சிறப்பு கட்டுரைகள்

மாணவனிடம் மன்னிப்பு கேட்ட தலைமை ஆசிரியர்

கலாவல்லி அருள்

பணியில் சேர்ந்த முதல்நாள் கடைசி பாட வேளையின் போது, தலைமை ஆசிரியர் என்கிற முறையில் பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, உரை நிகழ்த்தினேன். மாணவர்கள் கல்வி கற்பதுடன், ஒழுக்கத்தோடு இருப்பதும் முக்கியம் என்று கூறி, நற்பண்புகள் பற்றிய ஒரு பட்டியலையும் வெளியிட்டேன். அப்போது 12-ம் வகுப்பு மாணவன் ஒருவன் ஏதோ கிண்டலாக கூறிசிரித்தான். அவனை அருகில் வரவழைத்து, எல்லோர் முன்னிலை யிலும், அவன் பெயரைக் கேட்டேன். அவன் தனது பெயரைச் சொல்லாமல், “நற்பண்புன்னு சொல்றீங்களே, இப்போ எல்லோர் எதிரிலும் என்னைக் கூப்பிட்டு நிக்க வைக்கறீங்களே, இதுமட்டும் சரியா டீச்சர்?” என்று கேட்டான்.

அவனதுவகுப்பாசிரியர் வேகமாக வந்து, “தலைமை ஆசிரியர் உரை நிகழ்த்தும் போது குறுக்கீடு செய்ததுடன் கிண்டல் செய்ததும் தவறு, அதனால அவங்ககிட்ட மன்னிப்பு கேளு” என்று கூறினார். “மன்னிப்புலாம் கேக்க முடியாது சார்” என்று கூறிவிட்டு வேகமாக வகுப்பறைக்கு சென்றுவிட்டான்.

சுயமரியாதை: “எப்போதுமே அவன் இப்படித்தான் இருப்பான் மேடம், எல்லா ஆசிரியர்களிடமும் இவ்வாறுதான் பேசுவான், எவ்வளவு சொன்னாலும் மாற மாட்டான், இவனைப் போல இன்னும் சில மாணவர்கள் இருக் கிறார்கள், இவர்களை திருத்தவே முடியாது மேடம்” என்று அவர் சலிப்புடன் கூறினார்.

இவர்களைப் போன்றவர்களை திருத்தவே முடியாது என்று கூறியது, என் மனதில் உழன்று கொண்டே இருந்தது. செய்த தவறை உணராமல், மன்னிப்பும் கேட்காமல் இருப்பது நியாயமல்ல என்று தோன்றியது. மன்னிப்பு கேட்கும் நற்பழக்கத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்று சிந்தித்தேன்.

மாற்றம் நம்மிடமிருந்து... மற்றவரிடம் ஒரு நற்பழக்கத்தை உருவாக்க வேண்டுமெனில், முதலில் அந்த நற்பழக்கம் நம்மிடம் உள்ளது என்பதை அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். எனவே, ஏதேனும் ஒரு காரணத்திற்காக நான் மன்னிப்பு கேட்டு, அதன்மூலம் இந்த நல்ல பழக்கத்தை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

மறுநாள் காலை இறை வணக்கக் கூட்டத்தின்போது, “மன்னிப்பு கேட்பது என்பது மிக நல்ல பண்பு. நாம் செய்த செயல் அல்லது சொல் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்க கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய நாள் ‘மன்னிப்பு கோரும் நாள்’.

உங்கள் பெற்றோர், உறவினர், ஆசிரியர்கள், நண்பர்கள் என யார் மனதை நீங்கள் புண்படுத்தி இருந்தாலும், அதனை என்னிடம் பகிர்ந்து கொண்டு, மானசீகமாக அவர்களிடம் மன்னிப்பு கேட்கலாம்” என்று கூறிவிட்டு, நேற்று பேசிய மாணவனை அழைத்து, “நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், நீ கிண்டலாக பேசி யிருந்த போதிலும், அனைவர் முன்னிலையிலும் உன்னை நான் அழைத்ததால் நீ மனம் வருந்தியதாக தெரிவித்தாய். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியவுடன் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் திகைத்தனர்.

அந்த மாணவனிடம் மன்னிப்பு கேட்பதால் எனக்கொன்றும் அவமானமில்லை. ஆனால், என் செயல் பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாய் அமைந்தது. நான் மன்னிப்பு கேட்டதைப் பார்த்த அந்த மாணவன், “டீச்சர், நான் தான் தப்பு செய்தேன், என்னை மன்னிச்சிடுங்க” என்றான். அன்று மதிய இடைவேளையில் பல மாணவர்கள் பிறர் மனதை புண்படுத்தியதாக கூறி, மானசீக மன்னிப்பு கேட்டனர்.

ஆம், எந்த செயலை செய்ய நினைத்தாலும், அதற்கு நாமேமுன்னுதாரணமாய் இருக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்போம்.

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சிங்காடிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

SCROLL FOR NEXT