கடந்த வருடம் வியட்நாம் கம்போடியா பயணத்தில் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியது, மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது கம்போடியாவின் மிதக்கும் நகரம். கம்போடியா சென்று அங்கூர்வாட் கோயில்களை சுற்றிப்பார்த்து முடித்தாலும் மிதக்கும் நகரம் கற்பனையில் அலையடித்துக் கொண்டே இருந்தது. வாசிப்பு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு பயணமும் முக்கியம். நமக்கு கிடைத்திருக்கும் அனைத்தும் அற்புதம்.
அதை இறுகப்பற்றி வாழ்வோம் என்ற ஒரு பெரும் நம்பிக்கையைக் கொடுத்த இடம். தோன்லே சாப் ஏரி, 2200 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் வசிக்கும் இடம். உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் மிதந்தபடி இருக்கின்றன. பள்ளிகள், மருத்துவமனைகள், கோவில்கள், கடைகள், பெட்ரோல் பங்குகள் என்றுஅனைத்துமே மிதந்தபடி. மிதவைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்டது.
தண்ணீர் அதிகரித்தால் வீடு உயர்ந்துவிடும். தண்ணீர்குறைந்தால் வீடு கீழே சென்றுவிடும். அதைப் பார்த்தபோது அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. மழைக்காலத்திற்குப் பிறகு மிக்காய் என்ற ஆற்றுக்கு இந்த நீர் சென்று விடுகின்றன.
சரி! நிலம் இருக்க நீரில் இவர்கள் ஏன் வாழ வேண்டும் என்ற ஒரு மாபெரும் கேள்விக்கு விடையாக மீன்கள் இருந்தன. இந்த நீருக்குள் இருக்கும் மீன்கள் மிகவும் சுவையானவைகளாம். அதிக விலைக்கு விற்பார்களாம்.
அவற்றைப் பிடித்து விற்பனை செய்வதற்காக அங்கு வாழ ஆரம்பித்த மக்களின் எண்ணிக்கையும், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்ததால் நகரம் விரிவடைந்துள்ளது. படகில் ஏறி அமர்ந்தது முதல் வந்து இறங்கும் வரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இடம் இதுதான்.
மிதக்கும் வீடுகளைப் பார்த்துக் கொண்டே சென்று ஒரு இடத்தில் நிறுத்தி அங்கிருந்து இன்னொரு படகில் ஏறினோம். அலையாத்திக் காடுகளுக்குள் மீண்டும் படகில். தண்ணீருக்குள் பெரிய பெரிய மரங்கள். இடையில் சிறு சிறு கடைகள். சுற்றுலாப் பயணிகளையும், மீன்களையும் நம்பியிருக்கிறது இங்குள்ள மக்களின் வாழ்க்கை.
மிதக்கும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக அங்கே விற்பனை செய்த நோட்டுகள், பேனாக்களை வாங்கிக் கொண்டோம். அங்கிருந்து கிளம்பி வரும் வழியில் அங்குள்ள பள்ளியில் நுழைந்தோம். குழந்தைகளுக்கு நோட்டு, பேனாவை பரிசளித்துவிட்டு அவர்களோடு கதையாடிய தருணம் மறக்க முடியாது. நாங்கள் சென்ற ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை.
அங்கு இருந்த படங்களைக் காட்டி கதை சொன்னேன். கதை எந்த மொழியில் இருந்தால் என்ன உடல் அசைவுகளை வைத்து ஓரளவேனும் குழந்தைகள் கதையை உணர்ந்து கேட்டு ரசித்தார்கள். முதல் முறையாக தமிழும் ஆங்கிலமும் தெரியாத குழந்தைகளுக்குக் கதை சொன்ன நேரம் நினைத்தால் என்றும் மனதில் பரவசத்தைக் கொடுக்கும்.
அவர்களுடைய மகிழ்ச்சி, அந்தக் கொண்டாட்ட சூழல் எங்களையும் தொற்றிக் கொண்டது. அன்பைப் போல கதைகளுக்கும் மொழி கிடையாது என்பதை உணர்ந்த தருணம்.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தாண்டி பறந்து சென்று மிதந்து கொண்டே கதை சொல்லிய தருணம் மறக்க முடியாது. சின்ன சின்ன பிரச்சினைகளில் துவண்டு போகும் நேரங்களில் இந்த அலையாத்தி மக்களின் வாழ்க்கை நம்பிக்கை கொடுக்கிறது. நாம் வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு அருமையானது என்பதை இதுபோன்ற பயணங்கள்தான் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன.
சுற்றுலா என்பது சுற்றிப் பார்க்க மட்டுமல்ல. நம் வாழ்க்கையை அணுகும் முறையில் புரிதலைஏற்படுத்தவும்தான். கம்போடியா சென்றால் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடம் மிதக்கும் நகரம்.
- கட்டுரையாளர் எழுத்தாளர், கதை சொல்லி, (மந்திரக் கிலுகிலுப்பை, கடலுக்கு அடியில் மர்மம் உள்ளிட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்) ஈரோடு; sarithasanju08@gmail.com