சிறப்பு கட்டுரைகள்

முயற்சிக்க தவறலாமா!

காமாட்சி ஷியாம்சுந்தர்

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்”.

விதி (ஊழ்) நமக்கு உதவ முடியாமல் போனாலும் கூட, முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ப பலனைத் தரும்.

மாணவப் பருவத்தில் விடியற்காலையில் எழுந்து படிப்பது மிகவும் கடினமான செயலாக தோன்றினாலும் கூட, பொதுத்தேர்வு நெருங்குவதற்கு மிகக் குறுகிய காலமே உள்ள இக்காலக்கட்டத்தில் முயற்சி எடுத்து படித்தோமானால் தேர்வில் மதிப்பெண்களை அள்ளுவது நிச்சயம். நமது வீட்டில் உள்ள அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எழுந்து படிப்பது, மாணவர்களுக்கு சிரமமாக இருந்தாலும் கூட பெற்றோர்களின் ஊக்கத்தினால் மாணவர்களின் முயற்சி வெற்றி பெறும்.

அடுத்ததாக, உறவினர்களின் வீடுகளிலோ, அண்டை வீடுகளிலோ திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் தருணத்தில் தேர்வு நேரம் நெருங்கி வரும் இவ்வேளையில் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

அலைபேசி உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கணினி விளையாட்டுக்கள் போன்ற வற்றில் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் இருந்திட, மாணவ சமுதாயம் முயற்சி செய்தால் வெற்றி சிகரம் எட்டும் தூரம்தான்.

உடல் நலனில் கவனம், குறித்த நேரத்தில் உணவு, போதிய தூக்கம் இவற்றிலும் ஈடுபாடு கொண்டால் மூளையின் செயல் திறனை அதிகப்படுத்திட முடியும்; நினைவாற்றலும் மேம்படும். அன்றாட பழக்க வழக்கங்களை மேற்கூறியவாறு மேம்படுத்திக் கொள்ள முயன்றால் தேர்வில் மட்டுமல்ல, வாழ்விலும் வெற்றிதான்!

பெற்றோரின் பரிவான ஊக்குவிப்பு, ஆசிரியரின் அக்கறையான வழிகாட்டுதல் இவை அனைத்துடனும் மாணவரின் முயற்சி இணைந்திடுமாயின் வெற்றி சிகரத்தைப் பிடித்து விடலாம்.

“முயற்சிகள் தவறலாம்;

முயற்சிக்க தவறலாமா?”

மாணவக் கண்மணிகளே!...

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.

SCROLL FOR NEXT