சிறப்பு கட்டுரைகள்

கலை, இலக்கியம், விளையாட்டே மாணவர்களை செதுக்குகின்றன

சோ.இராமு

படிப்பது, மதிப்பெண் பெறுவது என்பதை தாண்டி ஒவ்வொரு மாணவ மாணவியரிடமும் ஏதாவது தனி திறமை இருக்கத்தான் செய்கிறது. யாரிடம் என்ன திறமை உள்ளது என்பதை ஆசிரியர்களும், பெற்றோரும் கண்டறிந்து அதில் அவர்கள் பயிற்சி பெற, சாதிக்க தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவை மாணவர்களை தூண்டி உற்சாகமடையச் செய்வதன் மூலம் அவர்களை செதுக்குகின்றன.

போட்டி நிறைந்த உலகில் மாணவர்களிடம் புதைந்துள்ள தனி திறமைகளை வெளிக்காட்ட இத்தகைய கலை, இலக்கிய, விளையாட்டுப் போட்டிகள் பெரிதும் உதவுகின்றன. மாணவர்களின் கலை ஆற்றலை வெளிக்கொணர நடத்தப்படும் போட்டிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

கல்வி சாரா செயல்பாடுகளை ஊக்குவிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் “கலை திருவிழா” போட்டிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவின் கலை, நுண் கலை, பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் என ஆறு பிரிவுகளின்கீழ் 148 தனிநபர் போட்டிகளும், 42 குழு போட்டிகள் என 190 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநில அளவில் வென்ற மாணவ மாணவிகளுக்கு "கலையரசன், கலையரசி" பட்டத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலா வாய்ப்பும் கிடைக்கிறது. மத்திய அரசு சார்பில் "கலாஉத்சவ்" (கலையருவி போட்டியும்) நடைபெறுகிறது.

கல்வி இணை செயல்பாடுகள்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மன்றங்களை ஊக்குவிக்க 6 முதல் 9 வகுப்புவரை பேச்சு, கட்டுரை, கவிதை, கதை, தனிநபர் நடிப்பு, குறும்படத் தயாரிப்பு, பொது அறிவுவினாடி-வினா, அறிவியல் கண்காட்சி, அறிவியல் செயல் திட்டம், திரை விமர்சனம், அறிவியல் நாடகம், திரைப்படம் இயக்குதல் பிரிவுகளில் ஒன்றிய அளவில் போட்டிகள் ஆகஸ்ட், நவம்பர், பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படுகிறது. மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் இலவச வெளிநாடு சுற்றுலா செல்கிறார்கள்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "உலக திறனாளர்களை கண்டறிதல் திட்டத்தின்" கீழ் மாணவர்களிடமுள்ள விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வந்து அதை மேலும் வளர்த்திட போட்டிகள் நடத்தப்படுகிறது.

குடியரசு தின விழா, பாரதியார் தின விழா, அண்ணா பிறந்தநாள் ஆகிய தினங்களில் சைக்கிள் போட்டி, முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மற்றும் கேரம், செஸ், நீச்சல் போட்டிகளும் உண்டு.

மாநில, தேசிய அளவில் சாதிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு உண்டு. 56 வகையான போட்டிகளில் திறமையை வெளிக்காட்டலாம். வீரர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

அரசு துறை போட்டிகள்: கல்வித்துறை மட்டுமின்றி பிற துறைகள், அமைப்புகள், மன்றங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளின்கீழ் போட்டிகளை நடத்தி ஊக்குவிக்கின்றன. ஆக.12 தேசிய நூலக தினத்தையொட்டி நூலகத்துறை சார்பில் போட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி உட்பட மறைந்த தமிழக முதல்வர்கள் குறித்த பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது.

அருங்காட்சியகம் சார்பில் ஓவியப்போட்டி, "நிதி சார்ந்த கல்வி" தொடர்பாக ரிசர்வ் வங்கி 8 - 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு வினாடி-வினா, "தேசிய இளைஞர் தினம்" விழாவையொட்டி ஜனவரியில் போட்டிகள், "வன உயிரின வார விழா" வை முன்னிட்டு அக்டோபர் முதல்வாரம் போட்டிகள், நவம்பர் மாதம் "கூட்டுறவு வார விழா" போட்டிகள், மத்திய எரிசக்தி அமைச்சகம் நடத்தும் அதிக பரிசுத்தொகை கொண்ட ஓவிய போட்டி, பெட்ரோலியத் துறை அமைச்சகம் நடத்தும் ஓவியம், கட்டுரை, வினாடி- வினா போட்டி; இந்திய தபால் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டி, நெய்வேலி என்எல்சி., நிறுவனம் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வார போட்டி, ஜனவரி 25 "தேசிய வாக்காளர் தினத்தில், போஸ்டர் தயாரிப்பு, வினாடி- வினா, ஸ்லோகன் எழுதும் போட்டிகளை தேர்தல்ஆணையம் நடத்துகிறது. மாற்று திறனாளிகள், என்.சி.சி. மாணவர்களுக்குப் போட்டிகள், பள்ளி ஆற்றல் மன்றம், சுற்றுச்சூழல், நுகர்வோர், மொழி, பிற பாடங்கள் சார்ந்த
மன்றங்களும் போட்டிகளை நடத்துகின்றன.

போட்டிக்கான அறிவிப்பை கவனித்து வருவதுடன், நம்மிடமுள்ள தனித்திறன் எது, சாதிப்பதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி தயாராக வேண்டும் ஆகியவற்றை தீர்மானித்து தன்னம்பிக்கையுடன் முயன்றால் ஜொலிக்கலாம்!

- கட்டுரையாளர்: ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சித்தையன் கோட்டை, ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்.

SCROLL FOR NEXT