எங்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள கண்மாய்க் கரையில் ஆலமரம் ஒன்று கிளைகளாலும், விழுதுகளாலும் விரிந்து பரந்து, பலவகையான பறவைகளுக்கு வாடகை பெறாத வீடாக இருக்கிறது. கண்மாய் முழுமையும் நீர் நிரம்பியுள்ளது. புதிதாகப் பறவைகள் ஏதும் வந்துள்ளனவா எனப் பார்ப்போம் என கையில் கேமராவுடன் கரைக்கு நடந்தேன்.
ஆலமரக் கிளையில் பறக்க முடியாத குஞ்சுக் குயில் ஒன்று இரைக்காகத் தன் வாயைத் திறக்க, அதன் அருகில் மைனா ஒன்று தன் வாயினுள் இருந்த பூச்சி ஒன்றை அதன் தொண்டைப் பகுதிவரை கொண்டுசென்று ஊட்டியது.
பறவை ஊட்டிய பாடம்: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழி என் நினைவிற்கு வந்தது. கருப்பு வெள்ளைப் புள்ளிகளோடு பறக்க முடியாமல் மைனாவிடம் இரை வாங்கிய அந்தப் பெண் குஞ்சுக்குயில் எனக்குள் பல சிந்தனைகளை ஏற்படுத்தியது.
அந்தக் கண்மாயை நம்பி பல நூறு ஏக்கர் வயல்கள். தண்ணீர் பாய்ச்சப்பட்ட வயல் வெளிகளில் கொக்குகளும், பல வகையான குருவிகளும் எந்த விதமான சண்டைகளும் இல்லாமல் இரைதேடின. வயலைப் பண்படுத்தி, நம் வாழ்க்கைக்கான உணவைத் தரும் வள்ளல் பெருமக்களான மருதநில மக்கள். எங்கெங்கோ இருந்து பறந்து வந்த பறவை விருந்தினர்களை அலைக்கரங்களால் தாலாட்டி மகிழ்விக்கும் கண்மாய். வந்திருந்த நீர்ப்பறவைகளைப் படம் பிடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் படத்தைக் காட்டி இதில் உள்ள பறவைகளின் பெயர் என்ன என்றேன். ‘மைனா' எனப் பார்த்த உடன் சொல்லிவிட்டனர் அனைவரும். இன்னொரு பறவையின் பெயரை கொஞ்சம் யோசித்தனர். மருதுபாண்டி என்ற மாணவன் மைனாவும் குயிலும் ஐயா என்றான்.
உடனே சிலர் இது குயில் இல்லை. குயில் கருப்பாக இருக்கும் , இது கருப்பு, வெள்ளையாக இருக்கிறதே என்றனர். நீங்கள் சொல்லும் கருப்பு நிறத்தில் இருப்பது சேவல் (ஆண் ) குயில். கருப்பு வெள்ளைப் புள்ளிகளுடன் இருப்பது பெட்டைக்குயில். குயில்களில் பலவகைகள் மாங்குயில், பூங்குயில், கொண்டைக்குயில், அக்காகுயில் இதுவும் குயில்தான் என்றேன்.
மைனா மற்றும் பெண்குயில் உள்ள படத்தைக் காட்டி, மைனா என்ன செய்கிறது எனக்கேட்க , குயிலிற்கு உணவு கொடுக்குது ஐயா என்றனர். குயிலின் அம்மா, அப்பா இல்லையா? ஏன் மைனா உணவு கொடுக்குது ? என்றான் ஒரு மாணவன். குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. அது தன் முட்டையை காக்காவின் கூட்டில் இடும். குஞ்சு வளர்ந்ததும் காக்கா, இது தன் பிள்ளை இல்லை என்று தெரிந்ததும் விரட்டிவிடும். ஆதரவின்றி விடப்பட்ட அந்த குயிலிற்கு இந்த மைனா இரை ஊட்டுகிறது . இதுதான் பறவை நேயம். இன்னொரு மாணவன், “ஒரு வீடியோல தாய் நாயிடம் பூனைக்குட்டிகள் பால் குடிப்பதைப் பார்த்தேன் ஐயா என்று சொல்ல, ஒவ்வொரு மாணவரும் இதுபோல சொல்லத் தொடங்கினர்.
பகிர்ந்து உண்ணுதல்: படிக்கும் பருவத்தில் பள்ளிக்கூடம் உங்களுக்கு கல்வியை மட்டுமல்ல மனிதத்தையும் கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் பிறருக்குச் செய்த உதவிகள் என்ன? சூர்யா என்ற மாணவன் ‘பகுத்துண்டு ' எனத்தொடங்க கார்த்தி் குறளைச் சொல்லி முடித்தான்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
மாணவர்கள் அனைவரும் கரவொலிஎழுப்பி வாழ்த்தினார்கள். ‘‘நாங்கள் மதியம் வகுப்பில் அமர்ந்து சாப்பிடும்போது உணவைப் பகிர்ந்து கொள்வோம் ஐயா. சாப்பாடு கொண்டுவராத , தட்டுக் கொண்டுவராமல் யாராவது வந்தால் எங்கள் உணவைப் பகிர்ந்து உண்போம் என்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
படிக்கும் வயதில் பகிர்தல் என்ற நல்ல பழக்கம் இன்றைய மாணவர் மனங்களில் இயல்பாகவே நிறைந்துள்ளது. மனிதம் பூத்துக் குலுங்கும் மகத்தான இடமாகப் பள்ளி திகழ்கிறது. பரந்து விரிந்த இந்தப் பூமிப்பந்தில் பாடம் கற்பது என்பது பள்ளியின் வகுப்பறையில் மட்டுமல்ல, பறவைகளிடமும் இருக்கிறது.
- கட்டுரையாளர்: தமிழாசிரியர், அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி, இளமனூர், மதுரை.