சிறப்பு கட்டுரைகள்

செல்லக் குழந்தைகளே... துள்ளும் வசந்தங்களே...

முழுமதி மணியன்

ஒவ்வொரு மாணவனும் ஒரு புத்தகம், ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம் என்ற பார்வை மாற்றமே இன்றைய தேவை. பாட நூல்களை படிப்பவர்களே மாணவர்கள் என்ற நிலையில் இருந்து படிக்கின்ற ஒவ்வொரு மாணவரையும் ஒரு புத்தகமாக பார்க்கின்ற ஆசிரியரும், ஒவ்வொரு ஆசிரியரை ஒரு நூலகமாக கண்டு வியக்கின்ற மாணவரும், நாட்டின் இன்றைய தேவை.

பார்வைகள் மாறும்போது பகிர்தலும் மாறும். பகிர்வுகள் மாறும் போது பாதைகள் மாறும். பாதைகள் தெளிவாகும்போது புதிய பாதைகள் தெரிவாகும்.

புதிய பாதையும் புதிய பயணமும் விடியலை நம்மிடம் அழைத்து வரும். விடியலை நோக்கிய பயணம் என்பது நேற்று. விடியலையே நம்மிடம் ஈர்ப்பது என்பது இன்று. நேற்று என்பது மறைந்து போவது. நாளை என்பது கண்ணில் தெரிவது. இன்று மட்டுமே கையில் இருப்பது.

இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவது நிகழ்கால உழைப்பு மட்டுமே. நிகழ்கால சாதனைகளே எதிர்கால சரித்திரம் என்பதை இன்றைய மாணவர்களுக்கு உணர்த்த வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆசிரியர், பெற்றோர், சமுதாயம் என்ற மூவரின் கரங்களில் உள்ளது.

குழந்தைகள் அனைவரும் சிலஅடிப்படை திறன்களையும், அடிப்படையில் சில திறன்களையும் பெற்றே பிறக்கிறார்கள். பிறந்த குழந்தை தன் உணவை இனம் கண்டு எடுத்துக் கொள்வதே அவர்கள் திறன்களோடு பிறப்பதை நமக்கு உணர்த்தும். உணவுப் பொருளை தானே எடுத்துஅவர்கள் சாப்பிடுவதை பொறுமையோடு கவனியுங்கள்.

அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரமும் முறையும் அவர்களுக்கு அனுபவத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்து அவர்களது பசியை போக்கிவிடும். உதாரணமாக நிலக்கடலையை தோலுரிக்காது கொடுத்துப் பாருங்கள். அவர்கள் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் அதனை சாப்பிடுவதைக் கவனித்தால் அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலும் அறிவும் நமக்குப் புரியும்.

தோலுக்குள் நிலக்கடலை இருப்பதை அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? தோலை நீக்கி கடலையை சாப்பிடும் போது குழந்தையின் முகத்தைக் கவனித்தால் புரியும் அது வெற்றியின் ஆனந்தத்தையும் சேர்த்து ருசிப்பது.

அதற்கு மாறாக தோலுரித்த கடலையை கொடுக்கும்போது அதனை எந்த ஒரு ஈடுபாடும் இன்றி சாப்பிடுவதை நாம் காண முடியும். குழந்தைகளை அவர்களுக்கு உரியஇயல்போடு வளர விடாது, மனிதர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட அனைத்தையும் குழந்தைகளிடம் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உணவில் தொடங்கி கல்வி வரை அவர்களாக கற்றுக் கொள்ள வாய்ப்புகள் தருவதில்லை. அதற்கான பொறுமையும் நேரமும் பற்றாக்குறையாகவே உள்ளது. வேகமாகப் பயணிக்க வேண்டும்என்ற சிந்தனையே மேலோங்கி உள்ளது. காலத்தைப் பயன்படுத்துதல் என்ற நிலை மாறி நுகர்தல் என்றநிலை மேலோங்கி உள்ளது.

திறன்களோடு பிறந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் பாடங்களை முழுமையாக படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு கொடுப்பதும், அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் தான் முதற்கடமை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் மாணவர்கள் படித்ததில் இருந்து வினாக்களை தொடுப்பார்கள். புதிய கேள்விகள் பிறக்கும். கேள்வியின் பிறப்பில் தான் புதிய கருத்துக்கள் உருவாகும். புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்.

மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் மட்டுமே கல்வி அல்ல. அதையும் தாண்டி வாசித்தும் சுவாசித்தும் உணர்ந்தும் புரிந்து கொண்டும் உள்வாங்கவும் வெளிப்படுத்தவும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கொடுத்துப் பாருங்கள்.

மாணவ சமுதாயம் புதியஉலகத்தை உருவாக்கும். சிக்கல்களுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கவும் திறன் பெற்றவர்கள் நமது குழந்தைகள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்பளிப்போம். புதியதோர் உலகம் படைப் போம்.

- கட்டுரையாளர் கல்வியாளர் மயிலாடுதுறை

SCROLL FOR NEXT