சிறப்பு கட்டுரைகள்

அன்பால் இறுகப் பற்றுவோம்

செந்தில் மெய்யநாதன்

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்களுக்கு இடையேயான புரிதல் மிகவும் குறைந்துள்ளது. இதற்கு முதல் காரணம் பெற்றோர் தனது குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான அன்பை கண்மூடித்தனமாகக் காட்டுவது. இச்செயல் அறிவு கண்களைக் குருடாக மாற்றும் சக்தி படைத்தது. அன்பு எப்போதும் அளவுச்சாப்பாடு போன்றோ அல்லது ஒரு சரிவிகித உணவைப் போன்றோ இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகித உணவில் உள்ளது போலவே நீங்கள் காட்டும் அன்பில் கருணை, கனிவு நம்பகத்தன்மை, நேர் மறை எண்ணங்கள் மற்றும் சுதந்திர உணர்வின் வெளிப்பாடு இப்படி மன ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து கூறுகளும் அடங்கியதாக இருக்க வேண்டும். இத்தனை கூறுகள் கொண்ட அன்பினை பெற்றோர் தனது குழந்தைகளிடமும் ஆசிரியர்கள் தனது மாணவர் களிடமும் காட்டும்போது குழந்தைகளின் மனம் மிகவும் வலிமை உடையதாக மாற்றம் அடையும். உடல் பலத்தை விட மனவலிமை என்பது இந்த வளரிளம் பருவத்தில் மிகவும் முக்கியமான ஒன் றாகும்.

மன வலிமையை வளர்க்க... மன வலிமையை வளர்க்க ஏற்ற வயதுஇந்த பள்ளி பருவ வயதுதான். இந்தவயதிற்குள் அவர்களுடைய மனதினைநல்ல வளமுள்ளதாக மாற்றிவிட்டோ மானால் எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் எதிர்காலத்தில் அவர்களால் எதிர்கொள்ள முடியும். உடலை வளப்படுத்துவது என்பது கொஞ்சம் மிகவும் எளிதான காரியம் தான். அதற்கான வழிமுறைகளில் பெரியதான நடைமுறைச் சிக்கல்கள் இருந்துவிடுவதில்லை. எனவே பெற்றோர் ஆசிரியர் இருவரும் இணைந்து குழந்தை களின் மனவலிமையை வளப்படுத்துவதில் வல்லமை படைத்தவர்களாக உருமாற்றம் பெற வேண்டியதே தற்காலத்தேவை ஆகும். இதற்கு மிக அவசியமான ஒன்று, முதலில் ஆசிரியர்கள் அதிகமான புத்தகவாசிப்பில் ஈடுபட வேண்டும். அதன் மூலமாக சமூக விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். மேலும் குழந்தை களுடைய பின்புலத்தைத் தெரிந்து இருத்தல் மிக அவசியம்.

ஒப்பீடு கூடாது: பெற்றோர் தனது குழந்தையை பிறகுழந்தைகளுடன் ஒப்பிடாமல், நடப்புவாழ்க்கை முறை, கல்வியின் முக்கியத் துவம், ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள், சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் இவற்றை நன்றாக விளக்கி உட்கிரகிக்கச் செய்தல் வேண்டும். குழந்தைகள் அவர்கள் விருப்பங்களைச் சொல்லும்போதோ, மனதில் உள்ளதை சொல்ல நினைக்கும்போதோ அதற்கான இடம் கொடுங்கள். அதுவே அவர்கள் யார்? என்பதை உங்கள்முன் கொண்டு வந்து நிறுத்த பெரும் உதவியாக இருக்கும். அதோடு அல்லாமல் நீங்களும் அவர்களை எளிமையாக அடையாளம் கண்டுவிடலாம். பெற்றோர் குழந்தைகளுக்கு கொடுக் கும் பாதுகாப்பு உணர்வு என்பது மிக மென்மையானதாக இருக்க வேண்டும்.

எல்லோர் வீட்டிலும் கொழுக்கட்டை செய்யும் பொழுது ஈர மாவினை தேவையானவைகளுடன் கலந்து எப்படி பதமாக இறுக்கி பிடித்து குறித்த வடிவத்திற்குக் கொண்டு வருகிறோமோ? குழந்தைகளைப் பேணுவதும் அது போலவே இருக்க வேண்டும். கொஞ்சம் அழுத்தி பிடித்தாலும் நம் விரல்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் மாவு எப்படி வெளிப்பட்டு சரியான உருவம் கிடைக்காமல் போய்விடுமோ? அதைப் போலவே நாம் நம் குழந்தைகளை இறுக்கி பிடித்தோமேயானால் விரல்களுக்கிடையே மாவு நழுவியதைப் போல அவர்களும் நம்மை விட்டு தொலைதூரம் செல்ல நேரலாம்.

அதனால் தான் சொல்கிறேன் இறுக்கி பிடிக்காமல் இறுகப் பற்றுங்கள். இறுகப்பற்றுதல் என்பது எத்தனை வகை வேதிப்பிணைப்புகளையும் விட ஆற்றல் மிகுந்த ஒரு நிலையான பிணைப்பாகும். குழந்தைகளின் சிறு வயதில் இவர் தான் பாட்டி, இவர்தான் தாத்தா என்று ஆட்களைக்காட்டி வளர்த்த அதே பெற்றோரின் கரங்கள், குழந்தைகளின் வாழ்வின் வழிகாட்டும் கரங்களாகவும் மாறுமேயானால் அது உங்கள் வாழ்வின் எவ்வளவு பெரிய வரம். வாருங்கள் இறுக்கத்தை தளர்த்தி நம் குழந்தைகளை இறுகப் பற்றுவோம் அன்பால்...

- கட்டுரையாளர் முதுகலை ஆசிரியர், எஸ்.ஆர்.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி மாவட்டம்

SCROLL FOR NEXT