சிறப்பு கட்டுரைகள்

பூமியின் விசித்திரமான மர்மங்களை கண்டுபிடிக்கும் சிறுவன்

செய்திப்பிரிவு

புகழ்பெற்ற வங்க மொழி எழுத்தாளர் விபூதி பூஷண் பந்தோபாத்யாய் 1937-ல் எழுதிய சிறுவர் நாவல் ‘சந்திர மலை’. தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாடமி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. வங்காள சிறுவன் சங்கர் தான் கதாநாயகன். சங்கருக்கு வெளியுலகைப் பார்க்கவும் சாகச செயல்களில் ஈடுபடவும் மிகுந்த ஆர்வம்.

அவன் ஆப்பிரிக்காவில் வேலை பார்க்கப் போகிறான். அங்கு டீகோ ஆல்வாரெஸ் என்ற போர்த்துக்கீசிய சாகசப் பயணியை சந்திக்கிறான். இருவரும் சேர்ந்து ஒரு வைரச் சுரங்கத்தைத் தேடி ஆப்பிரிக்காவின் மலைகளிலும் காடுகளிலும் அலைகிறார்கள்.

அடடா என்ன அருமையான கதை ஆக்கம். மொழிபெயர்ப்பாளருக்கு நிச்சயம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். மொழி நடை அவ்வளவு இலகுவாக இருக்கிறது. எழுத்தாளர் விபூதிபூஷண் காடுகளை வர்ணிக்கும் போக்கு, மரங்கள் செடிகள் கொடிகள் விலங்குகள் இயற்கைச் சூழல்கள் என ஒவ்வொன்றையும் விவரிக்கும் பாங்கு நம்முடைய கரிசல் காட்டுத் தந்தை கி ராவை நினைவுபடுத்துகிறது.

ஆப்பிரிக்காவின் பூகோள அமைப்பு, ஆப்பிரிக்கக் காடுகளின் தன்மை, அங்குள்ள மரங்கள், விலங்குகள் என ஒவ்வொன்றையும் எழுத்தாளர் விவரிக்கும்போது இவர் என்ன ஒரு சாகசப் பயணியா என்ற கேள்வி மனதிற்குள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

திகிலூட்டும் அனுபவம்: உகாண்டா முழுக்க சிங்கங்களின் ஆட்சி கோலோச்சி நிற்கிறது என்பதை படிக்கும் பொழுதும் கதையின் நாயகன் சங்கர் சிங்கத்திடம் இருந்து தப்பிக்கும் பொழுதும் ஒரு நடுக்கம் ஏற்படத்தான் செய்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை நான். திரையரங்கில் சினிமா பார்க்கின்ற நேரம். அப்படியே ஒரு திகில் படம் பார்த்தது போன்ற உணர்வு.

காடுகளில் கதாநாயகன் சங்கர் சிங்கத்திடம் இருந்து தப்பிக்கிறான். மலை பாம்பிடம் இருந்து தப்பிக்கிறான். ஓநாய்களிடமிருந்து தப்பிக்கிறான். காடுகளினூடே இருக்கின்ற மர்மமான குகைகளில் மாட்டிக் கொள்ளும் சங்கர் அதிலிருந்தும் தப்பித்து வெளியே வருகிறான். மிக உயரமான மலைச்சரிவுகள், பாலைவனங்கள், சமவெளிகள் என்று ஒவ்வொன்றையும் கடந்து வைரச் சுரங்கத்தை தேடும் பொழுது அவன் எதிர்கொண்ட அனுபவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இதற்கிடையே காட்டினுள் ஒரு எரிமலை வெடித்து சிதறுகிறது. அதிலிருந்தும் சங்கரும் டிகோ ஆல்வாரெசும் தப்பிக்கின்றனர். இவை அனைத்திலும் எழுத்தாளர் நமக்கு பல்வேறு விதமான படிப்பினைகளைத் தந்து கொண்டே இருக்கிறார்.

தன்னந்தனியாக காட்டில்: அடர்ந்த காடுகளுக்கிடையே அவ்வப்போது தென்படும் காட்டுமிராண்டிகள், அவர்களின் மொழியில்பேசிய டிகோ ஆல்வாரஸ், காட்டுமிராண்டிகளைக் கையாளும் விதம் வியக்க வைக்கிறது. வைரத்தை தேடும் பயணத்தின் இடையே டிகோ ஆல்வாரெஸ் இறந்து விடுகிறார். தன்னந்தனியாக மாட்டிக் கொண்ட சங்கர் பயணத்தை தொடர்கிறான்.

மிகப்பெரிய பாலைவனத்தை சங்கர் எப்படி கடந்து நாகரிக மக்கள் வசிக்கும் இடத்தைச் சென்றடைகிறான் என்பது மற்றுமொரு சுவாரசியமான நிகழ்வு. 30 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன ஒரு சாகசப் பயணியின் கடிதம் சங்கருக்கு கிடைக்கிறது. அதிலிருந்து தான் வைரச் சுரங்கத்தை ஏற்கெனவே கண்டுபிடித்து விட்டதையும் அது வைரம்தான் என்று தெரியாமல் அதைத் தவற விட்டதையும் புரிந்து கொள்கிறான்.

ஆனாலும் உடல்நிலை காரணமாக அவன் திரும்பி செல்ல விரும்பவில்லை. தேசிய பூங்காவை அளக்கச் சென்ற குழுவினர் உயிர் போய்விடும் தருவாயில் சங்கரை கண்டுபிடித்துக் காப்பாற்றி அவன் கனவு கண்ட நகரமான சாலிஸ்பரிக்கு கொண்டு செல்கின்றனர்.

தான் மேற்கொண்ட சாகச பயணத்தால் சாலிஸ்பரியில் ஒரு புகழ்பெற்றமனிதனாக ஆகிவிடுகிறான் சங்கர்.அதன் பிறகு அங்கிருந்து தாய் தேசத்தை நோக்கிப் பயணிக்கிறான். சிறிது காலம் வங்கத்தில் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் வைரத்தைநோக்கிச் செல்கிறான். சங்கர் போன்ற ஒரு சிலரால் தான் இந்த பூமியின் விசித்திரமான மர்மங்கள் பல மக்களுக்குத் தெரிய வருகின்றது.

- கு. பச்சையம்மாள்; கட்டுரையாளர்: ஆசிரியர், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏம்பலம், புதுச்சேரி.

SCROLL FOR NEXT