அப்புறம் எந்தப் புத்தகங்களைத்தான் வாசிக்கத் தருவது என்கிற கேள்வி எழலாம்.

வாசிப்புக்குள் முதலில் அடி எடுத்து வைக்கும் குழந்தைகளை, "வாசி வாசி" என்று கட்டாயப்படுத்த வேண்டாம். நீங்கள், பெற்றோர் / ஆசிரியர் / வாசிப்புச் செயல்பாட்டாளர் ஆக இருக்கும் பட்சத்தில், உங்கள் குழந்தைகளின் மொழி அறிவைத் தெரிந்து கொள்ளுங்கள். எளிய மொழி, சுவாரசியம், நகைச்சுவை மற்றும் நிறையப் படங்கள் இருக்கும் புத்தகங்களைத் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொன்றில் ஈடுபாடு இருக்கும். அதை அறிந்து கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, உங்கள் குழந்தைக்கு டைனோசர் மிகவும் பிடித்தால், டைனோசர் தொடர்பான படங்களுடன் கூடிய புத்தகங்களைத் தரலாம்.

நாம் விரும்பும் புத்தகங்களைவிட, அவர்கள் விரும்பும் புத்தகங்களைக் கண்டறிய, நமக்குக் கவனிக்கும் கண்கள் தேவை. எல்லாவற்றையும் விட, குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை அந்தந்தக் குழந்தைகளே தேர்வு செய்யும் சுதந்திரம் வேண்டும். அது மட்டுமே வாசிப்பைக் குழந்தைகளின் வாழ்நாள் பழக்கமாக மாற்றும்.

கட்டுரையாளர்: அரசு பள்ளி ஆசிரியர், சிறார் எழுத்தாளர். | muthukumari.15@gmail.com

SCROLL FOR NEXT