சிறப்பு கட்டுரைகள்

இளம் மாணவர் விஞ்ஞானி திட்டம்: மாணவர்களின் உற்சாகமான கற்றல் அனுபவம்

ஸ்ரீ. பாக்யலஷ்மி ராம்குமார்

சென்னை: மருத்துவம், பொறியியல், குடிமைப்பணி உள்ளிட்டவை பற்றி மாணவர்கள் பலரும் விழிப்போடு இருக்கிறார்கள். ஆனால் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை மாணவர்கள் புத்தகத்தில் படிப்பதோடு மட்டுமே நின்றுவிடுகின்றனர்.

இதை மாற்றும் வகையில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை செயல்முறையிலும் அவர்களுக்கு புரியும் வகையிலும், அறிவியல் துறை சார்ந்த மாணவர்களின் விருப்பத்தை ஊக்குவிக்கும் வகையில் இளம் மாணவர் விஞ்ஞானி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான "இளம் மாணவர் விஞ்ஞானி திட்டம் 2024" தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் சென்னை கிறித்தவகல்லூரி (எம்.சி.சி) இணைந்து நடத்தின. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் சார்ந்த பயிற்சிகள் ஜனவரி 29 முதல் இன்று (பிப். 12) வரை வழங்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியை எம்.சி.சி கல்லூரி செயலாளர் பி.வில்சன் தொடங்கி வைத்தார். இதில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் எம்.சி.சி கல்லூரியிலேயே 15 நாட்கள் தங்கி பயிற்சி பெற்றனர்.

இந்த பயிற்சியை ஒருங்கிணைத்த எம்.சி.சி. கல்லூரியின் வேதியியல் உதவிப் பேராசிரியரான ஆர். விஜய்சாலமன் பேசியதிலிருந்து: இளம் மாணவர்விஞ்ஞானி திட்டம் சிந்தனையைத் தூண்டுவதாகவும், செழுமைப்படுத்துவதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், பொழுதுபோக்கின் வழி கற்றல்,அறிவை விரிவுபடுத்துவதாகவும் உள்ளது.

மாணவர்கள் காலையில் எழுந்துஇயற்கை சூழ்ந்த எம்.சி.சி கல்லூரிவளாகத்தில் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். வளாகத்தில் உள்ள மரங்களில் இருக்கும் பறவைகளை உற்று நோக்குவது. அது என்ன பறவை எங்கிருந்து வருகிறது என்று அன்றைய உரையாடல் தொடங்கும்.

மாலை வேளையில் ஒருநாள் பயிற்சியின் போது மாணவர்களை குழுவாக அமர்த்தி அவர்களை நாடகம் நடிக்க வைத்தோம். மாணவர்கள் தன்னை அறியாமல் ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசுவது, உருவ கேலி செய்வது, பாலின பாகுபாட்டோடு நடந்து கொள்வது உள்ளிட்டவற்றோடு நாடகம் நடித்தனர். அதை தவிர்த்து எப்படி நாடகம் நடத்த வேண்டும் என்று பயிற்சி வழங்கினோம்.

பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் பேசியதிலிருந்து, கார்லே மேல்நிலைப் பள்ளிமாணவன் ஆர். முருகா: சிறுவயதில் இருந்தே கவிதை எழுதுவது தான் எனக்கு பிடிக்கும். அறிவியல் மீது பெரிய விருப்பம் இல்லாமல் இருந்தேன். இங்கு வந்தபிறகு இயற்பியல் பாடத்தை ஆர்வமாக கற்ற பிறகு இயற்பியலில் புத்தகம் எழுதும் அளவிற்கு ஆசை வந்துவிட்டது. எழுதப்போகும் புத்தகத்திற்கு “பேஷன் சைன்ஸ் புக்” என்று இப்போதே பெயர் வைத்துவிட்டேன்.

திருப்போரூர் அரசுபள்ளி மாணவன் ரோஹித் நாராயணன்பகிர்ந்து கொண்டதாவது: வீட்டு உபயோகபொருட்களை எல்லாம்பயன்படுத்த தெரியும்.ஆனால் அதில் உள்ள இயற்பியலைபற்றி தெரியாது. இங்கு வந்த பிறகுதான் பார்க்கின்ற பொருட்களின் செயல்பாடுகளில் உள்ள இயற்பியலைகற்றுக்கொண்டேன். பென்டுலம்பற்றி பாடபுத்தகத்தில் படித்திருக்கிறேன் முதல் முறையாக செயல் முறையில் தெரிந்து கொண்டேன்.

கிறிஸ்ட் கிங் கேர்ள்ஸ் மேல் நிலைப்பள்ளி மாணவி பிரகாஷிதா: உயிரியல் பாடம் மிகவும் பிடித்திருந்தது. மீன்களை பற்றி பாடம் எடுத்து செயல்முறை விளக்கம் தந்தார். மீன்களின் பாலின அடையாளம் காணுதல், அதன் பண்பை அறிதல் என்று நிறைய தெரிந்து கொண்டேன். மனிதர்களின் ரத்த வகை, கைரேகை பற்றி தெரிந்து கொண்டேன்.

பவித்ரா, மிஷ்ரிமால் புக்ராஜ் போரா அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்: கணக்கு என்றாலே பிடிக்காத எனக்கு செயல்முறை விளக்கமாக "மேஜிக் ஸ்கொயர்ஸ் - ஓன் மேஜிக்ஸ்கொயர்களை வடிவமைத்தல்," இவற்றையெல்லாம் பயன்படுத்தி விளையாட்டாக கணிதத்தை சொல்லி கொடுத்தபோது மிகவும் பிடித்திருந்தது. இதன் மூலம் கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT