தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஆரம்பமாகிறது. இந்தச் சூழலில் தேர்வு பற்றி பேச வேண்டிய அவசியம் மீண்டும் எழுந்துள்ளது. தேர்வு யாருக்காக நடத்தப்படுகிறது? ஆசிரியர் பயிற்சி மாணவர்களிடம் கேட்டேன். எல்லோரும் ஒருமித்த குரலில் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது என்றனர். அப்படியா? என்று மற்றொரு கேள்வியைக் கேட்டேன். அமைதியாக இருந்தனர். தேர்வு உண்மையில் மாணவர்களுக்கு மட்டும்தானா? எனத் தொடர்ந்தேன்.
ஆசிரியர்களுக்கும் என்று இரண்டு நபர்கள் பதிலளித்தனர். விடாமல் தொடர்ந்தேன். மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டும்தான் தேர்வா? எல்லோரும் சிரித்தனர். பின்பு கூறினேன். பாடப் பகுதியில் எளிய பகுதி எது, கடினமான பகுதி எது, பாடத்திட்டம் சிறப்பாக இருக்கிறதா, மாணவர்களின் திறனுக்கேற்ப பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவும் தேர்வு வைக்கப்படுகிறது என்றேன்.
அது மட்டுமா? ஒரு குறிப்பிட்ட பாடப் பகுதியில் ஒட்டுமொத்த மாணவர்களும் பதிலளிக்க சிரமப்படுகின்றனர் என்றால், அந்த பாடப்பகுதி மாணவர்களின் திறனுக்கேற்ப உள்ளதா என்பதை சரி பார்த்துக் கற்பித்தல் முறையில் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கண்டறிய தேர்வு உதவுகிறது. ஆசிரியர்களுக்கு என்னென்ன பயிற்சிகள், சட்டகங்கள் மற்றும் துணைக் கருவிகளை வழங்க வேண்டும் என்பனவற்றை முடிவு செய்யவும் தேர்வுகள் வைக்கப்படுகிறது.
பொறுப்பேற்பது யார்? - ஒரு மாணவர் ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்துவிட்டால், உடனே அவர் மீது குற்றம் சுமத்தி, அடி அடியென அடிப்பது நியாயமாகுமா? இதுநாள்வரை அந்த மாணவர் என்ன படிக்கிறார் என்பதையே கவனிக்காத பெற்றோருக்கு மதிப்பெண் பார்த்ததும் கோபம் பொங்கி வழிகிறது. மதிப்பெண்ணைப் பார்த்ததும், குழந்தையைத் தண்டிக்கின்றனர் என்றால், உண்மையில் பெற்றோர் தங்களையும் தண்டித்துக் கொள்ள வேண்டும். சமுதாயம் உள்பட எல்லோரையும் தண்டிக்க வேண்டும்.
தாய்-தந்தை இருவருக்கும் இடையில் உண்டாகும் பிரச்சினை குழந்தைகளை உளவியல் ரீதியாக தாக்கம் செலுத்தி, அவர்களின் கற்றல் அளவை மிகவும் பாதிக்கிறது. குழந்தைகள் செய்யும் சிறு சிறு செயல்களுக்கும் ஊக்கமும், பாராட்டுகளும் வழங்க வேண்டும். இதனால் குழந்தைகளின் மனத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளை மனம் விட்டுப் பேச வைக்க வேண்டும். அதற்கு நாமும் அவர்கள் முன் குழந்தையாக மாற வேண்டும்.
குழந்தை தேர்ச்சி பெறவில்லை என்றால் அதற்கு ஒட்டுமொத்த சமுதாயமும் காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நோக்கத்துக்கு முதலிடம் கேள்விகளும் தேர்வுகளும் மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்க அல்ல. மாணவர்களை குற்றவாளி ஆக்கவும் அல்ல.
இதனை நாம் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு திறன் அடைவு (Learning Achivement) மாணவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து செய்ய வேண்டியன குறித்து முடிவெடுக்க உதவும் ஆய்வு தான் தேர்வு. ஒரு குழந்தை ஒரு விஷயத்தைப் பெற்றோரிடமிருந்து மறைக்க முயல்கிறது என்றால், அதற்குக் காரணம் அந்த விஷயத்தைச் சொன்னால், பெற்றோர் நம்மை தண்டிப்பார்கள் என்ற எண்ணம் உண்டானதுதான்.
ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் கணித அடிப்படை திறன்களான கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகள் தலா ஐந்து வீதம் அளித்து அவர்களைச் செய்யச் சொல்லுங்கள். கூட்டல் கணக்குகளைவிட, கழித்தல் கணக்குகள் செய்தவர்கள் குறைவாக இருப்பர். கழித்தல் கணக்குகளை விட, பெருக்கல் கணக்குகளை செய்தவர்கள் குறைவாக இருப்பர். பெருக்கல் கணக்குகளை விட, வகுத்தல் கணக்குகள் செய்தவர்கள் குறைவாக இருப்பர். இது அந்த திறனைச் சார்ந்து எண்ணிக்கை மாறுபடுவதைக் காட்டுகிறது.
தொடர் பங்கிடல் மூலமும் விளையாட்டுகள் மூலமும் இக்கருத்து களைக் கற்பிக்கும்போது, மாணவர்கள் அந்த திறன்களில் பெறும் அடைவு மேலும் அதிகரிக்கிறது. தேசிய அடைவுத் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் பெற்றுள்ள திறன்கள் குறித்து தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற ஆய்வை நாம் பள்ளி அளவிலும், ஏன், வீட்டிலும் கூட நடத்தலாம். எப்போது நாம் ஆய்வை மேற்கொள்கிறோமோ, அப்போது நாம் தேர்வின் நோக்கத்தைப் புரிந்து கொண்டோம் என்பது உண்மையாகிறது.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, செங்கல்பட்டு மாவட்டம்.